TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 12th October 2023

1. உலகளாவிய வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சி குறித்த முன்கணிப்பை வெளியிட்ட அமைப்பு எது?

அ. WEF

ஆ. IMF

இ. NITI ஆயோக்

ஈ. WTO 🗹

  • உலக வர்த்தக அமைப்பானது (WTO) உலகளாவிய வணிகப் பொருட்களின் வர்த்தக வளர்ச்சியை 0.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்த கணிப்பு ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்ட 1.7 சதவீதத்திற்கும் குறைவானதாகும். 2024ஆம் ஆண்டிற்கான அதன் 3.3% வளர்ச்சிக்கணிப்பானது முந்தைய மதிப்பீட்டில் இருந்து மாறாமல் உள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டில் சந்தை மாற்று விகிதங்களில் மெய்யுலக GDP 2.6 சதவீதமும் 2024ஆம் ஆண்டில் 2.5 சதவீதமும் வளரும் என்று WTO எதிர்பார்க்கிறது.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டோக்கனைசேஷன்’ என்பது இதனுடன் தொடர்புடையது_:

அ. கிரிப்டோகரன்சி

ஆ. கொடுப்பனவு பாதுகாப்பு 🗹

இ. உயிரி தொழில்நுட்பவியல்

ஈ. செயற்கை நுண்ணறிவு

  • இந்திய ரிசர்வ் வங்கி 2021 செப்டம்பரில் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷனை (COFT) அறிமுகப்படுத்தியது; அது 2022 அக்டோபர்.1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. டோக்கனைசேஷன் என்பது மெய்யான கடன் அல்லது பற்று அட்டையின் விவரங்களை டோக்கன் எனப்படும் மாற்றுக் குறியீட்டைக் கொண்டு மாற்றுவதைக் குறிக்கிறது. தற்போது, கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனை வணிகரின் தனிச்செயலி அல்லது இணையப்பக்கம்மூலம் மட்டுமே உருவாக்க இயலும். கடன் / பற்று அட்டை வழங்கும் வங்கி மட்டத்தில் நேரடியாக CoF டோக்கன் உருவாக்கும் வசதிகளை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி இப்போது முன்மொழிந்துள்ளது.

3. 2023ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் பட்டத்தை கீழ்காணும் எந்த நாட்டின் கபடி அணி வென்றுள்ளது?

அ. ஈரான்

ஆ. இந்தோனேசியா

இ. இந்தியா 🗹

ஈ. பாகிஸ்தான்

  • அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கபடி அணி 33-29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி எட்டு தடவை தங்கம் வென்றுள்ளது. இந்திய மகளிர் கபடி அணி ஏற்கனவே இறுதிப்போட்டியில் தைவானை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. பசுமை ஹைட்ரஜன் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் இந்தியா எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. அர்ஜென்டினா

ஆ. சவூதி அரேபியா 🗹

இ. பிரான்ஸ்

ஈ. பின்லாந்து

  • இந்தியாவும் சவூதி அரேபியாவும் மின் இணைப்புகள், பசுமையான மற்றும் தூய்மையான ஹைட்ரஜன் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைக்கும் நோக்கோடு ரியாத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்சார தொடர்புகள் துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை, சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இணை உற்பத்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலிகளை நிறுவுதல் ஆகியவற்றையும் நோக்கமாக கொண்டிருக்கிறது.

5. ‘உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கல நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 8

ஆ. செப்டம்பர் 8

இ. அக்டோபர் 8 🗹

ஈ. அக்டோபர் 18

  • உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் மின்கல நாள், ஆண்டுதோறும் அக்டோபர்.8 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஹைட்ரஜனை ஒரு தூய & நிலையான ஆற்றல்மூலம் என விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வின்போது, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது. `400 கோடி மதிப்பிலான இத்திட்டம் பசுமை ஹைட்ரஜனை வணிகமயமாக்கவும், இந்தியாவின் காலநிலை மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு பங்களிக்கவும் உதவும் ஒரு துடிப்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டலை வழங்க எண்ணுகிறது.

6. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 110 பின்வருவனவற்றில் எதைப்பற்றி குறிப்பிடுகிறது?

அ. பண மசோதா 🗹

ஆ. ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள்

இ. மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை

ஈ. இந்தி – அலுவல்பூர்வ மொழி

  • அண்மையில், இந்திய தலைமை நீதிபதி D Y சந்திரசூட், குறிப்பிட்ட குறிப்பிடத்தக்க சட்டங்களை இயற்றுவதற்கு பண மசோதா முறையை அரசாங்கம் பயன்படுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பில் தீர்ப்பளிக்க ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 110 (1) பிரிவின்படி, வரிவிதிப்பு, அரசாங்கக் கடன் வாங்குதல் மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு போன்றவை பண மசோதாவாக வகைப்படுத்தப்படும்.

7. ஓவர்-தி-டாப் (OTT) இயங்குதளங்கள் இந்தியாவில் எந்த விதிகளின்கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன?

அ. தகவல் தொழில்நுட்ப விதிகள் 🗹

ஆ. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) விதிகள்

இ. ஒளிப்பதிவு விதிகள்

ஈ. காப்புரிமை சட்டம்

  • டெலிகாம் சிக்கல் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது ஓவர்-தி-டாப் (OTT) இயங்குதளங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை அல்ல என இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மாறாக, அவை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (Meity) அறிவிக்கப்பட்ட 2021இன் தகவல் தொழில்நுட்ப விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

8. EU Copernicus Climate Change Serviceஇன்படி, 1940க்குப் பிறகு 2023ஆம் ஆண்டின் எந்த மாதம் உலகளவில் வெப்பமான மாதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது?

அ. மார்ச்

ஆ. மே

இ. ஆகஸ்ட்

ஈ. செப்டம்பர் 🗹

  • 2023ஆம் ஆண்டு இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக மாறும் நிலையில் உள்ளது; 2024ஆம் ஆண்டு அதையும் விஞ்சக்கூடும் என்ற நிலையும் நிலவி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் சமீபத்திய தரவுகளின்படி, 2023 செப்டம்பர் மாதமானது 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகளவில் வெப்பமான மாதமாக ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. 83 ஆண்டுகாலத்தில் இது அதிகபட்ச உயர்வாகும்.

9. 49ஆவது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டை நடத்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கேரளா

ஆ. கோவா

இ. மகாராஷ்டிரா

ஈ. உத்தரகாண்ட் 🗹

  • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 49ஆவது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாடு நடந்தது. “Policing in Amrit Kaal” என்ற கருப்பொருளின்கீழ், உத்தரகாண்ட் மாநிலக் காவல்துறை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின்கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10.” Bale Identification and Traceability System” என்பதை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

ஆ. இந்திய பருத்தி கழகம் 🗹

இ. இந்திய தரநிலைகள் பணியகம்

ஈ. உணவு மற்றும் விவசாய அமைப்பு

  • மத்திய ஜவுளி அமைச்சகமானது 2023ஆம் ஆண்டு உலக பருத்தி நாளை அக்டோபர்.07 அன்று கொண்டாடியது. “Making cotton fair and sustainable for all, from farm to fashion” என்பது நடப்பு 2023ஆம் ஆண்டு உலக பருத்தி நாளுக்கானக் கருப்பொருளாகும். இந்திய பருத்தி கழகமானது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, “பருத்தி மூட்டையை அடையாளங்காணல் மற்றும் கண்டறிதல் திறன்மிகு அமைப்பை” அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு பருத்தி மூட்டையும் அதன் அசல்மூலம், செயலாக்கத் தொழிற்சாலை, சேமிப்பக விவரங்கள் மற்றும் நேர முத்திரைகள் உட்பட அதனுடன் தொடர்புடைய பருத்தி தரத் தகவல்களை எளிதாகக் கண்காணிக்க அனுமதிக்கும் QR குறியீட்டைக் கொண்டுள்ளது.

11. சமீப செய்திகளில் இடம்பெற்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர்பால் சந்து ஆகியோர் சார்ந்த விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. பூப்பந்து

இ. ஸ்குவாஷ் 🗹

ஈ. குத்துச்சண்டை

  • கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் இறுதிப்போட்டியில் மலேசிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய ஆண்கள் அணி முதலிடம் பிடித்தது. ஸ்குவாஷில் இந்திய அணி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது.

12. ‘ஹமாஸ்’ என்பது கீழ்காணும் எந்த நாடு / பிராந்தியத்தில் தோன்றிய ஒரு போராளிக் குழுவாகும்?

அ. சிரியா

ஆ. பாலஸ்தீனம் 🗹

இ. ஈரான்

ஈ. அஜர்பைஜான்

  • பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ‘ஹமாஸ்’ இஸ்ரேல்மீது குறைந்தது 5,000 ஏவுகணைகளை ஏவி மிகப்பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் போரை அறிவித்து ‘Iron Swords’ எனப் பெயரிட்டு நடவடிக்கையை தொடங்கியது. ஹமாஸ் மீதான போரில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

13. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய ஜோடி எது?

அ. சாத்விக் மற்றும் சிராக் 🗹

ஆ. பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால்

இ. ஸ்ரீகாந்த் மற்றும் பிரணாய்

ஈ. சாய் பிரனீத் மற்றும் பிரணாய்

  • சாத்விக் சாய்ராஜ் இரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்தனர். நடப்பு காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான சாத்விக் மற்றும் சிராக் ஆகியோர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தனர். ஜூன் மாதம் இந்தோனேசியா ஓபனை வென்றபோது இருவரும் BWF சூப்பர் 1000 போட்டியை வென்ற முதல் இந்தியர்கள் ஆனார்கள்.

14. காலநிலை சேவைகளுக்கான தேசிய கட்டமைப்பை வழி நடத்துவது எது?

அ. IMD 🗹

ஆ. ISRO

இ. UNEP

ஈ. UNFCCC

  • காலநிலை சேவைகளுக்கான தேசிய கட்டமைப்பானது (National Framework for Climate Services) காலநிலை தகவல் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த தளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NFCSஐ இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) வழிநடத்துகிறது. வேளாண்மை, எரிசக்தி, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நீர் போன்ற முக்கியமான துறைகளில் காலநிலை தொடர்பான அபாயங்களுக்கு தகவலறிந்த பின் முடிவெடுப்பதும் அதனை மேலாண்மை செய்வதும் NFCSஇன் குறிக்கோள் ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சீனாவைப் போல இந்தியாவுக்கும் கடன்கள் அதிகம்: சர்வதேச நிதியம்.

இந்தியாவின் தற்போதைய கடன் சீனாவைப் போன்று அதிகமாக உள்ளது. இந்தியாவின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 81.9 சதவீதமாக உள்ளது. சீனாவின் கடன் அந்த நாட்டின் GDPஇல் 83 சதவீதமாக உள்ளது. COVID பெருந்தொற்றுக்கு முன்பு இந்தியாவின் கடன் 75 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 8.8%ஆக கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியான 5.4 சதவீதம் வட்டிக்கான செலவினங்களால் ஏற்படுகிறது. முதன்மை பற்றாக்குறை 3.4 சதவீதமாக உள்ளது. சீனாவைப் போல வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கடன் அதிகரிக்க வாய்ப்பில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் முடிவில் இந்தியாவில் கடன் சதவீதம் 1.5 சதவீதம் குறைந்து 80.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

உலக கோப்பை வரலாற்றில் 7 சதம் அடித்து ரோஹித் சர்மா சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். டெண்டுல்கர் 44 இன்னிங்சில் 6 சதம் அடித்திருந்த நிலையில் ரோஹித் சர்மா 19 இன்னிங்ஸில் 7 சதங்களை அடித்திருக்கிறார். மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மாவுக்கு கிடைத்தது. இதற்கு முன்பு கபில்தேவ் இந்தச் சாதனையை 72 பந்துகளில் படைத்திருந்தார்.

3. தஞ்சை பெரியகோவில் சதய விழா.

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் இராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழா கொண்டாடப்படவுள்ளது. இது பெரியகோவிலைக் கட்டுவித்த மாமன்னர் இராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவாகும்.

4. திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம்.

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை கடந்த மே 17-ஆம் தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு ‘சஞ்சார் சாத்தி’ என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணைய முகப்பில் Central Equipment Identity Register (CEIR), TAFCOP, Know Your Mobile (KYM) போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளன. CEIR என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுடைய தொலைந்த மற்றும் திருடுபோன கைப்பேசிகள் குறித்து புகாரளிக்கலாம்.

அதோடு, மக்கள், 14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன்மூலம் கைபேசியின் IMEI எண் குறித்த உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளமுடியும். இதில் கைபேசி வகை விவரங்கள் வழங்கப்படும். TAFCOPக்குச் சொந்தமான https://https://tafcop.sancharsaathi.gov.in/telecomuser/apy என்ற இணையதளத்துக்குள் தங்கள் கைப்பேசி எண்ணை கொண்டு உள்நுழைந்தால், அவர்கள் பெயரில் எத்தனை எண்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் மக்கள் பெறமுடியும்.

5. சென்னையில் 2024 பிப்ரவரியில், பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு.

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக்கழகம்மூலம் வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை மையத்தில் பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு (கணினித்தமிழ்-24) நடைபெறும் என மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணினித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும், அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதற்கும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!