TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 12th & 13th March 2024

1. குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. மணிப்பூர்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • வணிகரீதியான மற்றும் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணைகளை பிரத்தியேகமாக ஏவும் ISROஇன் புதிய ஏவுதள வசதியை தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார். புதிய விண்வெளித் தொழிற் துறைக் கொள்கையின் காரணமாக, வணிகரீதியான ஏவுகணைகளின் ஏவுதல் எதிர்காலத்தில் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தப் புதிய இரண்டாவது ஏவுதளம் திறக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ISROஇன் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின்மீதான பணிச்சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. பார்ஸ்-ஐ (Pars-I) என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

  • ஈரான் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, ‘பார்ஸ்-ஐ’ என்ற செயற்கைக்கோளை மாஸ்கோவிற்கு கிழக்கே 8,000 கிமீ தொலைவில் உள்ள வோஸ்டோச்னி ஏவுதளத்தில் இருந்து ரஷ்ய சோயுஸ்-2.1b ஏவுகணையைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. ஈரானின் நிலப்பரப்பை தொலையுணரி மற்றும் படமாக்கல் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், சுற்றுவட்டப்பாதையிலிருந்து உயர் தெளிவுத்திறன்கொண்ட நிழற் படங்களை வழங்கும்.

3. மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. மத்திய பிரதேசம்

  • அஸ்ஸாம் மாநிலத்தின் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரிய கலை வடிவமான மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியத்திற்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் சாஞ்சி பட்டை, சாஞ்சி அல்லது அகர் மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஸ்ரீமந்த சங்கர்தேவ் பகவத் புராணகாலத்து ஆத்யதசமாவின் விளக்கப்படம் இந்த ஓவியத்தின் ஆரம்பகால உதாரணமாகக் கருதப்படுகிறது. முதலில் அஹோம் மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட இக்கலைவடிவம் மஜூலியில் உள்ள ஒவ்வொரு சத்திரத்திலும் இடம்பெற்றுள்ளது.

4. கால்நடை கடத்தலைத் தடுப்பதற்காக, ‘ஆபரேஷன் காமதேனு’ என்ற நடவடிக்கையைத் தொடங்கிய மாநிலம் / / யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஜம்மு & காஷ்மீர்

இ. தில்லி

ஈ. கேரளா

  • 2024 மார்ச்சில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கால்நடைகள் கடத்தலைத் தடுப்பதற்காக, ‘ஆபரேஷன் காமதேனு’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. கால்நடைகள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்களைப் பிடிப்பதும் அவர்களின் செயல்பாடுகளை ஆராய்வதும் இந்நடவடிக்கையின் நோக்கமாகும். கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் எண்கள், நபர்களின் கைப்பேசி எண் மற்றும் ஆதாரட்டை விவரங்கள்போன்ற விவரங்களை ஆவணப்படுத்துவது போன்ற நுணுக்கமான அணுகுமுறையை இந்த நடவடிக்கை கொண்டுள்ளது.

5. உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கீழ்காணும் எந்த வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் RBI கையெழுத்திட்டுள்ளது?

அ. பஹ்ரைன் வங்கி

ஆ. பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப். (BAC)

இ. இந்தோனேசியா வங்கி

ஈ. நோவா ஸ்கோடியா வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கியும் இந்தோனேசிய வங்கியும் மும்பையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; இது இந்திய ரூபாய் (INR) மற்றும் இந்தோனேசிய ரூபியா (IDR) ஆகியவற்றைப் பயன்படுத்தி எல்லைதாண்டிய பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் BI ஆளுநர் பெர்ரி வார்ஜியோ, உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, வர்த்தகத்தை மேம்படுத்துதல், நிதி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒரு கட்டமைப்பை நிறுவினர்.

6. அண்மையில், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) 32ஆவது உறுப்பினரான நாடு எது?

அ. எகிப்து

ஆ. சுவீடன்

இ. இந்தியா

ஈ. மலேசியா

  • சுவீடன், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) 32ஆவது உறுப்பினராக வாஷிங்டனில் அதன் சேர்க்கை செயல்முறையை முடித்தபிறகு ஆனது. உக்ரைன்மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து, அதுவரை அணிசேரா நிலையைக் கடைப்பிடித்துவந்த அண்டைநாடுகளான பின்லாந்தும், சுவீடனும் தங்களது பாதுகாப்புக்காக NATOஇல் இணைய விண்ணப்பித்தன. சுவீடனின் இணைப்பு NATOஐ பலப்படுத்துவதாக NATO பொதுச்செயலர் ஜென்ஸ் சுடோல்டன்பெர்க் கூறினார்.

7. ‘Sea Defenders-2024’ என்பது இந்தியாவிற்கும் கீழ்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு கடலோரக் காவல்படை பயிற்சியாகும்?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராச்சியம்

இ. ஆஸ்திரேலியா

ஈ. மாலத்தீவுகள்

  • இந்தியக் கடலோரக் காவல்படையுடன் இணைந்து, ‘Sea Defenders’ என்ற கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதற்காக அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் பெர்தோல்ஃப் கப்பல், போர்ட் பிளேயரை வந்தடைந்தது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரையில் நடத்தப்படவுள்ள இந்த இரண்டு நாள் நிகழ்வானது கடற்கொள்ளை, மாதிரி டிரோன் தாக்குதல்கள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், தீயணைத்தல், மாசு எதிர்ப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு பயிற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

8. பள்ளி மண் சுகாதாரத் திட்டம் என்பது எந்த அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாகும்?

அ. எரிசக்தி அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் & ஜல் சக்தி அமைச்சகம்

இ. பழங்குடியினர் விவகார அமைச்சகம் & சுரங்க அமைச்சகம்

ஈ. கல்வி அமைச்சகம் & உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

  • மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் புது தில்லியில் பள்ளி மண் ஆரோக்கியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இருபது கிராமப்புற கேந்திரிய மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இது மண் ஆய்வகங்களை அமைத்தல், ஆய்வுத்தொகுதிகளை உருவாக்குதல் மற்றும் மாணவர்கள் & ஆசிரியர்களு -க்குப் பயிற்சி வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. தற்போது ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டம், மண் மாதிரிகளைச் சேகரிக்கவும், பள்ளி ஆய்வகங்களில் அவற்றைப் பரிசோதிக்கவும், உருவாக்கப்பட்ட மண் ஆரோக்கிய அட்டைகளின் அடிப்படையில் விவசாயிகளுக்குக் கற்பிக்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறது.

9. Taeniogonalos deepaki’ என்பது சார்ந்த இனம் எது?

அ. பூக்கும் தாவரம்

ஆ. குளவி

இ. தவளை

ஈ. பாம்பு

  • சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநர்கள், கர்நாடக மாநிலத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒரு புதிய குளவி இனமான, ‘Taeniogonalos deepaki’ஐ கண்டுபிடித்தனர். பெல்காமில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய இனம், டாக்டர் தீபக் தேஷ்பாண்டேவின் பெயரால் அழைக்கப்படுகிறது. Trigonalyidae குடும்பத்தைச் சேர்ந்த இவை மேலொட்டுண்ணிகளாகும். முதன்மையாக தென் இந்தியாவில் காணப்படும் இக்குளவிகள் பற்றிய அறிவை விரிவுபடுத்தி ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளனர்.

10. அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்த 97ஆவது உறுப்பு நாடு எது?

அ. ஈரான்

ஆ. பனாமா

இ. எகிப்து

ஈ. சிங்கப்பூர்

  • அண்மையில் பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்த 97ஆவது உறுப்பு நாடாக பனாமா ஆனது. புது தில்லியில் நடந்த சந்திப்பின்போது, தூதர் யாசியேல் புரில்லோ, பொருளாதார விவகாரங்களின் இணைச்செயலர் அபிஷேக் சிங்கிடம் பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணிக்கான ஏற்புறுதியை அளித்தார். இந்த வளர்ச்சியானது உலகளாவிய சூரிய கூட்டாண்மைக்கான பனாமாவின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

11. 2024 – பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசை வென்றவர் யார்?

அ. ரிகன் யமமோட்டோ

ஆ. டேவிட் சிப்பர்ஃபீல்ட்

இ. B V தோஷி

ஈ. இவோன் ஃபாரெல்

  • ஜப்பானிய கட்டிடக் கலைஞரும் சமூக வழக்கறிஞருமான ரிகன் யமமோட்டோ, 2024 – பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரிட்ஸ்கர் பரிசு கட்டிடக்கலை துறையில் மிகவுயர்ந்த சர்வதேச கௌரவமாக கருதப்படுகிறது. இது ‘கட்டிடக்கலையின் நோபல்’ என்றும் அழைக்கப்படுகிறது.

12. ’நீங்கள் நலமா?’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • குடும்பங்களை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒருபகுதியாக, 2024 மார்ச்.06ஆம் தேதியன்று, ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. “நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?” திட்டம் – 2024 என்றும் குறிப்பிடப்படுகிற இத்திட்டம் தமிழ்நாடு அரசின் விரிவான நலன்புரி நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உதவுவதற்கான குறிப்பிடத்தக்க ஒரு முன்னெடுப்பைக் குறிக்கிறது.

13. IRIS என்பதுடன் தொடர்புடையது எது?

அ. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்

ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்

இ. ஆக்கிரமிப்பு தாவர இனங்கள்

ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

  • கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளி, NITI ஆயோக்கின் அடல் டிங்கரிங் ஆய்வக திட்டத்தின் ஒருபகுதியாக, இந்தியாவின் முதல் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு ஆசிரியரான IRISஐ அறிமுகப்படுத்தியது. கடுவயில் தங்கல் அறக்கட்டளையால் அறிமுகப்படுத்தப்பட்ட IRIS, கல்வியில் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் KTCT மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. 2021 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வக முயற்சி, இந்தியக் கல்வியில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது.

14. அண்மையில், பழங்குடியினர் கிராமங்களை இணைய சேவைகளுடன் இணைப்பதற்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் நடுவணரசு கூட்டிணைந்துள்ளது?

அ. ISRO

ஆ. ILO

இ. WTO

ஈ. UNESCO

  • பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிஸா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 80 பழங்குடியின கிராமங்களில் ஒரு முன்னோடி திட்டத்திற்காக V-SAT நிலையங்களை அமைக்க ISROஉடன் கூட்டிணைய திட்டமிட்டுள்ளது. இணையம், மருத்துவம் மற்றும் கல்வி இணைப்புபோன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை இந்தக்கூட்டிணைவு நோக்கமாகக் கொண்டுள்ளது.

15. சமீபத்தில், ‘Viksit Bharat: Corporate Governance for 2047’ என்ற வலையரங்கை நடத்திய நிறுவனம் எது?

அ. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI)

ஆ. இந்திய நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் (IICA)

இ. இந்திய அறிவியல் கழகம் (IISc)

ஈ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISERs)

  • இந்திய நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் (IICA) 2024 மார்ச்.07ஆம் தேதி அன்று, “Viksit Bharat: Corporate Governance for 2047” என்ற தலைப்பிலான ஒரு வலையரங்கத்தை நடத்தியது. விக்சித் பாரத் என்பது 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். இந்தப் பார்வை பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகம் போன்ற வளர்ச்சிசார்ந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

16. தகவல்தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருபகுதியாக இருக்கும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பெட்டிகளின் முதல் தொகுப்பை பெற்ற நகரம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு

இ. மும்பை

ஈ. புது தில்லி

  • பெங்களூரு அதன் தகவல்தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருபகுதியாக ஆறு ஓட்டுநர் இல்லாத ரெயில் பெட்டிகளின் முதல் தொகுப்பைப் பெற்றது. இப்பெட்டிகள் 18.8 கிமீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தின் ஒருபகுதியாக இயங்கும். கட்டுமானத்தில் உள்ள இவ்வழித்தடம் RV சாலை & பொம்மசந்திராவை இணைக்கிறது. CBTC அமைப்பு என்பது ரேடியோ அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பாகும்; இது ரெயில் கட்டுப்பாட்டுத் தகவல்களை மிகத்துல்லியமாக வழங்குகிறது.

17. ஃபூரியர் விதியுடன் தொடர்புடையது எது?

அ. நெகிழ்ச்சி விதி

ஆ. வெப்பக்கடத்தல் விதி

இ. பகுதி அழுத்த விதி

ஈ. திரவ இயக்கவியல் சட்டம்

  • திடப்பொருட்களில் வெப்பப் பரவலைக் கட்டுப்படுத்தும் 200 ஆண்டுகள் பழமையான விதியான ஃபூரியர் விதிக்கு விதிவிலக்கை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். ஃபூரியரின் விதி அல்லது வெப்பக்கடத்தல் விதி என்பது வெப்பநிலை சாய்வுகளின் அடிப்படையில் பொருட்கள்மூலம் வெப்பம் எவ்வாறு பரிமாற்றப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. இதன் சூத்திரம் q = – k▽T ஆகும்; இது வெப்பப்பாய்வு (q), வெப்பக்கடத்துத்திறன் குணகம் (k) மற்றும் வெப்பநிலை சாய்வு (∇T) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தக் கண்டுபிடிப்பு பொருண்ம அறிவியலின் இன்றியமையாத அம்சமான வெப்பக்கடத்தலில் அறிவியல் புரிதலின் மாறும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

18. இந்திய அமைச்சரவையால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, ‘IndiaAI இயக்கத்திற்காக’ ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு?

அ. ரூ.18, 371.92 கோடி

ஆ. ரூ.10, 371.92 கோடி

இ. ரூ.16, 678.92 கோடி

ஈ. ரூ.11, 371.45 கோடி

  • பிரதம அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுப் பணி என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், `10,371.92 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டில் விரிவான தேசிய அளவிலான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) இயக்கம் பொது மற்றும் தனியார் துறைகளில் உத்திசார் திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகள்மூலம் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும். கணினி அணுகலை பரவலாக்குவதன்மூலமும், தரவின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்ப்பதன்மூலமும், சிறந்த செயற்கை நுண்ணறிவு திறமைகளை ஈர்ப்பதன்மூலமும், தொழிற்துறை ஒத்துழைப்பை செயல்படுத்துவதன்மூலமும், சமூகரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உறுதிசெய்வதன்மூலமும், நெறிமுறை செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதன்மூலமும், இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பான, உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்கும்.

19. ‘UNNATI – 2024’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. வடகிழக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்துதல்

ஆ. தென் பிராந்தியத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல்

இ. வடகிழக்கு பிராந்தியத்தில் தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல் & வேலைவாய்ப்பை உருவாக்குதல்

ஈ. இந்தியாவில் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்தல்

  • பிரதம அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான உத்தர்பூர்வா மாற்றத்திற்கான தொழில்மயமாக்கல் திட்டம், 2024 (உன்னதி – 2024) அறிவிக்கை செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு, மொத்தம் `10,037 கோடி மதிப்பீட்டில் எட்டு ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் முதலீட்டாளர்களுக்கு புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கோ அல்லது ஏற்கனவேயுள்ள அலகுகளை கணிசமாக விரிவாக்கம் செய்வதற்கோ சலுகைகள் வழங்கப்படும்.

20. உலகின் மிகப்பெரிய இலக்கிய விழாவான, ‘சாகித்யோத்சவத்தை’ நடத்தவுள்ள நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. லக்னோ

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பான சாகித்திய அகாதெமி, 2024 மார்ச்.11 முதல் 16 வரை உலகின் மிகப்பெரிய இலக்கிய விழாவான, ‘சாகித்யோத்சவத்தை’ கொண்டாடுகிறது. அதோடு தனது எழுபதாவது ஆண்டுவிழாவையும் அது கொண்டாடுகிறது. 175+ மொழிகளில் இருந்து 1100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் இதன் சமயம் நடைபெறும் 190 அமர்வுகளில் பங்கேற்பார்கள். சிறப்பம்சமாக மார்ச்.12 அன்று நடந்த 2023 – சாகித்திய அகாதெமி விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஒடியா எழுத்தாளர் பிரதிபா ராய் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

21. போஷன் பக்வாடாவை நடத்துகிற அமைச்சகம் எது?

அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது மார்ச்.9 முதல் 23 வரை போஷன் பக்வாடாவை நாடு முழுவதும் நடத்தியது. இந்த நிகழ்வு ஊட்டச்சத்து, உணவு முறைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம்பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் 15 நாள் நடைபெறும் ஒரு முன்னெடுப்பாகும். ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும் நலமான உணவுப்பழக்கத்திற்கு ஆதரவளிப்பதற்குமாக பொதுமக்களின் பங்கேற்பையும் கூட்டு இயக்கத்தையும் வளர்ப்பதை இந்த இயக்கம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

22. குறிப்பிடப்பட்ட இந்த நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முன்மாதிரியான முயற்சிகளுடன் விளங்கியதற்காக மதிப்புமிக்க, ‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்’ என்ற உலகளாவிய விருதைப் பெற்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. மியான்மர்

இ. பூட்டான்

ஈ. வங்காளதேசம்

  • குறிப்பிடப்பட்ட இந்த நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முன்மாதிரியான முயற்சிகளுடன் விளங்கியதற்காக, இந்தியா, 2024 மார்ச்.06ஆம் தேதியன்று மதிப்புமிக்க, ‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத் தலைமையகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பில் தூதுவர் ஸ்ரீப்ரியா இரங்கநாதன் இந்த விருதை ஏற்றுக்கொண்டார். ‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூட்டாண்மை’ வழங்கும் இந்த அங்கீகாரம், பொதுச் சுகாதாரம் மற்றும் குழந்தைகளிடையே தொற்றுநோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை சிறப்பிக்கின்றது.

23. சமீபத்தில், ‘வேளாண்மைக்கான ஒருங்கிணைந்த கட்டளை & கட்டுப்பாட்டு மையம்’ திறக்கப்பட்ட இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. சண்டிகர்

ஈ. போபால்

  • மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண்மைக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். நாடு தழுவிய தன்னம்பிக்கையை வளர்ப்பதன்மூலம் முக்கியமான தகவல் மற்றும் சேவைகளை வழங்கி விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதனை இம்முன்னெடுப்பு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண்மைத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கும், தகவலறிந்த முடிவெடுப்பதற்கும் விவசாயிகளுக்கு இது உதவும்.

24. ஒவ்வோர் ஆண்டும், ‘CISF எழுச்சி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மார்ச்.09

ஆ. மார்ச்.10

இ. மார்ச்.11

ஈ. மார்ச்.12

  • கடந்த 1969ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CISF) தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச்.10ஆம் தேதி அன்று மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை எழுச்சி நாள் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றச்சட்டத்தால் உருவாக்கப்பட்ட CISF, ஆரம்பத்தில் ஒருசில படைப்பிரிவுகளை உள்ளடக்கி செயல்பட்டு வந்தது. அது தற்போது வளர்ச்சி மற்றும் வலிமையை வலியுறுத்தி, சிறப்புப்பயிற்சியுடன் கூடிய வலிமைமிக்க, பல்திறன்கொண்ட ஒரு பாதுகாப்புப்படையாக உருவெடுத்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!

‘திவ்யாஸ்திரா’ என்ற திட்டத்தின்கீழ் அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் திரும்பக்கூடிய வகையிலான MIRV என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி – 5 ஏவுகணை உள்நாட்டிலேயே DRDOஆல் தயாரிக்கப்பட்டது. அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன்பெற்றது.

2. எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது.

நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது தமிழ்ப்பிரிவில் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட இருபத்து நான்கு (24) மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு இவ்விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. அருணாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மமாங் தை எழுதிய, ‘தி பிளாக் ஹில்’ என்ற ஆங்கில நாவலை, ‘கருங்குன்றம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதானது தாமிரப்பட்டயம், `50, 000 தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

3. கண் நீர் அழுத்த பாதிப்பு: விழிப்புணர்வின்றி 98% பேர்!

இந்தியாவில் 1.12 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (Glaucoma) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 98% பேருக்கு அந்நோயின் தாக்கம்குறித்த விழிப்புணர்வில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மார்ச்.10 முதல் 16ஆம் தேதி வரை உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கண் நீர் அழுத்த பாதிப்பு உள்ளவர்களின் குடும்பத்தினர்களுக்கும், ஸ்டீராய்டு மருந்துகள் தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

4. குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்.

குடியுரிமை திருத்தச்சட்டம் நாடு முழுவதும் மார்ச்.11 முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப்பிறகு, ‘குடியுரிமை திருத்த விதிகள் – 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச்சட்டம், 2019இன்கீழ் இந்திய குடியுரிமைபெற தகுதியுள்ள நபர்கள், இவ்விதிகளின்கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வலைதளம்மூலம் இணையவழியில் மட்டுமே இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.

குடியுரிமை திருத்தச்சட்டம் கூறுவது என்ன?

அண்டை நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 டிச.31ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த இசுலாமியர் அல்லாத பிற சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகைசெய்கிறது.

5. தமிழ்நாடு தேர்தல் ஆணையராக பா ஜோதி நிர்மலாசாமி நியமனம்.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக பா ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம்பெற்ற ஜனநாயக அமைப்பாகும். இவருடைய பதவிக்காலம், பதவியேற்கும் நாளிலிருந்து 5 ஆண்டு காலம் அல்லது அவர் 65 வயதை எட்டும் வரை ஆகும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம்.

6. செப்டம்பர்.17: ‘ஹைதராபாத் விடுதலை நாள்’: மத்திய அரசு அறிவிப்பு.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.17ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1947 ஆக.15ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் அப்போதைய ஹைதராபாத் பகுதிக்கு விடுதலை கிடைக்கவில்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் ‘சர்தார்’ வல்லபபாய் படேலின் முயற்சியால் ‘ஆபரேஷன் போலோ’ என்று பெயரிலான காவல்துறையினரின் நடவடிக்கைமூலம் பதிமூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த 1948ஆம் ஆண்டு செப்.17ஆம் தேதி ஹைதராபாத் மாநிலத்துக்கு நிஜாம் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இ-சேவை மையங்கள்மூலம் மார்ச்.13 முதல் LLR எனப்படும் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்பெற விண்ணப்பிக்கலாம் எனப் போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!