TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th & 21st January 2024

1. மீனவர்களுக்கான 2ஆம் தலைமுறை பேரிடர் எச்சரிக்கை அலைபரப்புக் கருவியை உருவாக்கிய அமைப்பு எது?

அ. இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆ. புவி அறிவியல் அமைச்சகம்

இ. DRDO

ஈ. ISRO

  • கடலில் மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2ஆம் தலைமுறை பேரிடர் எச்சரிக்கை அலைபரப்புக் கருவியை (Distress Alert Transmitter) ISRO உருவாக்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 20,000-க்கும் மேற்பட்ட DATகள் செயல்பாட்டில் இருந்துவருகின்றன. செயற்கைக்கோள் தொடர்புமூலம் மீனவர்கள் அவசரச் செய்திகளை அனுப்புவதற்கு இந்தத் தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான DAT-SG, அதிநவீன திறன்கள் மற்றும் அம்சங்களைப் பெற்றுள்ளது.

2. இருதரப்பு தொடருக்கான முதல் பெண் நடுநிலை நடுவராக ICCஆல் நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சூயு ரெட்ஃபெர்ன்

ஆ. நிதா தர்

இ. ஷிவானி மிஸ்ரா

ஈ. மேரி வால்ட்ரான்

  • இருதரப்பு தொடரில் நடுவராக பணியாற்றும் முதல் நடுநிலை (மூன்றாம் நாட்டைச் சேர்ந்தவர்) பெண் நடுவராக சூயு ரெட்ஃபெர்னை பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சில் (ICC) நியமித்துள்ளது. சூயு ரெட்ஃபெர்ன், வரவிருக்கும் ICC மகளிர் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான T20I போட்டிகளுக்கு நடுவராக இருப்பார். பெண்கள் சாம்பியன்ஷிப் தொடரில் நடுவராக செயல்படுவதற்கு மேலும் ஏழு நடுநிலை நடுவர்களையும் ICC நியமித்தது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Chang’e 6 திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா

இ. ரஷ்யா

ஈ. இங்கிலாந்து

  • நிலவிலிருந்து மாதிரியைச் சேகரித்து மீண்டும் பூமிக்குத் திரும்பும், சாங்’இ 6 திட்டம் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் சந்திரனில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்துருவத்திலிருந்து நிலவின் மாதிரிகளைச் சேகரிப்பதை நோக்கமாகக்கொண்ட இந்தத் திட்டம் மதிப்புமிக்க தரவுகளை அளிக்கும் என நம்பப்படுகிறது. நிலவின் புவியியலை புரிந்துகொள்ள உதவும்வகையில், சுமார் இரண்டு கிகி வரை மாதிரிகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES போன்றவையும் ஒத்துழைத்துள்ளன.

4. அண்மையில், எந்த மாநிலத்தில் தேசிய அளவிலான நிறுவனமான, ‘NACIN’ஐ பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாதெமியின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். அப்போது கடந்த ஒன்பது ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று NITI ஆயோக் வெளியிட்ட அண்மைய அறிக்கை குறித்து அவர் விளக்கினார்.
  • 500 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த அகாதெமி மறைமுக வரிவிதிப்பு (சுங்கம், மத்திய கலால் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகம் ஆகிய துறைகளில் திறனை வளர்ப்பதற்கான மத்திய அரசின் தலைமை நிறுவனமாகும். தேசிய அளவிலான உலகத்தரம்வாய்ந்த பயிற்சி நிறுவனமான இது இந்திய வருவாய்ப்பணி (சுங்கம் & மறைமுக வரிகள்) அதிகாரிகளுக்கும், மத்திய அரசு சார்ந்த சேவைகள், மாநில அரசுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் பயிற்சியளிக்கும். இந்தப் புதிய வளாகத்தை அமைத்ததன்மூலம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவு (AI), பிற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் தேசிய சுங்க, மறைமுக வரிகள் & போதைப்பொருள் தடுப்பு அகாதெமி கவனம் செலுத்தும்.

5. கிழக்குக் கடற்படையின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (செயல்பாடுகள்) நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ரியர் அட்மிரல் சாந்தனு ஜா

ஆ. துணை அட்மிரல் ராஜேஷ் பெண்டர்கர்

இ. அட்மிரல் R ஹரி குமார்

ஈ. அட்மிரல் வினய் சின்ஹா

  • 2024 ஜன.17 நிலவரப்படி, ரியர் அட்மிரல் சாந்தனு ஜா கிழக்குக் கடற்படையின் தலைமைப்பணியாளர் அதிகாரியாக (செயல்பாடுகள்) நியமிக்கப்பட்டுள்ளார். சாந்தனு ஜா, 1993ஆம் ஆண்டு NDA பட்டதாரியும் நவசேனா பதக்கத்தைப் பெற்றவருமாவார். தலைமைப்பணியாளர் அதிகாரி ஆவதற்கு முன்பு, சாந்தனு ஜா, கடற்படைத் தலைமையகத்தில் (உத்திகள், கருத்துருக்கள் மற்றும் மாற்றம்) தலைவராக இருந்தார்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பரிக்ரம பிரகல்பா’ திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஒடிசா

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

  • ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், 90 இந்திய கோவில்களின் தலைவர்கள் மற்றும் நேபாள நாட்டின் பசுபதிநாதர் கோவில் பிரதிநிதிகள் முன்னிலையில், பூரி ஜெகந்நாதர் கோவிலைச் சுற்றியும் உட்கட்டமைப்பை மேம்படுத்தும், $107 மில்லியன் டாலர் மதிப்பிலான, ‘பரிக்ரம பிரகல்பா’ திட்டத்தைத் தொடக்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்வானது மூன்று நாள் திருவிழா மற்றும் பிற பூரி திட்டங்களுடன் சேர்ந்து நடத்தப்பட்டது.

7. எந்த ஆற்றில், இந்தியாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் படகு இயக்கப்படவுள்ளது?

அ. சரயு ஆறு

ஆ. பெரியாறு

இ. காவிரியாறு

ஈ. பாலாறு

  • இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் படகானது உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாய்ந்தோடும் சரயு ஆற்றில் இயக்கப்படவுள்ளது. உத்தர பிரதேசத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (UPNEDA) இந்த முன்னெடுப்பின் பின்னணியில் உள்ளது; இது அயோத்தியை ஒரு முன்மாதிரி சூரிய ஆற்றலில் இயங்கும் நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலகுரக மற்றும் கண்ணாடியிழையால் ஆன இந்தப் படகால் 5-6 மநேரம் வரை தண்ணீரில் இருக்க முடியும்.

8. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டம் எது?

அ. சாக்ஷர் பாரத் திட்டம்

ஆ. SWAYAM திட்டம்

இ. SHRESHTA திட்டம்

ஈ. சமக்ரா சிக்ஷா திட்டம்

  • CBSE ஆனது, 9-12ஆம் வகுப்பு வரை பயிலும் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணாக்கரைக் குறிவைத்து, உண்டு உறைவிடப் பள்ளிகளை, “Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas (SHRESHTA)” திட்டத்தில் சேருவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இத்திட்டம் ஆண்டுதோறும் சுமார் 3000 SC மாணாக்கரைத் தனியார் & தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் உதவித்தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது SC சமூகங்களை சமூக-பொருளாதார ரீதியாக மேம்படுத்த தன்னார்வ நிறுவனங்களுடன் இணைவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. சமூக நீதித் துறையால் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் விடுதிகளை நடத்தும் SHRESHTA பள்ளிகள் (சிறந்த தனியார் பள்ளிகள்) மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்மூலம் செயல்படுகிறது.

9. அண்மையில், டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் (WEF) MSME-களுக்கான, ‘EcoMark’ பசுமை அங்கீகார கட்டமைப்பை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இந்தியா

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. சீனா

  • 2024 ஜன.07 அன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் (WEF) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs), ‘EcoMark’ பசுமை அங்கீகார கட்டமைப்பை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிமுகப்படுத்தியது. இது EcoMark சான்றளிப்பானது ISO தரநிலைகள் மற்றும் டிஜிட்டல் முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். Ecomark திட்டம், இந்திய விதிமுறைகளின்படி தரத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வீட்டு மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றம் அமைச்சகம், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நுகர்வுமுறைகளை மேம்படுத்துவதற்காக சுற்றுச்சூழல் மதிப்பெண் (EcoMark) சான்றிதழ் விதிகள், 2023ஐ அறிமுகப்படுத்தியது.

10. சமீபத்தில், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, கீழ்காணும் எந்த மாநிலத்தில் செயற்கை கடலடிப்பாறைகள் திட்டத்தைத் தொடக்கிவைத்தார்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கோவா

  • 2024 ஜன.17 அன்று, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, கேரள மாநிலத்தின் விழிஞ்சத்தில் செயற்கை கடலடிப்பாறைகள் திட்டத்தைத் தொடக்கிவைத்தார். இந்தத் திட்டம் மீன்களின் எண்ணிக்கையையும், மீனவர்களின் வருவாயையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் விளைந்துள்ளது. மீனவ கிராமங்களின் கடற்கரையோரங்களில் கடலுக்கு அடியில் செயற்கை கடலடிப்பாறைகள் அமைக்கப்படும்.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கருங்கழுத்துப் பாறு – Indian Vulture’இன் IUCN நிலை என்ன?

அ. அருகிவிட்ட இனம்

ஆ அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

இ. தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்

ஈ. மிகவும் அருகிவிட்ட இனம்

  • இருபதாண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தானேயில் காணப்பட்ட கருங்கழுத்துப் பாறு (Gyps indicus) ஆசியாவைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு பழமையான தோட்டி உயிரினமாகும். அவற்றின் நீளமான அலகுகளுக்காக அறியப்படும் அவை முதன்மையாக இறந்த உயிரிகளின் உடலங்களை உண்கின்றன. பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட சிறியதாக உள்ளன. டிக்ளோஃபெனாக் என்ற கால்நடை மருந்தின் நஞ்சால் இக்கருங்கழுத்துப்பாறு அழிவை எதிர்கொண்டுவருகின்றன. IUCNஇன் சிவப்புப்பட்டியலில் மிகவும் அருகிவிட்ட இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

12. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Senna spectabilis’ என்றால் என்ன?

அ. பூஞ்சை

ஆ. ஆக்கிரமிப்பு தாவரம்

இ. பண்டைய விவசாய நுட்பங்கள்

ஈ. தீநுண்மம்

  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 356.50 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்திருந்த ஆக்கிரமிப்பு தாவரமான ‘Senna spectabilis’களை தமிழ்நாடு வனத்துறை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இப்பயறுவகை தாவரம், நிழல் மற்றும் விறகுக்காக விளைவிக்கப்பட்டது. பின்னர் இது பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது. பிரகாசமான மஞ்சள்நிற பூக்களைக்கொண்ட இது, உள்நாட்டு மரங்கள் மற்றும் புல்லின் வளர்ச்சியைத் தடுக்கிறது. IUCNஇன் சிவப்புப் பட்டியலில், “தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்” என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

13. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றின் தொகுப்பான, ‘திருக்குறள்’ நூலை இயற்றியவர் யார்?

அ. திருவள்ளுவர்

ஆ. கம்பர்

இ. முன்றுறை அரையனார்

ஈ. சமண முனிவர்கள்

  • திருவள்ளுவர் நாளில் புலவரும் தத்துவஞானியுமான திருவள்ளுவரை இந்தியப் பிரதமர் கௌரவித்தார். கடந்த 1935ஆம் ஆண்டில் மே.17-18 ஆகிய தேதிகளில் முதன் முதலில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 2024 ஜனவரி.16 அன்று பொங்கல் பண்டிகையின்போது, திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவரின் தலைசிறந்த படைப்பான திருக்குறள், அறம், அரசியல், பொருளாதாரம் மற்றும் காதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 1330 குறள்வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட திருக்குறள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய சுருக்கமான அறிவை வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜப்பான் விண்கலம் நிலவில் தரையிறங்கியது.

ஜப்பான் அனுப்பிய விண்கலமான, ‘ஸ்லிம்’ நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம், ‘நிலவின் ஸ்னைப்பர்’ (தொலைவிலிருந்து துல்லியமாக சுடுபவர்) என்று அழைக்கப்படுகிறது.

2. ‘DD தமிழ்’ எனபி பெயர்மாறியது பொதிகை!

‘தூர்தர்ஷன் தமிழ்’ என்ற பெயருடன் புதிய அவதாரம் எடுத்துள்ள பொதிகை தொலைக்காட்சியின் சேவையை பிரதமர் நரேந்திர மோதி, தொடக்கிவைத்தார். கடந்த 1975ஆம் ஆண்டு சென்னை தூர்தர்ஷன் தனது முதல் ஒளி பரப்பைத் தொடங்கியது.

3. 19 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது: ஜன.22இல் குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.

2024ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வருகின்ற ஜன.22ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். இந்த விருதுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சார்பில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதிவீரச் செயலுக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ள மகாராஷ்டிர மாநில சிறுவன் ஆதித்யா (12) உயிரிழந்து விட்டார். இதேபோன்று ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த R சூர்யபிரசாத் (9) தனது 5 வயதில் மலையேறும் பயிற்சியைத் தொடங்கி குறிப்பிடத்தக்க உறுதியையும் திறமையையும் வெளிப்படுத்தியதற்காக விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு, ‘கிளிமஞ்சாரோ’ மலையை அடைந்தது உச்ச சாதனையாகும். இதேபோல, விருதுக்குத் தேர்வுபெற்றுள்ள தெற்கு தில்லியைச் சேர்ந்த 16 வயது சுஹானி, விவசாயிகளுக்கான சூரிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

4. NLC இந்தியா நிறுவனத்துக்கு தேசிய விருது.

NLC இந்தியா நிறுவனம் எண்ம (டிஜிட்டல்) மாற்றத்துக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக 2019-20ஆம் ஆண்டுக்கான ஸ்கோப் எமினென்ஸ் விருதைப் பெற்றது. பொதுத்துறை நிறுவனங்களின் நிலையான மாநாடு என்பதன் சுருக்கமே ‘ஸ்கோப்’ ஆகும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரிய அமைப்பான இது 1973ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

5. பன்னாட்டு மருத்துவ மாநாடு.

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு Dr MGR மருத்துவப்பல்கலைக்கழகம் இணைந்து, “மருத்துவத்தின் எதிர்காலம்” என்கிற தலைப்பில் மூன்று நாள்கள் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை சென்னையில் தொடங்கின. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று, 10,500 தன்னார்வலர்கள்மூலமாக, “மக்களைத்தேடி மருத்துவம்” திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

6. ஒரே நாடு ஒரே தேர்தல்: மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள்.

மக்களவைக்கும் மாநில பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.

நாடாளுமன்ற அவைகளின் பதவிக்காலம் தொடர்பான 83ஆவது பிரிவு, குடியரசுத்தலைவரால் மக்களவை கலைக்கப்படுவது தொடர்பான 85ஆவது பிரிவு, மாநிலப்பேரவைகளின் பதவிக்காலம் தொடர்பான 172ஆவது பிரிவு, மாநிலப்பேரவைகள் கலைக்கப்படுவது தொடர்பான 174ஆவது பிரிவு, மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான 356ஆவது பிரிவு ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

கட்சித்தாவல் காரணமாக மக்கள் பிரதிநிதிகளைத் தகுதிநீக்கம் செய்வதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையிலும் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

7. அமைச்சரின் நூல் வெளியீடு.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ள, “கரோனா: உடல் காத்தோம் – உயிர் காத்தோம்” என்ற நூலை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!