TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 17th & 18th February 2024

1. பசுமை ஹைட்ரஜனை (H) பின்வரும் எந்தத் துறைகளில் பயன்படுத்துவதற்கான முன்னோடித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது?

அ. எஃகு துறை

. போக்குவரத்துத் துறை

இ. தொழிற்துறை

ஈ. கப்பற்துறை

  • இந்திய அரசாங்கம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின்மூலம், தேசிய பசுமை ஹைட்ரஜன் (H) இயக்கத்தின்கீழ், போக்குவரத்துத் துறையில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் முன்னோடித் திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் மின்பகுப்பிகளின் விலை குறைந்துவருவதால், பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் வாகனங்கள் விரைவில் மலிவான விலையில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது, திட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து, பசுமை ஹைட்ரஜன் (H), தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் துணைபுரியும் புதைபடிவ எரி பொருட்களைப் போக்குவரத்திலிருந்து நீக்குவதற்கான சோதனை அடிப்படையிலான திட்டங்களை நடத்தும்.

2. காசினி-ஹியூஜென்ஸ் பணியின் முதன்மை நோக்கம் என்ன?

அ. சிறுகோள்களின் பொருட்கலவையைப் பகுப்பாய்வு செய்தல்

ஆ. கருந்துளைகள்பற்றி ஆராய்தல்

இ. சனியின் வளிமண்டலம் மற்றும் நிலவுகளை ஆய்வுசெய்தல்

ஈ. புறக்கோள்களைத் தேடுவது

  • NASAஇன் காசினி விண்கலம், ESA மற்றும் ASI உடனான கூட்டுப்பணியின் ஒருபகுதியாக, சமீபத்தில் சனியின் நிலவான மீமாஸின் பனிபடர்ந்த மேற்பரப்புக்கடியில் அமைந்த ஒரு பரந்த கடற்பரப்பு குறித்த தகவலை வெளியிட்டது. 1997இல் ஏவப்பட்ட காசினி, 2004 முதல் 2017 வரை சனியைச் சுற்றி வந்து சனி மற்றும் அதன் நிலவுகள்பற்றிய முக்கிய தகவல்களை வழங்கியது. 2,125 கிலோகிராம் எடையுள்ள இது, டைட்டனின் மேற்பரப்பை ரேடார்மூலம் வரைபடமாக்கி சனியின் காந்தப்புலத்தை ஆய்வுசெய்தது. 349 கிலோ எடையுள்ள காசினியின் ஹ்யூஜென்ஸ் ஆய்வு ஊர்தி, டைட்டனில் தரையிறங்கி, ஆறு நிலவுகளைக் கண்டுபிடித்தது.

3. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எந்த மாநிலத்தில் எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த, ‘கொற்றவை சிற்பத்தைக்’ கண்டுபிடித்தனர்?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கேரளா

  • தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை அருகே, பல்லவர் காலத்தைச்சேர்ந்த எட்டாம் நூற்றாண்டின், ‘கொற்றவை சிற்பம்’ ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல்லவர்கள் 3 முதல் 9ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் குறிப்பாக வட தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவை ஆட்சிபுரிந்து வந்தனர். பௌத்தம், சமணம் மற்றும் பிராமண மதத்தை ஆதரித்த அவர்கள் இசை, ஓவியம் மற்றும் இலக்கியத்தின் புரவலர்களாக இருந்தனர். ஆந்திர சாதவாகனர்கள் வழி வந்தவர்களான பல்லவர்கள், நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக நிறுவி ஆட்சிபுரிந்தனர்.

4. நாஷா முக்த் பாரத் அபியான் வாகனம் வெளியிடப்பட்ட இடம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. தில்லி NCR

ஈ. பீகார்

  • சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பிரம்ம குமாரிகளுடன் இணைந்து, போதைப்பொருள் துஷ்பிரயோக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிப்.14 அன்று தில்லி-NCRஇல் NMBA வாகனத்தை அறிமுகப்படுத்தியது. நாஷா முக்த் பாரத் அபியானின்ஒரு பகுதியாக, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் தீங்கான விளைவுகளைப் பற்றி இளையோர்க்குக் கற்பிப்பதில் இம்முயற்சி கவனம் செலுத்துகிறது. நடமாடும் NMBA வாகனம் பிரச்சாரத்தின் பரவலையும் தாக்கத்தையும் தில்லி-NCR முழுவதும் விரிவுபடுத்துகிறது.

5. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125, பின்வருவனவற்றில் எதை முதன்மையாகக் குறிக்கிறது?

அ. வகுப்பினரிடையே வெறுப்பை ஊக்குவிப்பது

ஆ. மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பராமரிப்பு

இ. மரணம் விளைவிக்கும் குற்றம்

ஈ. இளங்குற்றவியல் நீதிபதி

  • மணமுறிவு செய்த முஸ்லிம் பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125இன்கீழ் ஜீவனாம்சம் பெறமுடியுமா என்பதை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. பிரிவு 125, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான பராமரிப்பு ஆகியவற்றுக்கான நிதியுதவி கோரிக்கைகளை சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. ஏற்பு அல்லது மறுப்பு, பிரதிவாதியைச் சார்ந்திருத்தல், பணம் செலுத்த வேண்டிய நபரின் தகுதி மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மொத்த தொகையை நீதிமன்றம் தீர்மானித்தல் ஆகியவை இதிலடங்கும்.

6. முதலாவது டிஜிட்டல் இந்தியா எதிர்கால திறன் உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. இந்தூர்

இ. சென்னை

ஈ. கௌகாத்தி

  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது தேசிய மின்னணு & தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் 2024 பிப்.15 அன்று கௌகாத்தியில் முதலாவது டிஜிட்டல் இந்தியா எதிர்கால திறன் உச்சி மாநாட்டை நடத்தியது.
  • அடுத்த தலைமுறை அதிநவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், குறைகடத்திகள், ரோபோடிக்ஸ், போன்றவற்றில் இளம் இந்தியர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்தச் சூழலில் இந்த உச்சிமாநாடு இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் திறன் மையமாக மாற்றுவது குறித்து விவாதித்தது. இந்த உச்சிமாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பங்கேற்பாளர்களும், பல்வேறு கண்காட்சிகளும் இடம்பெற்றன.

7. பன்னோக்கு ஆக்டோகாப்டரை உருவாக்கியதற்காக மதிப்புமிக்க விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர் யார்?

அ. பவன் குமார் யாதவ்

ஆ. வரீந்தர் சிங்

இ. இஷார் சிங்

ஈ. அமந்தீப் ஜாகர்

  • இந்திய இராணுவத்தின் சீக்கியப் படைப்பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் வரீந்தர் சிங், இராணுவத் தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து விஷிஷ்ட் சேவா பதக்கத்தைப் பெற்றார். பன்னோக்கு ஆக்டோகாப்டர், டிரோன் தொழில்நுட்பத்தில் அற்புதமான முன்னேற்றங்களைக் காட்டுகிறது, வழக்கமான கண்காணிப்புக்கு அப்பால் இணையற்ற பல்துறைத்திறனை வழங்குகிறது.

8. இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. இமாச்சல பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • இந்தியா தனது முதலாவது ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவையை (HEMS) உத்தரகாண்டில் அறிமுகப்படுத்த உள்ளது என்று சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்தார். ரிஷிகேஷில் உள்ள AIIMSஐ சார்ந்த HEMS ஆனது, 150 கிமீட்டர் சுற்றளவில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் தீவிர சிகிச்சைக்காக விமானத்தில் ஏற்றிச்செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விபத்துக்குப் பிந்தைய முக்கியத்துவம் நிறைந்த, ‘பொன்னேரத்தில்’ எய்ம்ஸில் உள்ள முக்கிய சிகிச்சையை அணுக மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் உள்ள நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் போக்குவரத்து கிடைக்கும் நோக்கில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த முன்னெடுப்பு தொடங்கப்படவுள்ளது.

9. ‘SUFALAM’ என்றால் என்ன?

அ. கிராமப்புறங்களில் தொழில்முனைவை ஊக்குவித்தல்

ஆ. அரசு நிறுவனங்களில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்

இ. உணவு பதப்படுத்தும் துறைசார் தொழில்முனைவோருக்கான நிகழ்வு

ஈ. புத்தொழில்களுக்கான மென்பொருள்களை உருவாக்குதல்

  • புது தில்லியில் 2024 பிப்.13-14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள், ‘SUFALAM: ஆர்வமுள்ள தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான புத்தொழில் நிறுவனங்கள் அமைப்பு’ நிகழ்வை மத்திய உணவு பதனத் தொழிற்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தொடக்கிவைத்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த அமர்வுகளின் போது, நாட்டின் புத்தொழில் நிறுவனங்களின் பங்கு, புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த முயற்சி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்துப் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

10. உலக நீர்யானை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 15 பிப்ரவரி

ஆ. 16 பிப்ரவரி

இ. 17 பிப்ரவரி

ஈ. 18 பிப்ரவரி

  • தோராயமாக 115,000 முதல் 130,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள நீர்யானைகளின் அழிந்துவரும் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலக நீர்யானை நாள், ஆண்டுதோறும் பிப்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. வேட்டையாடுதல், நீரில்லாமை, எந்திரமயமாக்கப்பட்ட வேளாண்மை மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை இவ்வின அழிவிற்கான அச்சுறுத்தல்களில் அடங்கும். இதனை முன்னிலைப்படுத்தவும், பாதிக்கப்படக்கூடிய இந்த உயிரினங்களின் எதிர்காலத்தைக் காப்பதற்கான பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு வாதிடவுமாக இந்த நாள் ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.

11. ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பானது எந்த நாட்டின் மல்யுத்த சம்மேளனத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. வியட்நாம்

  • ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பானது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) மீதான தடையை நீக்கியது. நியாயமான காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்தத்தவறியதால், 2023 ஆக.23 அன்று WFI தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தத் தடைநீக்கத்தால், இந்திய மல்யுத்த வீரர்கள் இனி வரவிருக்கும் போட்டிகளில் தங்கள் நாட்டின் கொடியின் கீழ் போட்டியிட முடியும்.

12. பார்சிங்சர் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஒடிசா

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், கரியமில வாயு (CO2) உமிழ்வை முற்றிலுமாக தவிர்ப்பதை நோக்கி முன்னேறுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோதி 300 MW சூரிய மின்னுற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான NLC இந்தியா நிறுவனம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மத்திய பொதுத் துறை நிறுவன திட்டத்தின் ஒருபகுதியாக இராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்சரில் 300 MW சூரிய மின்சக்தித் திட்டத்தை நிறுவுகிறது.
  • அரசு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். நாட்டில் 1 ஜிகாவாட் சூரியமின் உற்பத்தி திறன் மைல்கல்லை எட்டிய முதலாவது மத்திய பொதுத்துறை நிறுவனம் NLCIL ஆகும். இது ஆண்டுதோறும் சுமார் 750 மில்லியன் அலகு பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புவிக்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டது கார்டோசாட்-2 செயற்கைக்கோள்!

புவி கண்காணிப்பு பணிகளுக்காக விண்ணுக்கனுப்பப்பட்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருப்பிக் கொண்டு வரப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழவைக்கப்பட்டது. ISRO சார்பில் வடிவமைக் -கப்பட்ட அதி நவீனமும், உயர்துல்லியமும்கொண்ட படாமக்கல் செயற்கைக்கோளான கார்டோசாட்-2, கடந்த 2007ஆம் ஆண்டு ஜன.10ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

நகர்ப்புற திட்டமிடல் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான மிகத்துல்லியமான நிழற்படங்கள் அச்செயற்கைக் கோள்மூலம் எடுக்கப்பட்டன. 1 மீட்டருக்கும் குறைவான தொலைவிலிருந்து எடுக்கப்பட்டதைப் போன்ற துல்லியத் தன்மையுடன் அந்த புகைப்படங்கள் இருந்ததாக ISRO தெரிவித்தது.

விண்வெளிக் கழிவுகளால் ஏற்படும் இடர்களைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை முன்னெடுத்ததாக ISRO தெரிவித்துள்ளது. விண்வெளியில் 10 செமீ அளவுக்கு அதிகமான கழிவுகள் 25 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 1 – 10 செமீ அளவிலான கழிவுகள் 5 லட்சத்துக்கும் அதிகமாகவும், 1 மிமீக்கும் அதிகமான அளவுகொண்ட கழிவுகள் 10 கோடியும் உள்ளதாக NASA தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2. 58ஆவது ஞானபீட விருது: உருதுக்கவிஞர் குல்ஸார், சமற்கிருத அறிஞர் இராம்பத்ராசார்யா தேர்வு.

உருதுக்கவிஞர் குல்ஸார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர் இராம்பத்ராசார்யா ஆகியோர் 58ஆவது ஞானபீட விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இலக்கியத்துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும், ‘ஞானபீட விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

குல்ஸாரின் படைப்புகள்: ‘சம்பூரண் சிங் கல்ரா’ என்ற இயற்பெயர்கொண்ட குல்ஸார் ஹிந்தி திரையுலகில் நீண்ட காலம் இயங்கி வருவதுடன் உருதுக்கவிஞராகவும் விளங்குகிறார். இவர் 2002ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார். 2004இல், ‘பத்ம பூஷண்’ விருதையும், 2013இல், ‘தாதா சாஹேப் பால்கே’ விருதையும் பெற்றுள்ளார்.

இராம்பத்ராசார்யா: வைஷ்ணவ வழிபாட்டுப் பிரிவினரான இராமாநந்தா அமைப்பைச் சேர்ந்த 4 ஜகத்குருக்களில் இராம்பத்ராசார்யாவும் ஒருவர். 22 மொழிகள் பேசும் இவர் சமற்கிருதம், ஹிந்தி, மைதிலி உள்ளிட்ட மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார். 2015ஆம் ஆண்டு, ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றுள்ளார்.

ஞானபீட விருது: இந்தியாவின் மிகவுயரிய இலக்கிய விருதான, ‘ஞானபீட விருது’ 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைச் சேர்ந்த படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவோருக்கு `21 இலட்சம் பரிசுத்தொகை, வாக்தேவி சிலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சமற்கிருத மொழிக்கு இரண்டாவது முறையாகவும் உருது மொழிக்கு ஐந்தாவது முறையாகவும் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

3. விழுப்புரத்தில் `31 கோடியில் மினி டைடல் பூங்கா.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் `31 கோடியில் 63,000 ச.அ பரப்பில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள, ‘மினி டைடல்’ பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட முதல் மினி டைடல் பூங்கா இதுவாகும்.

தொழில்நுட்பக் கட்டடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் ELCOT சார்பில் `80.55 கோடி முதலீட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 123.23 ஏக்கர் பரப்பு சிறப்புப் பொருளாதார மண்டலமாக உள்ளது.

“மக்கள் விரைந்து அறிவும் ஞானமும்பெற தாய்மொழியே எல்லாவகையிலும், பயிற்று மொழியாக இருக்கவேண்டும்.”

  • ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர்.

18-02-2024: ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர் அவர்களின் 165ஆவது பிறந்தநாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!