TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 10th & 11th April 2024

1. பாரிசில் நடைபெறவுள்ள 33ஆவது கோடைகால ஒலிம்பிக்–2024இல் நடுவர்மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. பில்கிஸ் மிர்

ஆ. மதுமிதா பிஷ்ட்

இ. இராஜ்யலட்சுமி சிங்

ஈ. சானியா மிர்சா

  • நீர் விளையாட்டு ஊக்குவிப்பாளரும் தடகள வீரருமான ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர், பாரிஸில் நடைபெறவுள்ள 33ஆவது கோடைகால ஒலிம்பிக்கில் நடுவர்மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட அவர், ஜூலை.26 முதல் ஆக.11 வரை நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றவுள்ளார். 1998ஆம் ஆண்டு படகோட்டியாக தனது பயணத்தைத் தொடங்கிய பில்கிஸ் மிரின் கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது.

2. அண்மையில், இந்திய கடலோர காவல்படை நீர்வாழ் மையம் திறக்கப்பட்ட இடம் எது?

அ. தூத்துக்குடி, தமிழ்நாடு

ஆ. சென்னை, தமிழ்நாடு

இ. இராமேசுவரம், தமிழ்நாடு

ஈ. தேங்காய்ப்பட்டினம், தமிழ்நாடு

  • இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் இராகேஷ் பால், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் அருகே உள்ள ICGS மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை நீர்வாழ் மையத்தை 2024 ஏப்.06 அன்று திறந்து வைத்தார். பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ், கடந்த 1977ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய கடலோர காவல்படையானது கடத்தலை எதிர்த்துப் போராடுவதையும் கடல்வளங்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது. கடந்த 1978ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயால் முறையாக இது தொடங்கப்பட்டது.

3. Lunar Polar Exploration Mission (LUPEX) என்பது கீழ்காணும் எந்த இரண்டு விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாகும்?

அ. ISRO & JAXA

ஆ. NASA & ISRO

இ. CNSA & ROSCOSMOS

ஈ. ESA & NASA

  • Lunar Polar Exploration Mission (LUPEX) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமை (JAXA) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு திட்டமாகும். இது நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்கான கூட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஏவுகலம் மற்றும் தரையூர்தியை JAXAஉம் தரையிறங்கியை ISROஉம் பங்களிக்கும். நிலவின் மணலிலுள்ள நீரின் அளவை அளவிடுவதற்கும், துளையிடுதல் மற்றும் மாதிரி எடுப்பதற்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் தரையூர்தி, நிலவின் தென் துருவப் பகுதிகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை மனித குலத்திற்கு அளிக்கும்.

4. அண்மையில், இந்திய கடலோர காவல்படையின் எந்தக் கப்பல் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு 27 வங்கதேச மீனவர்களை பாதுகாப்பாக மீட்டது?

அ. விக்ரம்

ஆ. அமோக்

இ. சாகர்

ஈ. தல்வார்

  • இந்திய கடலோர காவல்படையின் துரித நடவடிக்கையால் இந்திய கடல் பகுதியில் சாகர்-II என்ற மீன்பிடி படகில் சிக்கித்தவித்த 27 வங்கதேச மீனவர்கள் மீட்கப்பட்டனர். ரோந்துக்கப்பலான, ‘அமோக்’ 2024 ஏப்.04 அன்று இந்தியா – வங்காளதேசம் கடல் எல்லைக்கோட்டுப் பகுதியில் பதற்றமான கப்பலைக் கண்டறிந்தது. விசாரணையில் அந்தக் கப்பலின் செலுத்து பொறி 2 நாட்களாக பழுதடைந்தது தெரியவந்தது. அதனையடுத்து உடனடி நடவடிக்கையானது இந்திய கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

5. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2024-25 நிதியாண்டில் நுகர்வோர் விலைக்குறியீட்டு பணவீக்கத்தின் சதவீதம் என்னவாக இருக்கும்?

அ. 3.2%

ஆ. 4.5%

இ. 5.1%

ஈ. 5.5%

  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணவியல் கொள்கைக் குழுவிற்கு தலைமைதாங்கி, 7ஆவது முறையாக ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 6.5%ஆக தக்கவைத்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஏழு சதவீதம் வளர்ச்சியடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் விலைக்குறியீட்டுப் பணவீக்கமானது, 4.5% அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. அண்மையில், “ஆசியா மற்றும் பசிபிக் – 2024 பொருளாதார மற்றும் சமூக ஆய்வு” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. ஆசியா & பசிபிக் பகுதிக்கான ஐநா பொருளாதார & சமூக ஆணையம் (UNESCAP)

இ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP)

ஈ. உலக சுகாதார அமைப்பு

  • UNESCAPஆல் வெளியிடப்பட்ட, “ஆசியா மற்றும் பசிபிக் – 2024 பொருளாதார மற்றும் சமூக ஆய்வு” என்ற தலைப்பிலான அறிக்கையானது அப்பிராந்தியத்தின் பொருளாதார போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு முதன்மையான வெளியீடாகும். 1947இல் நிறுவப்பட்ட UNESCAP, சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு தளமாகச் செயல்படுகிறது. இந்தியா உட்பட 53 உறுப்பு நாடுகள் மற்றும் 9 இணை உறுப்பினர்களைக் கொண்ட இவ்வமைப்பு, கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்கூறியுள்ளது.

7. அண்மையில், தொலைதொடர்பு செயலரால் கீழ்காணும் எந்த IITஇல், “100 5G ஆய்வகங்களுக்கான பரிசோதனை உரிமத்தொகுதி” தொடங்கி வைக்கப்பட்டது?

அ. ஐஐடி மும்பை

ஆ. ஐஐடி சென்னை

இ. ஐஐடி ஐதராபாத்

ஈ. ஐஐடி கான்பூர்

  • இந்திய கல்வி நிறுவனங்களில் 5G ஆய்வகங்களுக்கான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக ஐஐடி சென்னையில் நடந்த ஒரு பயிலரங்கின்போது, டாக்டர் நீரஜ் மிட்டல், செயலர் (தொலைதொடர்பு), “100 ஐந்தாம் (5G) தலைமுறை ஆய்வகங்களுக்கான சோதனை உரிமத்தொகுதி” ஒன்றைத் திறந்துவைத்தார். இந்த முயற்சியானது உரிமம் பெறுதலை எளிதாக்குவது மற்றும் 5G துறையில் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. விண்வெளியில் உள்ள ஓர் இரட்டை மடல்கொண்ட வான்பொருளான, ‘அர்ரோகோத்’, சூரிய மண்டலத்தின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?

அ. குய்ப்பர் பட்டை

ஆ. ஊர்த் மேகம்

இ. வெளிப்புற சூரியக்குடும்பம்

ஈ. உட்புற சூரியக்குடும்பம்

  • குய்ப்பர் பட்டையில் உள்ள ஒரு வான்பொருளான அர்ரோகோத்தின் பனிக்கருவத்தைத் தெளிவுபடுத்தும் மாதிரியை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர்; இதற்கு போஹாடன் மொழியில், ‘ஆகாயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ஹப்பிள்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட, ‘அர்ரோகோத்’ என்பது மனிதர்களால் மிகத்தொலைவில் கண்டறியப்பட்ட ஒரு பனிப்பொருளாகும். இது பழங்காலத்திய வாயுவை பனிப்படிவமாக வைத்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. எட்ஜ்வொர்த்-குய்ப்பர் பட்டை என்றும் அழைக்கப்படும் குய்ப்பர் பட்டையானது நெப்டியூனுக்கப்பால் சுற்றும் பனிப் பொருள்களை உள்ளடக்கியதாகும். 1950களில் அதன் இருப்பைக் கருதி அறிவித்த வானியலாளர் ஜெரார்ட் குய்ப்பரின் பெயரால் அது அழைக்கப்படுகிறது.

9. மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, எந்த ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது?

அ. 2024

ஆ. 2025

இ. 2030

ஈ. 2050

  • புதிய உர ஆலைகள்மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதால், 2025-க்குள் யூரியா இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது. தற்போது நாட்டில் ஓராண்டுக்குத் தேவைப்படும் யூரியாவான 35 மில்லியன் டன்களில் 30% இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 2014-15 மற்றும் 2022-23க்கு இடையில் யூரியா உற்பத்தி 225.08இலிருந்து 284.95 இலட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அரசாங்கத்தின் புதிய உத்திகளில் மூடிய ஆலைகளுக்குப் புத்துயிர் அளிப்பது மற்றும் நானோ திரவ யூரியாபோன்ற மாற்று உரங்களை ஊக்குவித்து தன்னிறைவை அடைவது மற்றும் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைப்பது ஆகியவை அடங்கும்.

10. 2024 – ‘மேம்பாடு மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?

அ. Scoring for People and the Planet

ஆ. Sport for the Promotion of Peaceful and Inclusive Societies

இ. Securing a Sustainable and Peaceful Future for All

ஈ. The power of sport values

  • விளையாட்டு மற்றும் உடல்சார் பயிற்சிகளின் நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.06 அன்று உலகம் முழுவதும் மேம்பாடு மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளுக்கான நடப்பு 2024ஆம் ஆண்டின் கருப்பொருளாக, “Sport for the Promotion of Peaceful and Inclusive Societies” தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல்.04 அன்று நியூயார்க்கில் உள்ள ஐநா அவையின் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்வு, நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதில் விளையாட்டு அமைப்புகளில் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.

11. பீட்டர் பெல்லெக்ரினி என்பவர் அண்மையில் எந்த நாட்டின் புதிய அதிபரானார்?

அ. நார்வே

ஆ. ஸ்லோவாக்கியா

இ. டென்மார்க்

ஈ. ருமேனியா

  • ஸ்லோவாக்கியாவின் தேசியவாத-இடதுசாரி அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட பீட்டர் பெல்லெக்ரினி, தாராளவாத கட்சியின் இவான் கோர்கோக்கை தோற்கடித்து, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். 53.85 சதவீத வாக்குகளுடன் அதிபராகியுள்ள பீட்டர் பெல்லெக்ரினி ஸ்லோவாக்கியாவின் அமைதி நிலைப்பாட்டை பேணுவதாக உறுதியளித்தார். கடந்த 1993இல் விடுதலை அடைந்ததிலிருந்து, ஜூசானா கபுடோவாவைத் தொடர்ந்து ஆறாவது அதிபராக பீட்டர் பெல்லெக்ரினி பதவியேற்கவுள்ளார்.

12. இசைக்கருவிகளில் அதன் கைவினைத்திறனுக்காக அண்மையில் புவிசார் குறியீடு (GI) பெற்ற மிராஜ் நகரம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. மத்திய பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

  • சிதார்கள் மற்றும் தம்புராக்களை வடிவமைப்பதில் புகழ்பெற்ற நகரமாக விளங்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் உள்ள மிராஜ் நகரம், அண்மையில் அதன் கைவினைத்திறனுக்காக புவிசார் குறியீடு பெற்றது. இந்த இசைக்கருவிகள் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத்துறை வல்லுநர்களால் மிக அதிகமாக விரும்பப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காட்டுத்தீ விழிப்புணர்வு காணொலி: தமிழ்நாடு வனத்துறை வெளியீடு.

தமிழ்நாடு 22,877 ச.கிலோமீட்டர் வனப்பரப்பளவை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் காடுகளில் சுமார் 7425 தாவர இனங்களும் 1089 விலங்கினங்களும் உள்ளன. காட்டுத்தீ தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு உயிர்ப்பன்மைப் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின்கீழ், நாட்டுப்புற இசையுடன் கூடிய காணொலி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2013ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

2. வேட்பாளர்களை நிராகரிக்கும் நோட்டா!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் (1961)இன்படி ‘49-ஓ’ என்னும் விதி கொண்டுவரப்பட்டது. 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வாக்குச்சீட்டுகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும், ‘NOTA’ வாக்கைச் சேர்க்க உத்தரவிடப்பட்டது. ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்தாலும், அதற்கடுத்து அதிகபட்சமாக வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 2014 – மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் NOTA (None Of The Above) வாக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!