TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 12th February 2024

1. அண்மையில், எந்த இசைக்கலைஞருக்கு இலக்ஷ்மிநாராயண் சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது?

அ. சந்தோஷ் நாராயணன்

. பியாரேலால் சர்மா

இ. AR இரஹ்மான்

ஈ. VM பட்

  • புகழ்பெற்ற இசைக்கலைஞரான பியாரேலால் ஷர்மா, உலகளாவிய இசை விழாவில் இலக்ஷ்மிநாராயண் சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். L சுப்ரமணியம் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோரால் இவ்விருது வழங்கப்பட்டது. பியாரேலால் ஷர்மா, ஹிந்தி சினிமாவில் எண்பதாண்டுகாலம் இசையமைப்பாளராக பணியாற்றியவர் ஆவார். இசையுலகில் அவராற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

2. உலக வங்கியின், ‘2023 – போக்குவரவு செயல்திறன் குறியீட்டு’ அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 38ஆவது

ஆ. 36ஆவது

இ. 35ஆவது

ஈ. 39ஆவது

  • உலக வங்கியின், 2023 – போக்குவரவு செயல்திறன் குறியீட்டில் 139 நாடுகளில் 38ஆவது இடத்தைப் பிடித்து இந்தியா அதன் போக்குவரத்து செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. 2018ஐ ஒப்பிடும் போது 6 இடங்களும் 2014ஐ ஒப்பிடும்போது பதினாறு இடங்களும் முன்னேறியுள்ளது. பிரதமரின் கதிசக்தி தேசிய பெருந்திட்டம் மற்றும் தேசிய போக்குவாரவு கொள்கைபோன்ற முன்னெடுப்புகள், ஒருங்கிணைந்த போக்குவரவு இடைமுக தாழ்வாரம்போன்ற டிஜிட்டல் சீர்திருத்தங்கள் இந்த முன்னேற்றத்திற்குப் பங்களிக்கின்றன.

3. ஆண்டுதோறும், ‘உலக பருப்புவகைகள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 10 பிப்ரவரி

ஆ. 9 பிப்ரவரி

இ. 8 பிப்ரவரி

ஈ. 11 பிப்ரவரி

  • உலக பருப்புவகைகள் நாளானது ஆண்டுதோறும் பிப்ரவரி.10ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நிலையான உணவு உற்பத்தியில் பருப்பு வகைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் விதமாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப் பொருள், “Pulses: Nourishing Soils and People” என்பதாகும். இதனை ஐநா அவை நிர்ணயிக்கிறது. இந்தக் கருப் பொருள், பருப்பு வகைகளை உணவு & உழவு நடைமுறைகளில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதில் பருப்பு வகைகளின் பங்கை வலியுறுத்தும் வகையில், 2019ஆம் ஆண்டில் இந்த நாள் உருவாக்கப்பட்டது.

4. ஆதி மகோத்சவத்தை நடத்துகிற கூட்டுறவு அமைப்பு எது?

அ. இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் லிட்

ஆ. இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிட்

இ. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிட்

ஈ. தேசிய அங்கக கூட்டுறவு லிட்

  • புது தில்லியில், ‘2024-ஆதி மகோத்சவம்’ எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடக்கிவைத்தார். இந்த ஆண்டு, பழங்குடி சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஆதி மகோத்சவம் நிகழ்வில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் பழங்குடி பாரம்பரியத்தின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பழங் குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பழங்குடியினர் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான TRIFED ஆதி மகோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு இந்த விழா, பிப்.10-18 வரை நடைபெறுகிறது.

5. 2026 – FIFA உலகக்கோப்பைப் போட்டிகளானது பின்வரும் எந்தெந்த நாடுகளில் நடத்தப்படவுள்ளது?

அ. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா

ஆ. இத்தாலி மற்றும் பிரான்ஸ்

இ. ஸ்பெயின் மற்றும் ரஷ்யா

ஈ. ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்னமெரிக்கா

  • 2026 – FIFA உலகக்கோப்பைப் போட்டிகளானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தப்படவுள்ளது. 104 ஆட்டங்கள்கொண்ட இந்தப் போட்டிகள் 16 வெவ்வேறு நகரங்களில், ஜூன்.11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும். 48 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், அமெரிக்காவில் 60 ஆட்டங்களும், கனடாவில் 10 ஆட்டங்களும், மெக்சிகோவில் 10 ஆட்டங்களும் விளையாடப்படும். இந்தப் போட்டியானது மெக்சிகோ நகரத்தின் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்கி ஜூலை 19, 2026 அன்று நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் முடிவடையும். மூன்று நாடுகளால் நடத்தப்படும் முதல் உலகக்கோப்பையும் 1994-க்குப் பிறகு வட அமெரிக்காவில் நடத்தப்படும் முதல் உலகக்கோப்பையும் இதுவாகும்.

6. ‘மீன்பிடி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு’ எவ்வளவு நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது?

அ. ரூ. 830.57 கோடி

ஆ. ரூ. 939.48 கோடி

இ. ரூ. 935.55 கோடி

ஈ. ரூ. 955.68 கோடி

  • மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை 2025-26 வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மீன்வளத் துறைக்கான உட்கட்டமைப்புத் தேவையை சரிசெய்வதற்காக, மத்திய அரசு 2018-19ஆம் ஆண்டில் `7522.48 கோடி மொத்த நிதி அளவுடன் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை உருவாக்கியது. 2018-19 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில், `5588.63 கோடி முதலீட்டில் மொத்தம் 121 மீன்வள உட் கட்டமைப்பு திட்டங்களுக்கு பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

7. அண்மையில், “LNG as a Transportation Fuel in Medium and Heavy Commercial Vehicles” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது எது?

அ. NITI ஆயோக் மற்றும் நெதர்லாந்து தூதரகம்

ஆ. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் நெதர்லாந்து தூதரகம்

இ. NITI ஆயோக் மற்றும் ரஷ்ய தூதரகம்

ஈ. வேளாண் அமைச்சகம் மற்றும் NITI ஆயோக்

  • NITI ஆயோகும் நெதர்லாந்து தூதரகமும் இணைந்து கோவாவில் நடைபெற்ற 2024 – இந்திய எரிசக்தி வாரத்தின் போது, “நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களில் போக்குவரத்து எரிபொருளாக LNG” என்ற அறிக்கையை வெளியிட்டன. 2020இல் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டாண்மை ஆற்றல் மாற்றத்தில் கவனஞ்செலுத்துகிறது.
  • இந்திய வர்த்தக வாகனங்களில் LNG பயன்பாடு, ஒருங்கிணைப்பு சவால்களை ஆய்வுசெய்தல் மற்றும் உலகளாவிய நடைமுறைகளில் இருந்து செயலறிவுபெறுதல் ஆகியவற்றை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பசுமை ஹைட்ரஜனில் முன்னணியில் உள்ள நெதர்லாந்து, காலநிலை இலக்குகளை அடைவதில் இந்தியாவுக்கு உதவ திட்டமிட்டுள்ளது. 2070ஆம் ஆண்டுக்குள் முதன்மை ஆற்றலில் 15% LNG பங்கினைக் கொண்டுவரும் உத்திகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

8. ‘பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா’ என்ற கலாச்சார விழா நடத்தப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. போபால்

இ. புது தில்லி

ஈ. ஜெய்சால்மர்

  • “பன்முகத்தன்மையின் அமிர்தப்பெருவிழா: வடகிழக்கிந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்” 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடக்கிவைத்தார். வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டமைச்சகம் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த விழாவின் முதல் பகுதி, பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து, வடகிழக்கு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் ஆகியவற்றில் பரிமாற்றங்களை ஊக்குவித்து, பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊக்கியாக இருப்பதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. பன்னர்கட்டா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவின் பன்னர்கட்டா தேசியப்பூங்கா வழியாக ஆறுவழி நெடுஞ்சாலை அமைக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) முன்மொழிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. துணை நகர சுற்றுவட்டச்சாலையின் ஒருபகுதியான இத்திட்டம், போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அழிந்துவரும் உயிரினங்களின் இருப்பிடமான, சுற்றுச்சூழல் உணர்திறன்மிக்க இந்தப் பூங்காவில் அதன் தாக்கம்குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே இது கவலையைத் தூண்டியுள்ளது. இந்தப் பூங்காவிற்குள் 1,288 மரங்களை வெட்டுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

10. மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெற்ற புதிய திட்டத்தின் பெயர் என்ன?

அ. பிரதம மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா

ஆ. பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா

இ. சாகர் பரிக்ரமா திட்டம்

ஈ. பாக் விரிகுடா திட்டம்

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரையிலான அடுத்த 4 ஆண்டுகளில் மீன்வளத்துறையை முறைப்படுத்துவதற்கும், மீன்வள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின்கீழ் மத்திய அரசின் துணைத்திட்டமான, “பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, மத்திய துறை துணைத்திட்டமாக, `6,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
  • மீன்வளத் துறையை படிப்படியாக முறைப்படுத்துதல் மற்றும் நிறுவனக் கடன்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல்; சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வேலை அடிப்படையிலான அடையாளங்களை வழங்க தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தை உருவாக்குதல் போன்றவை இதன் நோக்கங்களில் அடங்கும்.

11. ‘சதுப்புநிலங்களைக் காப்போம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

ஆ வேளாண் அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. ஜவுளி அமைச்சகம்

2023ஆம் ஆண்டு உலக ஈரநிலங்கள் நாளன்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, ‘சதுப்புநிலங்களைக் காப்போம்” பிரச்சாரமானது 2024 – உலக சதுப்பு நிலங்கள் நாளன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஈரநிலப்பாதுகாப்பு, அதுகுறித்த விழிப்புணர்வை அதிகரித்தலை இது நோக்கமாகக் கொண்டது. மிஷன் லைஃப் மற்றும் மிஷன் சபகீதா தத்துவத்துடன் இணைந்து, ராம்சர் தளங்களை மாதிரியாகக் கொண்டு இது இயங்கியது. மாநில சதுப்புநில அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சிகள் / நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவுக்கூட்டாளிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

12. காளிங்கராயன் தடுப்பணை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பாய்ந்தோடும் பவானி ஆற்றின்மீது கட்டப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த காளிங்கராயன் அணைக்கட்டு, உலகின் மிகப்பழைமையான நீர்ப்பிரிகைத் திட்டங்களில் ஒன்றாகும். ICIDஆல் 2021இல் உலக பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட இது, கொங்கு நாட்டின் உட்பிரிவான பூந்துறை நாட்டை ஆண்ட காளிங்கராயனால் கட்டப்பட்டது. 1240இல், மதுரை பாண்டியர்களுடன் ஒரு சிப்பாயாகச் சேர்ந்த அவர், 1265இல், சடையவர்மன் சுந்தர பாண்டியனிடமிருந்து, ‘காளிங்கராயன்’ என்ற பட்டத்தைப் பெற்றார். பின்னர் பூந்துறை நாட்டை ஆண்டு செல்வச்செழிப்பாக்கினார்.

13. ‘FAST’ என்ற தொலைநோக்கியை உருவாக்கிய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா

இ. சீனா

ஈ. இந்தியா

  • சீனாவின் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் உள்ள வானியலாளர்கள், உலகின் மிகப்பெரிய ஒற்றைக்குடை ரேடியோ தொலைநோக்கியான, ‘FAST’-ஐப் பயன்படுத்தி, ‘CTB 87’ என்ற சூப்பர்நோவா எச்சத்தில் ஒரு ரேடியோ துடிப்பைக் கண்டறிந்தனர். குய்ஷோவில் அமைந்துள்ள ‘FAST’ தொலைநோக்கி, 30 கால்பந்து மைதானங்களுக்குச் சமமான பரப்பில் அமைந்துள்ளது. பேரண்டத்தின் விளிம்பில் நடுநிலையாக்கப்பட்ட (neutral) ஹைட்ரஜனைக் கண்டறிதல், ஆரம்பநிலை பேரண்டத்தின் படங்களை புனரமைத்தல், துடிப்புகளைக்கண்டறிதல், புவியீர்ப்பு அலை கண்டறிதலில் பங்கேற்பது மற்றும் வேற்றுக்கிரகத் தேடலுக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவை இதன் இலக்குகளில் அடங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 80% உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டுள்ளன: அரசு தகவல்.

கடந்த 1995 முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற 36,640 உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. மொத்த உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகளில் 29,695 அறுவைச் சிகிச்சைகள் ஆண்களிடமும் 6,945 அறுவைச் சிகிச்சைகள் பெண்களிடமும் நடத்தப்பட்டுள்ளன. இதன் விகிதம் 4:1 என்பதாக உள்ளது.

2. சச்சின், அமித் பங்காலுக்கு தங்கம்.

75ஆவது ஸ்டேரண்டஜா சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சச்சின், அமித் பங்கால் தங்கப்பதக்கம் வென்றனர். உலக சாம்பியன் நிகாத் ஸரீன் வெள்ளி வென்றார். ஐரோப்பாவின் மிகவும் பழைமையான இப்போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நடைபெற்று வருகிறது. ஆடவர் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் சான்ஷரை வீழ்த்தி தங்கம் வென்றார். 57 கிலோ பிரிவு இறுதியில் உலக யூத் சாம்பியன் சச்சின் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முஸபரோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

3. U19: ஆஸ்திரேலியா உலக சாம்பியன்.

ICC U19 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ICC சார்பில் தென்னாப்பிரிக்காவின் பெனானி நகரில் U19 ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

4. நாட்டு மாடு இன பாதுகாப்பு: பர்கூர் ஆராய்ச்சி மையத்துக்கு விருது.

நாட்டு மாடு இனத்தைப் பாதுகாத்ததற்காக தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் வழங்கும் இன பாதுகாப்பு விருதை பர்கூர் ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது. நாட்டு மாடுகளைக் காக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்மூலமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் பகுதியில் பர்கூர் நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க தனி மையத்தை தமிழ்நாடு அரசு கடந்த 2015இல் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

புது தில்லியில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் ஆகியவை இணைந்து இன பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாத்து இனப்பெருக்கத்தை தூண்டியதற்காகவும் இன பாதுகாப்பு விருது 2023-ஐ பர்கூர் நாட்டு மாடு இன ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!