TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st November 2023

1. 2023 – ‘ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின்’ கருப்பொருள் யாது?

அ. Integrity and ethics

ஆ. Say no to corruption, commit to the Nation 🗹

இ. Stay Vigilant; Stay Honest

ஈ. Information is Power

  • ஒவ்வோர் ஆண்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாடப்படும் வாரத்தில் ஊழல் தடுப்பு விழிப்பு உணர்வு வாரத்தை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடைப்பிடிக்கிறது. இவ்வாண்டு, இந்த விழிப்புணர்வு வாரம் அக்.30 முதல் நவ.5 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. “ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள்; தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள்” என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டு இவ்வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2. சமீபத்தில் தொடங்கப்பட்ட, ‘ஆபரேஷன் சேஷா’ என்பது எதன் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. ஆமைகள்

ஆ. வெட்டு மரம் 🗹

இ. அயல்நாட்டுப் பறவைகள்

ஈ. தந்தம்

  • செம்மரங்கள் உள்ளிட்ட மரங்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதைத் தடுக்கும் நோக்கோடு செயல்படும் ‘ஆபரேஷன் சேஷா’வின் நான்காம் கட்டத்தை மத்திய நிதியமைச்சர் தொடக்கிவைத்தார். புது தில்லியில் அமலாக்க விஷயங்களில் ஒத்துழைப்புக்கான முதல் உலகளாவிய மாநாட்டின் தொடக்க அமர்வின்போது அவர் இதனைத் தொடங்கினார். இந்நிகழ்வில் 40-க்கும் மேற்பட்ட தனிப்பயன் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

3. அண்மையில் காலமான சலீமுல் ஹக் என்பாருடன் தொடர்புடையது எது?

அ. அறிவியலாளர்

ஆ. தட்பவெப்பநிலை மாற்ற நிபுணர் 🗹

இ. பொருளாதார நிபுணர்

ஈ. எழுத்தாளர்

  • டாக்காவில் உள்ள தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் (ICCCAD) இயக்குநர் பேராசிரியர் சலீமுல் ஹக், தனது 71ஆம் வயதில் காலமானார். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் மதிப்பிற்குரிய நிபுணராக அவர் திகழ்ந்தார். பேராசிரியர் ஹக், வளரும் நாடுகளில், குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளை மையமாகக் கொண்டு, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், ஏற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை நிறுவுவதற்கு தனது பணியை அர்ப்பணித்தார்.

4. NPSஇல் உள்ள நிதியைப் பெறுவதற்கு, ‘penny drop’ என்ற சரிபார்ப்பு முறையைக் கட்டாயப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ. IRDAI

ஆ. PFRDA 🗹

இ. SEBI

ஈ. RBI

  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய முறைமை (NPS), அடல் ஓய்வூதியத் திட்டம் மற்றும் NPS லைட் ஆகியவற்றின் சந்தாதாரர்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கும், வங்கிக் கணக்கு விவரங்களில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கும் ‘penny drop’ என்ற சரிபார்ப்பைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தச் செயல்பாட்டின்கீழ், மத்திய பதிவேடு பராமரிப்பு முகமைகள் சேமிப்பு வங்கிக் கணக்கின் செயலில் உள்ள நிலையைச் சரிபார்த்து, வங்கிக் கணக்கு எண்ணில் உள்ள பெயரை PRANஇல் உள்ள பெயருடன் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொருத்தி சரிபார்க்கும்.

5. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, ODI உலகக்கோப்பைகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள கிரிக்கெட் அணி எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரேலியா 🗹

இ. இங்கிலாந்து

ஈ. தென் ஆப்பிரிக்கா

  • இந்தியா தனது 59ஆவது வெற்றியுடன் நியூசிலாந்தை விஞ்சியதைத் தொடர்ந்து, ODI உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு அடுத்தபடியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது அணியாக ஆனது. ஆஸ்திரேலியா 73 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

6. ஜோகூர் சுல்தான் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. ஹாக்கி 🗹

இ. கூடைப்பந்து

ஈ. கால்பந்து

  • இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி 6-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஜோகூர் சுல்தான் கோப்பை போட்டியின் அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்திய வீரர் அமந்தீப் லக்ரா ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். ஜோகூர் சுல்தான் கோப்பை என்பது மலேசியாவில் நடைபெறும் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச ஹாக்கிப் போட்டியாகும்.

7. WHOஇன் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவில் 188.3 மில்லியன் மக்கள் (37% பேர் மட்டுமே தனக்கு இந்நிலை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்) கீழ்காணும் எந்த உடல்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்?

அ. நீரிழிவு நோய்

ஆ. உயர் இரத்த அழுத்தம் 🗹

இ. கீல்வாதம்

ஈ. ஈழைநோய்

  • இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் குறித்த முதல் மாவட்ட அளவிலான ஆய்வு, சுகாதாரப் பராமரிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்களை அடையாளம் கண்டுள்ளது; இந்நிலையை நிவர்த்தி செய்வதற்கு ‘அதிக இலக்கு’ அணுகுமுறையின் அவசியத்தை அது வலியுறுத்துகிறது. இந்த நிலையில் உள்ளவர்களில் பாதி பேர் அவர்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தால், 2040ஆம் ஆண்டளவில் இந்தியாவில் குறைந்தது 4.6 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று மதிப்பிட்டுள்ளது. சமீபத்திய WHO அறிக்கையின்படி, இந்தியாவில் 188.3 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் 37% பேர் மட்டுமே அதை தெரிந்து வைத்துள்ளனர். அதில் 30% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளானர்; மேலும் 15% பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளனர்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ஹிரோஷிமா AI செயல்முறை’யுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. SAARC

. G7 🗹

இ. G20

ஈ. ASEAN

  • ஏழு தொழிற்துறை நாடுகளின் குழுமமானது (G7), மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான நடத்தை நெறிமுறையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. G7 நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து மே மாதம் ‘ஹிரோஷிமா AI செயல்முறை’ என்றழைக்கப்படும் மந்திரி மன்றத்தில் இந்தச் செயல்முறையைத் தொடங்கினர். உலகளவில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான AIஐ மேம்படுத்துவதை இக்குறியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது. மிகவும் மேம்பட்ட AI அமைப்புகளை உருவாக்கும் நிறுவனங்களின் திட்டங்களுக்கு தன்னார்வ வழிகாட்டுதலை இது வழங்கும்.

9. அண்டார்டிகா பகுதிகளில் முதன்முறையாக கீழ்க்காணும் எந்த நோயை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்?

அ. பறவைக் காய்ச்சல் 🗹

ஆ. அடைப்பான் நோய்

இ. வாய்ப்பூட்டு நோய்

ஈ. நீலநாக்கு வைரஸ்

  • பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு மையத்தின் அறிவியலாளர்கள் முதன்முறையாக அண்டார்டிக் பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இது அப்பகுதியில் உள்ள பென்குயின்கள் மற்றும் நீர் நாய்களின் நலம்குறித்த கவலை மற்றும் அச்சத்தை எழுப்பியுள்ளது. சாத்தியமான அறிகுறிகளுடன் கூடிய பறவைகள் மற்றும் அவற்றின் திடீர் இறப்புகள் குறித்த அறிக்கைகளுக்குப் பிறகு இது தெரிய வந்தது. மேலும் அடுத்தடுத்த சோதனைகள் இதனை உறுதிப்படுத்தியது.

10. ஓர் ஆய்வின்படி, 4.5 பில்லியன் முதல் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் செயல்பாட்டிற்கு உட்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற கோள் எது?

அ. வெள்ளி 🗹

ஆ. செவ்வாய்

இ. புதன்

ஈ. வியாழன்

  • பூமியின் சகோதரி என்று பொதுவாகக் கூறப்படும் வெள்ளி, தோராயமாக 4.5 பில்லியன் முதல் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் செயல்பாட்டிற்கு உட்பட்டிருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. வெள்ளியின் கரியமில வாயு மற்றும் நைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தின் உருவாக்கத்தில் டெக்டோனிக் தட்டுகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

11. ‘இராஷ்ட்ரிய கோகுல் இயக்கத்துடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் 🗹

  • நாட்டு மாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதன்மைத் திட்டமான இராஷ்டிரிய கோகுல் இயக்கமானது கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அனைத்து உள்நாட்டு இனங்களின் தரத்தையும் மேம்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட நாட்டு மாட்டு இனத்தை அதாவது கிர் நாட்டு மாட்டு இனத்தை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் தற்போது நோக்கம் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நாட்டு மாடுகளின் மரபணு தூய்மைக்கு ஆபத்தை ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தால் இது செயல்படுத்தப்படுகிறது.

12. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வுக்காக தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய நடிகர் யார்?

அ. ரஜினிகாந்த்

ஆ. கமல்ஹாசன்

இ. ராஜ்குமார் ராவ் 🗹

ஈ. வித்யா பாலன்

  • நடிகர் ராஜ்குமார் ராவ், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் கல்விக்கான தேசிய அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அந்த நடிகரின் பல்வேறு தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்களில் வாக்காளர் விழிப்புணர்வை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை இந்த ஒத்துழைப்பு உள்ளடக்கும். கடந்த மாதம் சச்சின் இரமேஷ் டெண்டுல்கரை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலின்போது, M S தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரெயில் வழித்தடம்.

திரிபுராவின் அகர்தலா மற்றும் வங்கதேசத்தின் அகௌரா இடையேயான புதிய ரெயில் வழித்தட திட்டம் உள்பட 3 முக்கிய இந்திய ஆதரவுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து காணொலிமூலம் தொடக்கிவைத்தனர். திரிபுராவின் நிச்சிந்தாபூர் மற்றும் வங்கதேசத்தின் கங்காசாகர் இடையே 12.24 கிமீ ரெயில் பாதை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அகர்தலா-அகௌரா இடையே உருவாகியுள்ள புதிய ரெயில் வழித்தடம் எல்லைதாண்டிய வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, வங்கதேச தலைநகரம் டாக்கா வழியாக அகர்தலா மற்றும் கொல்கத்தாவுக்கு இடையிலான 1,600 கிமீ தொலைவை 500 கிமீ-ஆக குறைத்து பயண நேரத்தை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக இந்திய அரசு `392.52 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மேலும், 65 கிமீ தொலைவுக்கு குல்னா-மோங்லா துறைமுகம் இடையே அகல ரெயில் பாதை, வங்கதேசத்தின் இராம்பாலில் அமைந்துள்ள மைத்ரீ அனல்மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் திறன்கொண்ட 2ஆவது நிலையம் ஆகிய 3 இந்திய ஆதரவுத் திட்டங்களின் தொடக்க விழா காணொலிமூலம் நடைபெற்றது.

2. மாநிலங்கள் உருவான தினம்.

ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை மாநிலங்களாகவும் இலட்சத்தீவுகள் யூனியன் பிரதேசமாகவும் கடந்த 1956ஆம் ஆண்டு உருவெடுத்தன. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் கடந்த 1966இல் உருவாகின. மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2000ஆம் ஆண்டில் தனி மாநிலமாக சத்தீஸ்கர் உருவெடுத்தது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நவ.1ஆம் தேதியை மாநிலங்கள் உருவான தினமாக கொண்டாடுகின்றன.

3. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குநராக வங்கதேச பிரதமரின் மகள் சைமா வாஸித் தேர்வு.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ்செயல்படும் தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பின் அடுத்த இயக்குநராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளும் மனநல மருத்துவ நிபுணருமான சைமா வாஸித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி பிராந்திய இயக்குநராகப் பதவியேற்கும் சைமா வாஸித், அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பார்.

உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்திய அமைப்புகளில் ஒன்றான தென்கிழக்காசிய பிராந்திய அமைப்பு தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டது. இதில் இந்தியா, வங்கதேசம், பூடான், வடகொரியா, வங்கதேசம், இந்தோனேசியா, மாலத்தீவுகள், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, திமோர் லெஸ்டே ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!