TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 22nd February 2024

1. ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் (AITIGA) 3ஆவது கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இந்தோனேசியா

. இந்தியா

இ. மியான்மர்

ஈ. மலேசியா

  • ASEAN-India Trade in Goods Agreement (AITIGA) கூட்டுக்குழு, 2024 பிப்.16-19 ஆகிய தேதிகளில் புது தில்லியில் கூடியது. கடந்த 2009ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து இது இக்குழுவின் 3ஆவது கூட்டமாகும். விரிவான மதிப்பாய்வுக்காக 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தக்குழு, எட்டுத்துணைக்குழுக்கள் ஒப்பந்தத்தின் வர்த்தக வசதி மற்றும் பரஸ்பர நன்மைகளை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.

2. ஐரிஸ் மற்றும் மசாலியா என்றால் என்ன?

அ. சிறுகோள்கள்

ஆ. கருந்துளைகள்

இ. பனிப்பாறை ஏரிகள்

ஈ. ரோந்துக்கப்பல்கள்

  • ஐரிஸ் மற்றும் மசாலியா ஆகியவை ஒரே மாதிரியான சுற்றுப்பாதைகளைக் கொண்ட சிறுகோள்கள் ஆகும். நமது சூரிய மண்டலத்தில் நீர் உறுதிப்படுத்தப்பட்ட முதல் சிறுகோள்கள் இவைகளாகும். 124 மைல் விட்டம்கொண்ட ஐரிஸ், நமது சூரிய குடும்பத்தில் உள்ள 99% சிறுகோள்களைவிட பெரியதாக உள்ளது. இது செவ்வாய் மற்றும் வியாழனிடையே சுற்றிவருகிறது மற்றும் சிறுகோள் பட்டையில் நான்காவது பிரகாசமான பொருளாகவும் உள்ளது. 84 மைல் விட்டம்கொண்ட மசாலியா மற்றும் ஐரிஸின் அளவைப்போன்றே உள்ளது. சோபியாவின் அகச்சிவப்பு தொலைநோக்கியைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் இச்சிறுகோள்களில் நீர்மூலக்கூறைக் கண்டுபிடித்தனர்.

3. ‘ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கை – 2024’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNESCO

ஆ. UNESCAP

இ. UNDP

ஈ. IMF

  • UNESCAPஇன், ‘ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கை – 2024’ ஆனது இப்பகுதி 2030 – நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவாதில் 32 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதை வெளிப்படுத்துகிறது. 1947இல் ECAFE என நிறுவப்பட்ட இது, 1974இல் ESCAP என மாற்றியமைக்கப்பட்டது. ஐநாவின் ஐந்து பிராந்திய ஆணையங்களில் இதுவும் ஒன்றாகும். 53 உறுப்பு நாடுகள் (இந்தியா உட்பட) மற்றும் 9 இணை உறுப்பினர்களுடன், UNESCAP தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. நீடித்த வளர்ச்சி சவால்களை எதிர்கொள்ள உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

4. அண்மையில் கீழ்காணும் எந்த மாநிலத்தில், ‘மொரோதாரோ’ என்ற ஹரப்பன்கால கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?

அ. குஜராத்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஒடிசா

  • குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் ஹரப்பன் காலத்து கோட்டையான, ‘மொரோதரோ’வை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொ ஆ மு 2,600 முதல் பொ ஆ மு 1,300 காலகட்டத்தைச் சேர்ந்த இந்தக் கோட்டையானது கிழக்கிலிருந்து மேற்காக 102 மீ மற்றும் வடக்கிலிருந்து தெற்கே 58 மீ அளவுள்ளதாகவும் 3.3 மீ தடிமன் கொண்ட சுவரையும் கொண்டுள்ளது. 10×10 மீ தாழ்வாரம், கிணறு, புதைகுழிகள் மற்றும் துளையிடப்பட்ட ஜாடிகள் கொண்ட ஹரப்பன் மட்பாண்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

5. 2024 – உலக சமூக நீதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Bridging Gaps, Building Alliances

ஆ. Achieving Social Justice through Formal Employment

இ. Closing the Inequalities Gap to Achieve Social Justice

ஈ. Workers on the Move: The Quest for Social Justice

  • ஆண்டுதோறும் பிப்ரவரி.20 அன்று, உலகளாவிய சமத்துவமின்மை மற்றும் அநீதிக்கு தீர்வுகாணவும் உலகளாவிய சமூகத்தை ஒன்றிணைக்கவுமாக உலக சமூகநீதி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், கண்ணியமான வேலை மற்றும் நியாயமான உலகமயமாக்கலை வலியுறுத்தும் விதமாக “Bridging Gaps, Building Alliances” என அமைக்கப்பட்டுள்ளது.

6. மத்திய பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அண்மையில், ‘வாழைப்பழத் திருவிழா’ நடத்தப்பட்டது?

அ. புர்ஹான்பூர்

ஆ. உஜ்ஜயினி

இ. பாலகாட்

ஈ. ரேவா

  • ‘வாழைப்பழ நகரம்’ என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூரில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆண்டுதோறும், ‘வாழைப்பழத் திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. 2 நாள் நடைபெறும் இந்த நிகழ்வு, ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின்கீழ், 18,325 விவசாயிகளை உள்ளடக்கிய 23,650 ஹெக்டேர் வாழை சாகுபடியுடன் கூடிய புர்ஹான்பூரின் வேளாண் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. புர்ஹான்பூரின் வேளாண்மைத் திறனை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள், வல்லுநர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்குக் காண்பிப்பதன் மூலம் முதலீட்டை ஈர்ப்பதை இந்த விழா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. ‘வேம்பு உச்சிமாநாடு & உலகளாவிய வேம்பு வர்த்தக கண்காட்சி’ நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. மதுரை

இ. புது தில்லி

ஈ. திருவனந்தபுரம்

  • ஜான்சியில் உள்ள ICAR-மத்திய வேளாண் காடு ஆராய்ச்சி நிறுவனம் தலைமையிலான கூட்டு முயற்சியில், 2024 பிப்.19-20 ஆகிய தேதிகளில் புது தில்லியில் வேம்பு உச்சிமாநாடு மற்றும் உலகளாவிய வேம்பு வர்த்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. பல்வேறு பங்குதாரர்களுடன், இந்நிகழ்வு விவசாயம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் வேம்புகளின் பல்துறை பயன்பாடுகளை எடுத்துக்காட்டியது. “Neem for Sustainable Agriculture, Health, and Environment” என்ற கருப்பொருளைத்தழுவிய இந்த உச்சிமாநாடு, வேப்பங்கொட்டையின் பன்முகப் பலன்களை வெளிக்கொணர்ந்து, பல்வேறு துறைகளில் நிலைத்தன்மையை வளர்ப்பதில் அதன் பங்கையும் சுட்டியது.

8. 2024 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 84ஆவது

ஆ. 85ஆவது

இ. 86ஆவது

ஈ. 87ஆவது

  • 194 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாத அணுகலுடன் 2024 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி, இத்தாலி & ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வாக்கால் முன்னணியில் உள்ளன. சென்ற முறை பட்டியலில் 84ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஓர் இடம் சரிந்து 85ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கடவுச்சீட்டு மூலம் 62 நாடுகளுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பயணிக்க முடியும். இந்தியாவின் கடல்சார் அண்டைநாடான மாலத்தீவுகள், 96 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலுடன் 58ஆவது இடத்தில் உள்ளது.

9. INDUS-X முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?

அ. வரலாற்று நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு

ஆ. பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்ப கூட்டுறவை மேம்படுத்துதல்

இ. இணையவெளிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்

ஈ. புத்தொழில்களுக்கான மென்பொருள் தீர்வுகளை உருவாக்குதல்

  • தில்லியில் நடைபெறும், ‘INDUS-X’ உச்சிமாநாடு, 2023 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட US-இந்தியா பாதுகாப்பு முடுக்கி சூழலமைப்பில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் நோக்கம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு ஆராய்ச்சி, மேம்பாடு, மற்றும் பாதுகாப்புத் துறையில் உற்பத்தியை நோக்கிய தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகும். இந்த முயற்சியை iDEX & OSD, US வழிநடத்துகின்றன.

10. அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமையவுள்ள ஸ்ரீ கல்கி தாம் திருக்கோவிலுக்கு, பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்?

அ. அயோத்தி

ஆ. சஹரன்பூர்

இ. வாரணாசி

ஈ. சம்பல் 

  • உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் திருக்கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தலைமையில் ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளையால் கட்டப்படும் இந்தத் திருக்கோவிலின் தனிச்சிறப்பு, மனித உருவம் உட்பட விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கும் பத்து கர்ப்ப கிரகங்கள் இடம்பெறுவதாகும். இந்த வடிவங்கள் அனைத்தும் வேதங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக பிரதமர் எடுத்துரைத்தார்.

11. மாநிலத்தில் உள்ள இளையோருக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்காக, ‘ஸ்வயம்’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிஸா

ஈ. மகாராஷ்டிரா

  • மாநிலத்தில் உள்ள இளையோருக்கு வட்டியில்லா கடன் வழங்கும், ‘ஸ்வயம்’ திட்டத்தை ஒடிஸா மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் மாநிலத்தின் இளம் தொழில்முனைவோர்களுக்கு சிறுதொழில்களை தொடங்குவதற்கும், மாநிலத்தின் வணிகச்சூழலுக்குப் பங்களிப்பதற்கும் `1 இலட்சம் வரை கடனுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. அண்மையில், ‘எண்ணிம சுகாதாரம் மீதான உலகளாவிய முன்னெடுப்பை’த் தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ. உலக சுகாதார நிறுவனம் (WHO)

ஆ. UNICEF

இ. ஐக்கிய நாடுகள்

ஈ. ஐரோப்பிய ஒன்றியம்

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) இந்தியாவின் G20 தலைமைப்பொறுப்பின் ஒருபகுதியாக, ‘Global Initiative on Digital Health (GIDH)’ஐ தொடங்கியது. இந்த முன்னெடுப்பானது எண்ணிம சுகாதார தொழில்நுட்பங்களை மக்கள் மயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா எண்ணிம நலத்திற்கான நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதில் அதன் பங்கை எடுத்துரைத்தார். WHOஇன் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ், உலகளாவிய எண்ணிம சுகாதாரத் தரங்களை ஊக்குவிப்பதில், GIDHஇன் ஆதரவை வலியுறுத்திக் கூறினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மதிய உணவுத்திட்டத்தை வடிவமைத்த நெ து சுந்தரவடிவேலுக்குச் சிலை: சட்டப்பேரவையில் கோரிக்கை.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத்திட்டத்தை வடிவமைத்த கல்வி அதிகாரி நெ து சுந்தரவடிவேலுக்குச் சிலை அமைக்க வேண்டுமென பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நீதிக்கட்சியால் பகல் உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அது மதிய உணவுத் திட்டமாக காமராஜர் ஆட்சியில் செயல்படுத்துவதற்கு பெரும் காரணமாக இருந்தவர், அப்போதைய பொதுக்கல்வியதிகாரி நெ து சுந்தரவடிவேல். காஞ்சிபுரம் மாவட்டம் நெய்யாடிவாக்கத்தைச் சேர்ந்தவர் இவர்.

2. 2050இல் இந்திய மக்கள்தொகையில் 19.5% முதியோர்!

NITI ஆயோக், “மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதில், இந்தியாவில் தற்போதைய 140 கோடி மக்கள்தொகையில் 10 சதவீதம் மூத்த குடிமக்கள் உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டில் 19.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் NITI ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

3. ஒரே ஆண்டில் 300 காப்புரிமைகள்: மெட்ராஸ் ஐஐடி சாதனை.

மெட்ராஸ் ஐஐடி ஆனது 2023ஆம் ஆண்டில் மட்டும் 300 காப்புரிமைகள் பெற்று இரட்டிப்பு சாதனை படைத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023இல் அது 300 என்ற அளவுக்குக் கணிசமாக அதிகரித்துள்ளது. மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டபிறகு 1975இல் முதல்முறையாக காப்புரிமைக்கு விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

4. தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை – 2024: முக்கிய அம்சங்கள்.

‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை-2024’ஐ, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்தக் கொள்கையானது, 10 ஆண்டுகளுக்கு (அ) அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். மேலும், இக்கொள்கையினை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வுசெய்யவும் வழிவகை உள்ளது. இந்தக் கொள்கையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தயாரித்துள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது ஒருங்கிணைக்கும் துறையாக இக்கொள்கை செயல்படுத்துதலை கண்காணிக்கும்.

குறிக்கோள்கள்:

  • பாலின உணர்திறன் கொண்ட கல்விமுறையை நிறுவுதல் மற்றும் பெண்குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல்.
  • வளரிளம் பெண்கள் மற்றும் மகளிரின் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
  • வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல்.
  • அனைத்து அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத பணிகளில் உள்ள பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அவர்களுக்கு உகந்த பணியிடங்களை உறுதி செய்தல்.
  • பெண்கள் நிர்வகிக்கும் சிறு தொழில்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
  • பெண்கள் அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவித்து டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
  • தொழில் துறையில், பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டை வழங்குவதன் மூலம் மகளிரிடையே நிலவும் திறன் இடைவெளியைக் குறைத்தல்.
  • நிறுவனக்கடன் வசதிகளை அணுகுதல் மற்றும் தேவைப்படும் மகளிருக்கு வங்கி கடனுதவி அதிகம் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
  • மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.

5. ககன்யான் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி!

மனிதர்களை விண்ணுக்கனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான CE20 கிரையோஜெனிக் எஞ்சினின் இறுதிக்கட்ட பரிசோதனை திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. இந்தப் பரிசோதனையானது 7 கட்டமாக நடத்தப்பட்டு வந்தது. ‘ககன்யான்’ திட்டத்தின்மூலம் தரையிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள புவி தாழ்வட்டப்பாதைக்கு விண்கலம்மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்குப் பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர ISRO முடிவுசெய்துள்ளது. இந்தத் திட்டத்தை 2025ஆம் ஆண்டில் செயல்படுத்த ISRO திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!