TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 17th October 2023

1. ‘உலகளாவிய பட்டினி குறியீடு – 2023’இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 101

ஆ. 111 🗹

இ. 121

ஈ. 131

  • உலக பட்டினி குறியீடு-2023இல், இந்தியா 125 நாடுகளில் 111ஆவது இடத்தில் உள்ளது. இது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பசியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளதைக் குறிக்கிறது. உலகளாவிய பட்டினி குறியீடு – 2023இல் 28.7 மதிப்பெண்ணை இந்தியா பெற்றுள்ளது. இது, பசியின் கொடுமை ‘தீவிரமானது’ என்ற வகையின் கீழ் வரும் மதிப்பெண்ணாகும்.

2. பன்னாட்டு செலவாணி நிதியமானது (IMF) 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி எத்தனை சதவீதம் இருக்கும் எனக் கணித்துள்ளது?

அ. 6.5%

ஆ. 6.3% 🗹

இ. 6.0%

ஈ. 5.8%

  • இந்தியப்பொருளாதார வளர்ச்சி குறித்து பன்னாட்டு செலவாணி நிதியம் (IMF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட 0.2% அதிகமாக இருக்கும் என்று பன்னாட்டு செலவாணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் வளர்ச்சி வீதம் 6.3%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பன்னாட்டு செலவாணி நிதியம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக வைத்திருந்தது. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கணித்துள்ளன.

3. 82 கிமீ நீளமுள்ள, ‘பத்மா பாலம் இரயில் இணைப்புத் திட்டம்’ தொடங்கப்பட்ட நாடு எது?

அ. நேபாளம்

ஆ. இந்தியா

இ. வங்காளதேசம் 🗹

ஈ. இலங்கை

  • சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்முயற்சியின்கீழ் கட்டப்பட்ட நாட்டின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமான 82 கிமீ நீளமுள்ள ‘பத்மா பாலம் இரயில் இணைப்பை’ வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடங்கிவைத்தார். இந்தத்திட்டத்திற்கு 39,246.80 கோடி டாக்கா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனத்தின் எக்ஸிம் வங்கி 21,036.70 கோடி டாக்கா கடனாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

4. ‘Passport to Earning (P2E)’ என்ற முன்னெடுப்பை நடத்துகிற அமைப்பு எது?

அ. DPIIT

ஆ. NITI ஆயோக்

இ. UNICEF 🗹

ஈ. உலக வங்கி

  • UNICEFஇன் உலகளாவிய ஈட்டலுக்காக கற்றல் திட்டமான, ‘Passport to Earning – P2E’இன்கீழ் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளையோருக்கு வெற்றிகரமாக பயிற்சியளித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது அவ்விளையோருக்கு முக்கியமான திறன்களையும் நிதி ரீதியிலான சுதந்திரத்தை அடைவதற்கான வழிகளையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

5. இஸ்ரோவின் இரண்டாவது விண்வெளி கலத்துறையுடன் தொடர்புடைய குலசேகரப்பட்டினம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கேரளா

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) இரண்டாவது விண்வெளி ஏவுதளம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் இன்னும் ஈராண்டு காலத்திற்குள் அமைக்கப்படவுள்ளது. இது தனியார் துறையால் உருவாக்கப்படும் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுகலங்களுக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்படும். சுமார் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் இதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

6. 2023இல் 16ஆவது வேளாண் அறிவியல் மாநாட்டினை நடத்துகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா

ஆ. கேரளா 🗹

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, கேரளத்தின் கொச்சியில் 16ஆவது வேளாண் அறிவியல் மாநாட்டைத் தொடக்கிவைத்தார். புகழ்பெற்ற வேளாண் பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், உழவர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
  • இந்திய வேளாண் உணவு அமைப்புகளை நீடித்த நிறுவனங்களாக மாற்றுவது பற்றிய அறிவியல் உரையாடலை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கமாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமமும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் இம்மாநாடு கேரளாவில் முதன்முறையாக நடைபெறுகிறது.

7. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘கிரிஷ், திரிஷ் மற்றும் பால்டிபாய்’ அனிமேஷன் தொடருடன் தொடர்புடையது எது?

அ. நிதி கல்வியறிவு

ஆ. இணைய பாதுகாப்பு

இ. சுதந்திர போராட்ட வீரர்கள் 🗹

ஈ. விளையாட்டு

  • மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம், கிராஃபிட்டி ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்த இரண்டு பருவங்களைக் கொண்ட அனிமேஷன் தொடரான KTB – பாரத் ஹே ஹம் தொடரின் முன்னோட்டக் காட்சியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இத்தொடரில் புகழ்பெற்ற அனிமேஷன் கதாபாத்திரங்களான கிரிஷ், திரிஷ் மற்றும் பால்டி பாய் தொகுத்து வழங்குகின்றனர். தூர்தர்ஷன், நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவை இந்த அனிமேஷன் தொடரை ஒரே நேரத்தில் ஒளிபரப்பும்.

8. டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவிற்கும் எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. பிரான்ஸ் 🗹

ஆ. இத்தாலி

இ. ஜெர்மனி

ஈ. நார்வே

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பிரெஞ்சுக் குடியரசின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழிற்றுறை மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் இடையே கையெழுத்தான டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • மேலும், இந்தியக் குடியரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பப்புவா நியூகினியாவின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

9. வணிகர்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கும் புதிய சமாதானத் திட்டத்தை அறிவித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. ஒடிசா

இ. தெலுங்கானா

ஈ. கர்நாடகா

  • நிலுவையில் உள்ள சுமார் `25,000 கோடி வரி நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கூடிய புதிய சமாதானத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் பெரும்பான்மை வழக்குகள் தமிழ்நாடு வணிகவரி சட்டம், மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் நிலுவையில் உள்ளவை. இப்புதிய சமாதானத் திட்டம், நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்கவும், வணிகர்கள் மற்றும் மாநில வணிகவரித்துறைக்கு இடையே உள்ள சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எண்ணுகிறது.

10. 2023ஆம் ஆண்டு உலக பார்வை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Love Your Eyes at Work 🗹

ஆ. Night Blindness

இ. Color Blindness

ஈ. Donate Your Eyes

  • உலக பார்வை நாளானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது. இது குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக்குறைபாடு குறித்து கவனத்தை ஈர்க்கும் ஓர் உலகளாவிய நிகழ்வாகும். இந்த ஆண்டு அக்.12ஆம் தேதி இந்த நாள் வருகிறது. “Love Your Eyes at Work” என்பது இந்த ஆண்டில் (2023) வரும் உலக பார்வை நாளுக்கானக் கருப்பொருளாகும்.

11. ‘தீவிரப்படுத்தப்பட்ட மிஷன் இந்திராதனுஷ் 5.0 இயக்கம்’ எந்த வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. 3

ஆ. 5 🗹

இ. 6

ஈ. 8

  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதன்மையான நோய்த்தடுப்பு இயக்கமான இந்திரதனுஷ் 5.0 (IMI 5.0) அக்.14 அன்று அனைத்து 3 சுற்றுகளையும் நிறைவு செய்தது. IMI 5.0 வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் நாடு முழுவதும் விடுபட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களைச் சென்றடைவதை உறுதிசெய்கிறது. இந்த ஆண்டு, முதல் முறையாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 5 வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. (முந்தைய பிரச்சாரங்களில் 2 வயது வரையிலான குழந்தைகள் இருந்தனர்).
  • செப்டம்பர்.30ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தின் முதல் இரு சுற்றுகளில் 34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

12. ‘நீலகிரி வரையாடு’ என்பது கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் மாநில விலங்காகும்?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திரப் பிரதேசம்

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ‘நீலகிரி வரையாடு’ திட்டத்தைத் தொடக்கிவைத்தார். `25 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், நீலகிரி வரையாட்டின் எண்ணிக்கை, பரவல் மற்றும் வாழ்விடத்தைப் பற்றிய அறிவை மேம்படுத்தவும், அதன் மரபு ரீதியான சூழல்களுக்கு அவற்றை மீண்டும் கொண்டு செல்லவும், அவற்றுக்கான உடனடி அச்சுறுத்தல்களுக்குத் தீர்வுகாணவும், பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பிட்ட இடங்களில் சூழல்-சுற்றுலா நடவடிக்கைகளை நிறுவவும் எண்ணுகிறது.

13. ‘சாகர் மைத்ரி’ முன்னெடுப்பைத் தொடக்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO 🗹

இ. இந்திய கடற்படை

ஈ. இந்திய கடலோர காவல்படை

  • DRDOஇன் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான ‘INS சாகர்த்வானி’ சாகர் மைத்ரி திட்டம்-4க்கு புறப்பட்டது. இது கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இந்தியப் பெருங்கடல் விளிம்பைச் சுற்றியுள்ள நாடுகளுடன் அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. DRDOஆல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சாகர் மைத்ரி’ முயற்சியானது, சமூக-பொருளாதாரப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அறிவியல் ஈடுபாட்டை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) திட்டத்துடன் இணைந்து செல்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகள்!

1896ஆம் ஆண்டு முதன்முதலாக கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. அடுத்த தொடரான 1900ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டு நீக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டை மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வந்தது. அதன் விளைவாக, தற்போது கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலில் கிரிக்கெட் மட்டுமின்றி பிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இருந்தன. கடைசியாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

2. சேலத்திலிருந்து பயணிகள் விமான சேவை மீண்டும் தொடக்கம்.

உதான் திட்டத்தின்கீழ் சேலத்தில் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெங்களூரு-சேலம்-ஹைதராபாத் விமான சேவை, சேலம்-சென்னை விமான சேவை வரும் 29ஆம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3. தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், நீலகரி, திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 17.09.2023 அன்று பிரதமரால் தொடக்கிவைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், `13 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!