TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 20th February 2024

1. பண்டாரம் நிலம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

. இலட்சத்தீவுகள்

இ. புதுச்சேரி

ஈ. ஆந்திர பிரதேசம்

  • இலட்சத்தீவுகளில் அமைந்துள்ள பண்டார நிலங்களை அரசுரிமையாக்க நிர்வாகம் முடிவுசெய்ததையடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் அரசுக்கிடையே பதற்றம் எழுந்துள்ளது. பாரம்பரிய உடைமைக்கு முரணான பண்டாரம் சொத்துகள் அரசுக்குச் சொந்தமானது என நிர்வாகி கூறியதால் இம்மோதல் தீவிரமடைந்தது. பண்டாரம் நிலங்களில் தென்னை மரங்களுக்கு எண்கள் வழங்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை நிர்வாகம் மீறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு அதிகாரிகள் எந்த விதமான மறு கருத்தையும் தெரிவிக்காமல் நிராகரித்துள்ளனர்.

2. ஒடிஸா மாநிலத்தில் உள்ள எந்த ஏரியில், ஒரு புதிய கடல்வாழ் பன்முகக்காலி உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?

அ. தாம்பரா ஏரி

ஆ. கஞ்சியா ஏரி

இ. சிலிகா ஏரி

ஈ. சார் ஏரி

  • ஒடிஸா மாநிலத்தின் பெர்காம்பூர் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், சிலிகா ஏரியில் ஒரு புதிய கடல்வாழ் பன்முகக்காலி உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளனர். கடல் மற்றும் உவர்நீர் சூழலில் வாழும் தன்மையுடைய உயிரினங்களை உள்ளடக்கிய, ‘Parhyale’ இனத்தைச் சேர்ந்த இந்தப் பழுப்புநிற ஓட்டுடலி 13 ஜோடி கால்களுடன் சுமார் எட்டு மிமீ நீளமுடையதாக உள்ளது.

3. 11ஆவது சர்வதேச பொம்மலாட்ட விழா தொடங்கப்பட்ட இடம் எது?

அ. திருநெல்வேலி

ஆ. சண்டிகர்

இ. போபால்

ஈ. சென்னை

  • 2024 பிப்.17 அன்று சண்டிகரில் உள்ள தாகூர் அரங்கில் 11ஆவது சர்வதேச பொம்மலாட்ட விழா தொடங்கப்பட்டது. விழாவின் தொடக்க விழாவை பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான பன்வாரிலால் புரோகித் மற்றும் நிர்வாகியின் ஆலோசகர் ராஜீவ் வர்மா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 2024 பிப்.17-21 வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் மாணவர்களுக்கான சிறப்பு காலைக்காட்சிகளும், பொதுமக்களுக்கான மாலைக்காட்சிகளும் அடங்கும். இந்தத் திருவிழாவில் பொம்மலாட்டம் தொடர்பான நேரடி விளக்கங்கள் அடங்கிய பொம்மைகள் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.

4. பொதுவள டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பைப் பகிர்ந்துகொள்வதற்காக, இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ. கொலம்பியா

ஆ. சிலி

இ. பிரேசில்

ஈ. கயானா

  • இந்தியாவின் பொதுவள டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை பகிர்ந்துகொள்வதற்காக இந்தியாவும் கொலம்பியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மக்கள்தொகை அளவில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வது உட்பட, டிஜிட்டல் உருமாற்றத்தில் ஒத்துழைப்பு நல்குவதற்குமாகும். COVID தொற்றுநோய்களின்போது பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்குவது உட்பட உலகின் சிறந்த டிஜிட்டல் பொது உட்கட்டமைப்புகளில் சிலவற்றை இந்தியா உருவாக்கியுள்ளது.

5. உலகளாவிய சுற்றுலா நெகிழ்திறன் (Tourism Resilience) நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 17 பிப்ரவரி

ஆ. 18 பிப்ரவரி

இ. 19 பிப்ரவரி

ஈ. 20 பிப்ரவரி

  • உலகளாவிய சுற்றுலா நெகிழ்திறன் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.17 அன்று கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டில், சுற்றுலா வளர்ச்சிகள் மிகவும் நெகிழ்திறன்கொண்டதாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐநா அவையால் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு எதிராக சுற்றுலாத்துறையை வலுப்படுத்துதல், நீடித்த வளர்ச்சியை ஆதரித்தல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துதலில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது.

6. 12ஆவது மிலன் கடற்படை பயிற்சி நடைபெற்ற இடம் எது?

அ. கட்ச்

ஆ. கொச்சி

இ. ஜெய்சால்மர்

ஈ. விசாகப்பட்டினம்

  • MILAN கடற்படைப் பயிற்சியின் 12ஆவது பதிப்பு விசாகப்பட்டினத்தில் பிப்.19-27 வரை நடைபெற்றது. “Forging Naval Alliances for a Secure Maritime Future – பாதுகாப்பான கடல்சார் எதிர்காலத்திற்கான கடற்படைக் கூட்டணிகளை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின்கீழ் நடைபெற்ற இப்பயிற்சி, பங்கேற்கும் கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில், ஜப்பானை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஜெர்மனி

இ. பிரான்ஸ்

ஈ. கனடா

  • 2024 பிப்ரவரி நிலவரப்படி, ஜப்பானை விஞ்சி ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஜப்பானின் பொருளாதாரம் 0.4% அளவுக்குச் சுருங்கியது; இது நாட்டை மந்தநிலைக்குத் தள்ளியது. இதற்குப் பலவீனமான உள்நாட்டு நுகர்வு, பலவீனமான யென் மற்றும் சுருங்கிவரும் மக்கள்தொகையே காரணமாகும். IMFஇன் அண்மைய கணிப்புகள், ஜப்பானின் $4.2 டிரில்லியனுடன் ஒப்பிடுகிற போது இந்த ஆண்டுக்கான ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.4 டிரில்லியனாக மதிப்பிடுகிறது.

8. டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் யார்?

அ. இரவீந்திர ஜடேஜா

ஆ. ஜஸ்பிரித் பும்ரா

இ. இரவிச்சந்திரன் அஸ்வின்

ஈ. Md சிராஜ்

  • சுழற்பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோதி அவரைப் பாராட்டியுள்ளார். அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இந்தச் சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் இவராவார். முத்தையா முரளிதரன் மற்றும் நாதன் லியான் ஆகியோர் மட்டும் 500 விக்கெட்டுகளை வீழத்தியிருந்தனர்; தற்போது அஸ்வினும் இந்தக் குழுவில் இணைந்தார். வரலாற்றில் இந்தச் சாதனையை எட்டிய மூன்றாவது ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், சாக் கிராலியை வீழத்தி அவர் இச்சாதனையைப் புரிந்தார்.

9. பின்வருவோருள் 58ஆவது ஞானபீட விருதைப் பெற்றவர்கள் யார்?

அ. கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா

ஆ. கேதார்நாத் சிங் மற்றும் விக்ரம் சேத்

இ. குல்சார் மற்றும் ஜகத்குரு இராமபத்ராச்சாரியார்

ஈ. விக்ரம் சேத் மற்றும் அரவிந்த் அடிகா

  • பிரபல உருதுக்கவிஞர் குல்சார் மற்றும் சமற்கிருத அறிஞர் ஜகத்குரு இராமபத்ராச்சாரியார் ஆகியோருக்கு 58ஆவது ‘ஞானபீட விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது இலக்கியத்திற்கு அவர்களாற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கிறது. 2022ஆம் ஆண்டில், இந்த விருது கோவா எழுத்தாளர் தாமோதர் மௌஸோவுக்கு வழங்கப்பட்டது. 1961இல் நிறுவப்பட்ட ஞானபீட விருது, பல்வேறு இந்திய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் இந்தியாவின் மிகவுயர்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றாகும்.

10. ‘பாரதிய பாஷா சமிதி’யின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவித்தல்

ஆ. வெளிநாட்டு மொழிகளை ஊக்குவித்தல்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்

ஈ. கலை மற்றும் அறிவியலை ஊக்குவித்தல்

  • பாரதிய பாஷா சமிதியின் தலைவர் அண்மையில கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக வாதிட்டார்; டிஜிட்டல் தளங்களில் இந்திய மொழிகளில் பாடநூல்கள் விரைவில் கிடைக்கும் என்று அறிவித்தார். 2021இல் கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, தேசிய கல்விக்கொள்கை-2020இன்கீழ், இந்திய மொழிகளின் முழு வளர்ச்சிக்கான வழிகளைப் பரிந்துரைத்தல், மொழி மறுமலர்ச்சி குறித்து அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மொழி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் ஆகியவை இந்தக் குழுவின் நோக்கமாகும்.

11. கீழ்காணும் எந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி முதன்முறையாக இரண்டு சிறுகோள்களின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்?

அ. SOFIA

ஆ. HEAO 3

இ. HETE 2

ஈ. CHIPS

  • போயிங் 747 SP விமானத்தில் பொருத்தப்பட்ட NASAஇன் SOFIA வான்வழி ஆய்வகத் தொலைநோக்கியானது, அண்மையில 2 சிறுகோள்களின் மேற்பரப்பில் நீர்மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளது. இவ்வாறான கண்டறிவு இதுவே முதல்முறையாகும். 2022 வரை 12 ஆண்டுகள் செயல்பட்ட SOFIA, NASA மற்றும் ஜெர்மன் விண்வெளி நிறுவனத்தால் கூட்டாக இயக்கப்பட்ட தொலைநோக்கியாகும். அகச்சிவப்பு ஒளியை ஆய்வுசெய்து, வானியலாளர்கள் பூமியின் அகச்சிவப்பு-தடுப்பு வளிமண்டலத்திற்கு மேலே 38,000-45,000 அடிவரை பிரபஞ்சத்தை கண்காணிக்க உதவியது. இது உலகின் மிகப்பெரிய வான்வழி வானியல் ஆய்வகமாகும்.

12. மரத்தாலான உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு NASAஉம் கீழ்காணும் எந்த நாட்டு விண்வெளி முகமையும் கூட்டிணைந்துள்ளன?

அ. ஜப்பான்

ஆ. ரஷ்யா

இ. இந்தியா

ஈ. இங்கிலாந்து

  • NASA மற்றும் ஜப்பானின் விண்வெளி முகமையான JAXA, 2024இல் மரத்தாலான உலகின் முதல் செயற்கைக் கோளான, ‘LignoSat’ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளன. இந்தச்செயற்கைக்கோள் விண்வெளிக் குப்பைகளை குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில், ‘ஹூனோகி’ எனப்படும் மக்குந்தன்மை உடைய கனகசம்பா (magnolia) என்ற மரத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயற்கைக்கோளை கியோட்டோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்’ திட்டம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த தொழில்முனைவோருக்காக கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான், ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’. இந்தத் திட்டத்தின்மூலம் 755 நபர்கள் `84 கோடி மானியத்துடன்கூடிய `156 கோடி கடன் வசதி பெற்று பயனடைந்துள்ளனர்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘CM ARISE’ என்ற திட்டத்தின்கீழ் தொழில் தொடங்குவதற்கு 35 சதவீத வட்டி மானியத்துடன் `10 இலட்சம் வரை தொழில்முனைவோர் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் நிதியாண்டில் `50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

2. இலக்கிய மணம் வீசிய 2024-25 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை.

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற திருக்குறள்:

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

(பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி. குறள் எண்: 386.)

(காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.)

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை விளக்கும் முன் நினைவுகூறப்பட்ட பிரமிள் கவிதை:

“சிறகிலிருந்த பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது”

  • பிரமிள்.

நிதிநிலை அறிக்கையின் நிறைவாக இடம்பெற்ற புறநானூற்றுப் பாடல்:

“.. … … … … … … … … … … … … காவல்

குழவி கொள்பவரின் ஓம்புமதி

அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே” (புறம்: 5)

  • நரிவெரூஉத்தலையார்.

(அரசன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலுக்கு, புலவர் நரிவெரூஉத்தலையார் அறிவுறுத்துவதாக அமைந்த புறநானூற்றுப் பாடல்)

(பாடல் விளக்கம்: உன்னுடைய நாட்டையும் மக்களையும் குழந்தையைப் பாதுகாக்கும் தாய் போலக் கருத்துடன் பாதுகாக்க வேண்டும். இதுதான் நீ மனமிரங்கிச் செய்யவேண்டிய ஆட்சிமுறை)

3. `17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாதெமி சென்னையில் திறப்பு.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் `17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாதெமி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு கொண்ட இந்த அகாடமியின் தரைதளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம், முதல் தளத்தில் டேக் வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டுத் தளம், இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடல்சார் நீர்விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்கவும், நீர்விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகத்தரம்வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாதெமி அமைக்கப்படவுள்ளது.

4. சென்னையில் வரும் ஜனவரியில் உலக புத்தாக்கத் தொழில் மாநாடு.

உலக புத்தாக்கத் தொழில் மாநாடு 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடத்தப்படவுள்ளது. முதல் தலை முறை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், வரும் நிதியாண்டில் `101 கோடி அளவுக்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

5. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024-25: ஒரு ரூபாயில் (`1) வரவு-செலவு எவ்வளவு?

வரவு: மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாக 43.4 சதவீதமும், பொதுக்கடன் மூலமாக 32.4 சதவீதமும், மத்திய வரிகளின் பங்கு மூலமாக 11.1 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலமாக 6.8 சதவீதமும், மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் மூலமாக 5.2 சதவீதமும், கடன் வசூல் மற்றும் மூலதன வரவு மூலமாக 1.1 சதவீதம் வருவாய் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கிறது.

செலவு: உதவித்தொகைகள் மற்றும் மானியங்களுக்காக 32.4 சதவீதமும், சம்பளங்களுக்காக 18.7 சதவீதமும், வட்டி செலுத்துவதற்காக 14.1 சதவீதமும், மூலதன செலவாக 10.5 சதவீதமும், கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்காக 9.1 சதவீதமும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்காக 8.3 சதவீதமும், கடன் வழங்குவதற்காக 3.6 சதவீதமும், செயல்பாடுகளும் பராமரிப்புகளுக்காக 3.3 சதவீதமும் செலவு செய்யப்படுகிறது.

6. `5 கோடியில் 100 உழவர் அங்காடிகள்.

உழவர் சந்தையில் விற்பனை செய்வதைப்போன்று தரமான வேளாண் விளைபொருள்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் எளிதில் நகரங்களில் உள்ள நுகர்வோரைச் சென்றடைய நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து தரம்பிரித்து, சிப்பம் கட்டி, முத்திரையிட்டு விற்பனைசெய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள் `5 கோடியில் மாநில நிதியில் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்:

உழவுத்தொழிலை மேம்படுத்தி நிகர சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காக தரிசுநிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்கு தருவதற்காக, ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்’ கடந்த 2021-2022ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 12,525 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டிலும் (2024-2025) இந்தத் திட்டம் தேர்வுசெய்யப்பட்ட 2,482 கிராம ஊராட்சிகளில் `200 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.

7. தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்.

‘வேளாண் காடுகள் திட்டம்’மூலம் பூச்சி, நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்த பத்து இலட்சம் வேப்பமரக் கன்றுகள் இலவசமாக வழங்கிட `2 கோடி நிதி ஒதுக்கீடு.

‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதை மரபணு தூய்மையை உறுதிசெய்ய கோயம்புத்தூரில் ஆய்வகம் அமைக்கப்படும்.

கன்னியாகுமரியில் தேன்பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க `3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட `36 கோடி நிதி ஒதுக்கீடு.

‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில், மண்புழு உரம் ஊக்குவிக்க `5 கோடி நிதி ஒதுக்கீடு. அதே திட்டத்தின்கீழ் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த `22.5 கோடி நிதி ஒதுக்கீடு.

‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த `17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும், ‘சீவன் சம்பா’ பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.

கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக `30 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

8. தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2024-25இல் இடம்பெற்ற இலக்கிய மேற்கோள்கள்:

திருக்குறள்:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்

(பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: உழவு. குறள் எண்: 1033)

(உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது)

உழவு குறித்து கம்பரது கவி:

“மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்குங்கை

ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை

நீக்குங்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி

காக்கும்கை காராளர் கை” (திருக்கை வழக்கம்)

  • கம்பர்.

உழவு குறித்து இளங்கோவடிகள்:

“இரப்போர் சுற்றமும் புரப்போர் குற்றமும்

உழவிடை விளைப்போர்” (சிலப்பதிகாரம்: நாடுகாண் காதை: 150)

  • இளங்கோவடிகள்.

(உழவர்கள் விளைவிப்பதால்தான் இரப்பவரின் சுற்றமும் புரக்கும் அரசரின் கொற்றமும் காக்கப்படுகின்றன)

உழவு குறித்து தொல்காப்பியர்:

“மெய்திரி வகையின் எண்வகை உணவில் செய்தியும் வரையார்”

  • தொல்காப்பியர்.

(நெல்லு, காணம், வரகு, இறுங்கு, திணை, சாமை, புல்லு, கோதும்பை இவற்றை விளைவிக்கும் உழவுத்தொழில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!