TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 14th & 15th February 2024

1. இந்தியாவின் எந்த நகரத்தில், ‘தக்ஷின பாரத சமற்கிருதிக் கேந்திரம்’ நிறுவப்பட்டுள்ளது?

அ. ஹைதராபாத்

ஆ. சென்னை

இ. பெங்களூரு

ஈ. கொச்சின்

  • இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத்தலைவரும், மத்திய கலாச்சார அமைச்சருமானவர், இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகங்களுக்கான தேசிய அகாதெமியான சங்கீத நாடக அகாதெமியின் ஒருபகுதியான ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘தக்ஷின பாரத சமற்கிருதிக் கேந்திர’த்தைத் திறந்துவைத்தார். 1953இல் நிறுவப்பட்ட இது, இந்திய நாட்டின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. அண்மையில், எந்த இரு நாடுகளில் UPI கொடுப்பனவு முறை தொடங்கப்பட்டது?

அ. இலங்கை மற்றும் மொரிஷியஸ்

ஆ. ஆஸ்திரேலியா மற்றும் எகிப்து

இ. சிலி மற்றும் பெரு

ஈ. ஈரான் மற்றும் இஸ்ரேல்

  • இலங்கை அதிபர் இரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் இணைந்து இலங்கை, மொரீஷியஸில் UPI சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார். இருநாடுகளின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ரூபே அட்டை மொரீஷியஸில் உள்நாட்டில் பயன்படுத்தப்படும் அட்டையாக அறிவிக்கப்படும் என்று மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் தெரிவித்தார். இச்சேவை இருநாடுகளின் குடிமக்களுக்கும் பெரிதும் உதவும் என்று அவர் கூறினார்.
  • அயோத்தியில் ஸ்ரீ இராமர் திருக்கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்காக பிரதமருக்கு இலங்கை அதிபர் இரணில் விக்ரமசிங்கே வாழ்த்துத் தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான பொருளாதார உறவுகளையும் அவர் அப்போது எடுத்துரைத்தார்.

3. துபாயில் நடந்த 2024 – உலக அரசாங்கங்களின் உச்சிமாநாட்டில், கெளரவ விருந்தினர்களாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எவை?

அ. எகிப்து மற்றும் ஈராக்

ஆ. சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா

இ. இந்தியா, கத்தார் மற்றும் துருக்கி

ஈ. இந்தியா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா

  • “Shaping Future Governments” என்ற கருப்பொருளின்கீழ் பிப்.12-14 தேதிகளில் துபாயில் நடைபெற்ற 2024 – உலக அரசாங்கங்களின் உச்சிமாநாட்டில் இந்தியா, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் கௌரவ விருந்தினர்கள் என அறிவிக்கப்பட்டன. இவ்வுச்சிமாநாட்டில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

4. SWATI வலைத்தளத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. STEMMஇல் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்கப்படுத்துவது

ஆ. அறிவியலில் பெண்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குதல்

இ. பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி வழங்குதல்

ஈ. மூத்த குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல்

  • இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், “பெண்களுக்கான அறிவியல் – தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு (SWATI)” தளத்தைத் தொடக்கி வைத்தார். இது STEMM எனப்படும் அறிவியல், தொழினுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவத்தில் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தரவுத்தளம் பாலின இடைவெளி தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கொள்கை வகுக்க உதவும்.

5. 2024-அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Innovate, Demonstrate, Elevate, Advance

ஆ. Women and Girls in Science Leadership, a New Era for Sustainability

இ. Investment in Women and Girls

ஈ. Equality and Parity in Science

  • 2024ஆம் ஆண்டில் கொண்டாடப்படும் 9ஆவது அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருள், “Women and Girls in Science Leadership, a New Era for Sustainability” என்பதாகும். உலகளாவிய நீடித்த இலக்குகளை அடைவதற்கு அறிவியல்சார்ந்த துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது. இந்த நாள் பிப்.11 அன்று கொண்டாடப்படுகிறது. இராயல் அகாதெமி ஆப் சயின்ஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் ஆனது 2024ஆம் ஆண்டுக்கான அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச நாளை, அறிவியல் சபையில் கொண்டாடியது.

6. எந்த நோய்க்கான, ‘மக்கள் பங்கேற்புடன்கூடிய மருந்து நிர்வாக’ இயக்கத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது?

அ. டெங்கு

ஆ. காசநோய்

இ. நிணநீர் யானைக்கால்நோய்

ஈ. சின்னம்மை

  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையானது நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான நாடு தழுவிய மக்கள் பங்கேற்புடன்கூடிய மருந்து நிர்வாக இயக்கத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச தடுப்பு மருந்துகளை வழங்குவதன்மூலம் நோய்ப்பரவுவதைத் தடுப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • யானைக்கால் நோயை ஒழிக்கும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்த இந்தியா அண்மையில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரும் 2027ஆம் ஆண்டுக்குள் நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான மேம்பட்ட ஐந்து அம்ச உத்தியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. அதில் முக்கியமான உத்திகளில் ஒன்று இந்த மருந்து இயக்கமாகும். அசாம், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றன.

7. ‘துல்லிய அணுகுமுறை ரேடார்’ என்ற புதிய பாதுகாப்பு அமைப்பானது எங்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது?

அ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஆ. கேரளா

இ. இலட்சத்தீவுகள்

ஈ. சென்னை

  • கடற்படைத் தலைவர் அட்மிரல் R ஹரி குமார் தனது மூன்று நாள் பயணத்தின்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள INS உட்குரோஷில் துல்லிய அணுகுமுறை ரேடாரை (Precision Approach Radar – PAR) அறிமுகம் செய்துவைத்தார். சென்னை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட PAR, கனமழை மற்றும் மூடுபனிபோன்ற சவாலான காலசூழ்நிலைகளில் விமானம் சரியான முறையில் தரையிறங்குவதை உறுதி செய்கிறது. துல்லியமான கிடைமட்ட மற்றும் செங்குத்து வழிகாட்டுதல்கள் இது வழங்குகிறது.

8. 2024 – ICC U-19 உலகக்கோப்பையை வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரேலியா

இ. தென்னாப்பிரிக்கா

ஈ. நியூசிலாந்து

  • 2024 பிப்.11ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் நடந்த இறுதிப் போட்டியில் 79 இரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2024 ICC U-19 உலகக் கோப்பையை வென்றது. இது ஆஸ்திரேலியாவின் நான்காவது ICC U-19 உலகக்கோப்பை வெற்றியாகும். 2024 U-19 கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிகள் 2024 ஜனவரி.19 முதல் பிப்ரவரி.11 வரை நடைபெற்றது.

9. CM ELEVATE தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடங்கிய மாநில அரசு எது?

அ. சிக்கிம்

ஆ. மேகாலயா

இ. அஸ்ஸாம்

ஈ. மணிப்பூர்

  • மேகாலயா மாநில முதலமைச்சர் கான்ராட் K சங்மா, அடுத்த 3-4 ஆண்டுகளில் பல்வேறு வணிகங்களில் 20,000 -க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்க்கு ஆதரவளிக்கும் நோக்கில், மாநில நிதியுதவியுடன் கூடிய CM-ELEVATE திட்டத்தைத் தொடங்கினார். 75% வரை மானியம் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்துவதற்கான விரிவான ஆதரவை வழங்கும் இத்திட்டத்திற்காக அரசாங்கம் `300 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு வேலைகளை சார்ந்திருப்பதை குறைக்கவும், தனியார் துறை வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்கவும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை கான்ராட் K சங்மா வலியுறுத்தினார்.

10. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக யுனானி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 11 பிப்ரவரி

ஆ. 12 பிப்ரவரி

இ. 16 பிப்ரவரி

ஈ. 17 பிப்ரவரி

  • உலக யுனானி நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி.11 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமூக சீர்திருத்தவாதியும் யுனானி அறிஞருமான ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்தநாளை நினைவுகூருகிறது. ஹக்கீம் அஜ்மல் கான், யுனானி மருத்துவத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக அறியப்படுகிறார். புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனரும் இவர்தான். 2024 – உலக யுனானி நாளுக்கானக் கருப்பொருள், “Unani Medicine for One Earth, One Health”.

11. GROW அறிக்கை மற்றும் இணையதளத்துடன் தொடர்புடையது எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்

இ. NITI ஆயோக்

ஈ. ஜவுளி அமைச்சகம்

  • NITI ஆயோக், “Greening and Restoration of Wasteland with Agroforestry” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரவுகளை அனைவரும் அணுகம்படியான இணையதளம் ஒன்றையும் அது தொடங்கியுள்ளது. புவன் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ள, ‘GROW’ ஆனது, இந்தியா முழுவதும் வேளாண் காடுகளின் பொருத்தமுடைமையை மதிப்பிடுவதற்கு தொலையுணரி & GISபோன்ற மேம்பட்ட தொழினுட்பங்களைப் பயன்படுத்துகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேர் பாழ்நிலங்களை மீட்டெடுப்பதையும், 2.5 முதல் 3 பில்லியன் டன் கரிமத்தேக்கத்தை உருவாக்குவதையும் இது இலக்காகக்கொண்டுள்ளது.

12. உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு நிதியத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராச்சியம்

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

  • அமெரிக்காவின் வாஷிங்டன் DCஇல் நடைபெற்ற உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு நிதியத்தின் முதல் கூட்டம், 2022இல் COP15இன்போது முன்மொழியப்பட்ட, நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை நிர்ணயித்தது. பல்லுயிர், காலநிலை மாற்றம், இயற்கை புதுப்பித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவற்றுக்குத் தீர்வுகாணும் உலகளாவிய முன்னெடுப்புகளுக்கு GEFஇன் உறுப்பு அரசாங்கங்கள் $1.1 பில்லியன் வழங்கின.

13. ‘Fire Capped Tit’ சார்ந்த இனம் எது?

அ. பறவை

ஆ. மீன்

இ. தாவரம்

ஈ. சிலந்தி

  • பறவையிலாளர்கள் அண்மையில், ‘Fire Capped Tit’ என்றவொரு சிறிய பறவை இனத்தைக் கண்டறிந்தனர். ‘Paridae’ குடும்பத்தின் ஒருபகுதியான இது, குளிர்காலத்தை முன்னிட்டு தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. இமயமலையைப் பூர்வீகமாகக்கொண்ட இது செப்டம்பரில் மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் கேரளாவிற்குத் தெற்கே இடம்பெயர்ந்து பிப்ரவரி/மார்ச் மாதங்களில் மீண்டும் தங்களின் பூர்வீகத்திற்குத் திரும்புகின்றன.

14. அண்மையில் காலமான தத்தாஜிராவ் கிருஷ்ணா ராவ் கெய்க்வாட்டுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கால்பந்து

ஆ. கிரிக்கெட்

இ. ஹாக்கி

ஈ. குத்துச்சண்டை

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கிருஷ்ணா ராவ் கெய்க்வாட் (95) அண்மையில் காலமானார். அவர் பரோடா கிரிக்கெட் அணியை 1957-58 இரஞ்சிக் கோப்பையின்போது வழிநடத்தி வெற்றிபெற காரணமாக அமைந்தார்.

15. அண்மையில், IEEE கேரளா பிரிவானது KPP நம்பியார் விருதை யாருக்கு வழங்கியுள்ளது?

அ. S சோமநாத்

ஆ. பழனிவேல் வீரமுத்துவேல்

இ. M சங்கரன்

ஈ. ரிது கரிதல் ஸ்ரீவஸ்தவா

  • சந்திரயான்-3இல் முக்கிய பங்கு வகித்ததற்காகவும், ISRO பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காகவும் ISRO தலைவர் S சோமநாத்துக்கு IEEE கேரளா பிரிவின் 2024 KPP நம்பியார் விருது வழங்கப்பட்டுள்ளது. மின்னணு துறையின் முன்னோடியான KPP நம்பியார் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, IEEEஇன் தொலைநோக்குடன் இணைந்த தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொள்ளும் கேரள மாநிலத்தைச் சார்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்களை கெளரவிக்கிறது.

16. நாட்டில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, எந்த சர்வதேச நிர்வாகக் குழுவுடனான ஓர் ஒப்பந்தத்தில் மத்திய கல்வி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?

அ. FIFA

ஆ. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம்

இ. சர்வதேச கால்பந்து சங்க வாரியம்

ஈ. சர்வதேச ஒலிம்பிக் குழுமம்

  • அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) மற்றும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான FIFA ஆகியவற்றுடன் கல்வியமைச்சகத்தின் பள்ளிக்கல்வி & எழுத்தறிவுத்துறை இணைந்து நாடு முழுவதுமுள்ள பள்ளி மாணாக்கருக்காக FIFAஇன், “பள்ளிகளுக்கு கால்பந்து” (F4S – Football for Schools) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், பள்ளியமைப்பில் மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 2024 பிப்.9 அன்று, ஒடிஸா மாநிலத்தின் 17 மாவட்டங்களைச்சேர்ந்த 1260 பள்ளிகளுக்கு 6848 கால்பந்துகள் விநியோகிக்கப்பட்டன. இந்தத்திட்டத்தின்கீழ், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட FIFA கால்பந்துகள் படிப்படியாக நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 1.50 இலட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பயனடையும்.

17. ஹஸ்ட்சல் மினார் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. ஜம்மு & காஷ்மீர்

ஆ. இராஜஸ்தான்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. தில்லி

  • மேற்கு தில்லியில் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஹஸ்ட்சல் மினார், 1634இல் ஷாஜஹானின் ஆட்சியின் போது கட்டிமுடிக்கப்பட்டது. ‘சிறு குதுப்மினார்’ என்றும் அழைக்கப்படும் இது லகோரி செங்கற்கள் மற்றும் சிவப்பு மணற்கற்களால் முழுவதும் கட்டப்பட்டுள்ளது. இது ஐந்து மாடிகளுடன் 17 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. ஷாஜஹானால் வேட்டையாடும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட இது, 2018ஆம் ஆண்டில் தில்லி அரசாங்கத்தின் நினைவுச்சின்னப் பாதுகாப்பிற்கான நான்காம் கட்டத் திட்டத்தின்கீழ், ‘கிரேடு A’ பாரம்பரிய மதிப்பைப் பெற்றது.

18. இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத்தலைவரான காலஞ்சென்ற ஜெனரல் பிபின் இராவத்தின் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?

அ. காந்தி நகர்

ஆ. உதகமண்டலம்

இ. டேராடூன்

ஈ. சண்டிகர்

  • பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், டேராடூனில் உள்ள டான்ஸ்பிரிட்ஜ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முதல் பாதுகாப்புப் படைத்தலைவரான மறைந்த ஜெனரல் பிபின் இராவத்தின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார். தொலைதூர எல்லைச்சாவடியில் காயமடைந்த பிபின் இராவத், இந்தியாவின் பாதுகாப்பு உத்திகளை வலுப்படுத்திய சம்பவத்தை ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்.

19. தேசிய பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 13 பிப்ரவரி

ஆ. 15 பிப்ரவரி

இ. 16 பிப்ரவரி

ஈ. 17 பிப்ரவரி

  • இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்.13ஆம் தேதியன்று தேசிய பெண்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 2024 பிப்.13 ஆனது, “இந்தியாவின் நைட்டிங்கேல்” சரோஜினி நாயுடுவின் 145ஆவது பிறந்தநாளைக் குறிக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய நபராகவும், புகழ்பெற்ற கவிஞராகவும் அவர் விளங்கினார். பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததற்காக அவரது பிறந்தநாள் தேசிய பெண்கள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

20. அண்மையில், பீகார் மாநிலத்தில் உள்ள பாப்ரூர் கிராமப் பஞ்சாயத்தில், ‘ஸ்மார்ட் கிராமப் பஞ்சாயத்து’ என்ற சோதனை அடிப்படையிலான திட்டத்தை தொடக்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

  • மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பெகுசராய் மாவட்டத்தின் பராவுனி தொகுதிக்குட்பட்ட பாப்ரூர் கிராமப்பஞ்சாயத்தில் பிரதமரின் Wi-Fi அணுகல் கட்டமைப்பு (PM-WANI) சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கூடிய, ‘ஸ்மார்ட் கிராமப்பஞ்சாயத்து: கிராமப்பஞ்சாயத்தை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கிய புரட்சி’ என்ற பரிசோதனை அடிப்படையிலான திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத்திட்டத்தின்கீழ் அனைத்து கிராமப்பஞ்சாயத்துகளுக்கும் Wi-Fi சேவைகளை வழங்கிய பீகாரின் முதல் மாவட்டம் என்ற பெயரைப் பெகுசராய் மாவட்டம் பெற்றுள்ளது.

21. பத்து நகரங்கள் மேம்பாட்டுக் கருத்துருவைத் (Ten Cities Development Concept) தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. மேகாலயா

இ. அஸ்ஸாம்

ஈ. மணிப்பூர்

  • அஸ்ஸாம் மாநில அரசு நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்காக, ’10 நகரங்கள் மேம்பாட்டுக் கருத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. தின்சுகியா, திப்ருகார், சிவசாகர், ஜோர்காட், கோலாகாட், நாகோன், தேஜ்பூர், வடக்கு-லக்கிம்பூர், பொங்கைகான், சில்சார், கரீம்கஞ்ச், துப்ரி மற்றும் ஹப்லாங்/திபு உள்ளிட்ட பத்து நகரங்களை மையமாகக் கொண்ட இந்தத் திட்டம், பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டும், ‘கலங்கரை விளக்கங்களாக’ செயல்படும். நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சமச்சீர் வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ளடங்கிய வளர்ச்சிக்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்தை இது கொண்டுள்ளது.

22. ’பிரபவ்’ என்ற CRISIL ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள வங்கி எது?

அ. SIDBI

ஆ. NABARD

இ. HDFC

ஈ. SBI

  • ‘தொடங்கிடு இந்தியா’ செயல் திட்டத்தின்கீழ், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியத்தின் தாக்கத்தை மதிப்பிடும் ‘பிரபவ்’ என்ற CRISIL ஆய்வறிக்கையை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) வெளியிட்டுள்ளது. DPIIT-க்காக SIDBIஆல் நிர்வகிக்கப்படும், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியம் முதலீடுகளை எளிதாக்குகிறது மற்றும் புத்தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம் மற்றும் நிதிச்சேவைகளில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவுகிறது. மத்திய நிதி அமைச்சகமும் DPIIT அதிகாரிகளும் SIDBIஇன் இப்பயனுள்ள திட்ட மேலாண்மைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

23. அண்மையில், இந்தியாவும் வங்காளதேசமும் தங்களது எந்த இரு துறைமுகங்களுக்கு இடையே கப்பல்களின் தொடக்க சோதனை ஓட்டத்தைத் தொடங்கின?

அ. பெட்ராபோல் லேண்ட் போர்ட் & கோஜடங்கா லேண்ட் போர்ட்

ஆ மையா துறைமுகம் & சுல்தான்கஞ்ச் துறைமுகம்

இ. பங்களாபந்தா லேண்ட் போர்ட் & மோங்லா துறைமுகம்

ஈ. அசுகஞ்ச் துறைமுகம் & மோங்லா துறைமுகம்

  • இந்தியாவும் வங்காளதேசமும் இணைந்து பிப்.12 அன்று இந்தியாவின் மையா துறைமுகம் மற்றும் வங்கதேசத்தின் சுல்தான்கஞ்ச் துறைமுகம் இடையே சரக்குக் கப்பல்களின் தொடக்க சோதனை ஓட்டத்தைத் தொடங்கின. இந்தோ மையாவிலிருந்து அரிச்சா வழியாக துப்ரி (NW-2) வரையிலான நீர்வழிப்பாதை, தற்போதைய துலியன்-மையா-கொல்கத்தா-IBP-துப்ரி நீர்வழிப்பாதையுடன் ஒப்பிடும்போது சுமார் 930 கிலோமீட்டர் தூரத்தைக் குறைக்கும்.

24. 2024 – உலக வானொலி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Radio: A century informing, entertaining and educating

ஆ. Radio and Trust

இ. Radio and Diversity

ஈ. Dialogue, Tolerance and Peace

  • 11ஆவது உலக வானொலி நாளானது 2024 பிப்.13 அன்று கொண்டாடப்பட்டது. 2024ஆம் ஆண்டு உலக வானொலி நாளுக்கானக் கருப்பொருள், “Radio: A century informing, entertaining and educating” என்பதாகும். இக்கருப்பொருள், வானொலியின் வரலாற்றையும் செய்தி, இசை, விளையாட்டு மற்றும் நாடகம் உட்பட பல்வேறு பகுதிகளில் அதன் தாக்கத்தை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வானொலியின் தற்போதைய பரிணாம வளர்ச்சியையும் இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வீடுகளில் சூரிய மின்சக்தி தயாரிக்கும் குடும்பங்களுக்கு 300 அலகு இலவச மின்சாரம்: பிரதமரின் திட்டம் தொடக்கம்.

வீட்டு மாடிகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்தியுள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 300 அலகு இலவச மின்சாரம் வழங்கும், “பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை” பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். நாட்டில் சூரிய மின்சக்தி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அதிகரிக்கும் முயற்சியில், `75,000 கோடி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு `15,000-`18,000 வரை ஒரு குடும்பத்தினரால் சேமிக்க முடியும்.

2. உரிமையியல் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடியின இளம்பெண்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஸ்ரீபதி தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளார்.

முதல் பழங்குடியினப் பெண்: நீதிபதி பதவிக்கான தேர்வில் பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து முதல் பெண்ணாக ஸ்ரீபதி, தேர்ச்சி பெற்றிருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் பொதுமக்கள் பதிவேடு கட்டமைப்பு (CRS) அதிமுக்கிய பங்கு வகிக்கிறது.

3. பட்டுக்கோட்டை புலவர் சா. பன்னீர்செல்வம் காலமானார்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர் சா. பன்னீர்செல்வம் (84) காலமானார். 1957இல் பெரியார் ஈ வெ ரா நடத்திய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றுள்ளார். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான செந்தமிழ்ச்செல்வி இதழிலும், கரந்தை தமிழ்ச் சங்கம் வெளியீடான தமிழ்ப்பொழில் இதழிலும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1991இல் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசு அறிவித்த கவிதைப்போட்டியில் பங்கேற்று விருதுபெற்றவர். ‘புதிய புரட்சிக்கவி’ என்னும் இவரது கவிதை நாடகம் கடந்த 2020ஆம் ஆண்டுக்கான நாடகப்பிரிவில் சிறந்த நூலாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

4. ‘நமக்கு நாமே’ திட்டம்.

நகர்ப்புற வளர்ச்சிக்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், ‘நமக்கு நாமே’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஒருபங்கு நிதியளித்தால், அரசின்சார்பில் கூடுதலாக இருபங்கு நிதிவழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்புத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், நீர்நிலைகள் புனரமைப்பது, தூர்வாருவது மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதற்குப் பொதுமக்களின் பங்களிப்புக்கு அதிகப்பட்ச வரம்பு ஏதும் இல்லை.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளை, ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘நட்புமிகு சென்னை’, ‘பசுமை சென்னை’, ‘தூய்மை சென்னை’, ‘நீர்மிகு சென்னை’, ‘எழில்மிகு சென்னை’, ‘நலமிகு சென்னை’, ‘பாதுகாப்பான சென்னை’, ‘சீர்மிகு சென்னை’ உள்ளிட்ட கருப்பொருளின்கீழ் சமூக பங்களிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

5. விண்மீன் ஊடுகதிர் ஆய்வைத் தொடங்கியது எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்!

கருந்துளை, ஊடுகதிர் தன்மைகள், நியூட்ரான் விண்மீன்கள் உள்ளிட்ட விண்வெளி நிகழ்வுகளை ஆய்வதற்காக எக்ஸ்போசாட் எனும் செயற்கைக்கோளை PSLV C-58 ஏவுகலம்மூலம் கடந்த ஜனவரி.01ஆம் தேதி விண்ணில் செலுத்தியது ISRO. இதில் எக்ஸ்பெக்ட் (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய இரு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை முறையே பெங்களூரில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையமும், இராமன் ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கியுள்ளன.

எக்ஸ்பெக்ட் சாதனம் X-கதிர்களின் நீண்டகால செயல்பாடுகளை புரிந்துகொள்ளும் வகையில் அதன் நிறமாலை & துருவப்படுத்தல் செயல்பாடுகளை கண்காணிக்கும் திறன்கொண்டது. அவ்வகையில், கடந்தசில நாள்களுக்கு முன்பு காசியோபியா-ஏ என்ற விண்மீன் வெடிப்பின் (சூப்பர் நோவா) துகள்களிலிருந்து வெளிப்படும் ஒளியை எக்ஸ்பெக்ட் கருவி படம்பிடித்தது. இந்நிலையில், கடந்த ஜன.15-18ஆம் தேதி காலகட்டத்தில் போலிக்ஸ் கருவி விண்வெளியில் உள்ள நியூட்ரான் விண்மீன்களில் இருந்து வெளியேறும் ஊடுகதிர்களின் (X-ரே) துருவ முனைப்பு அளவை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

6. அபுதாபியில் முதல் ஹிந்து கோயில்: பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். BAFS சுவாமிநாராயண் சம்ஸ்தாவால் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது.

7. 132 சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பாளர்களுக்கு பரிசு.

தமிழ் மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் 33 வகைப்பாடுகளில் வரப்பெற்ற சிறந்த படைப்புகளை அளித்த நூலாசிரியர்களுக்கும், அவற்றை பதிப்பித்த பதிப்பாளர்களுக்கும் ஆண்டுதோறும் காசோலை, பாராட்டுச்சான்றிதழ் ஆகியவை 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

8. தாட்கோ சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்துக்காக கடந்த 1974இல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!