TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 24th & 25th February 2024

1. 9ஆவது ரைசினா உரையாடல் தொடங்கப்பட்ட இடம் எது?

அ. புது தில்லி

ஆ. கிரேக்கம்

இ. சுவிட்சர்லாந்து

ஈ. பாரிஸ்

  • புது தில்லியில் 9ஆவது ரைசினா உரையாடலை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். இதில் கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். G20 மற்றும் தட்பவெப்பநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கை கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் எடுத்துரைத்தார். இந்தியாவின் பொருளாதார வலிமையைப் பாராட்டிய அவர், பரஸ்பர முதலீட்டு இலக்குகள் குறித்து குறிப்பிட்டார்.

2. கடல்சார் தொழில்நுட்ப கண்காட்சியான, ‘MTEX-24’ தொடங்கப்பட்ட இடம் எது?

அ. விசாகப்பட்டினம்

ஆ. டாக்கா

இ. காத்மாண்டு

ஈ. மியான்மர்

  • 3 நாள் நடைபெறும் கடல்சார் தொழில்நுட்ப கண்காட்சியான, ‘MTEX-24’ என்பது விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் MILAN-2024 என்ற பயிற்சியின் ஒரு முக்கிய அம்சமாகும். இது கடற்படை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சிகளைக் காட்டுகிறது. பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங்கால் தொடக்கி வைக்கப்பட்ட, ‘MTEX-24’ பாதுகாப்பில் தற்சார்பை வலியுறுத்துகிறது. இது கப்பல் கட்டுதல், தகவல் தொடர்பு, இணையவெளிப் பாதுகாப்பு மற்றும் நிலையான ஆற்றல் தீர்வுகளில் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. ‘MTEX-24’ இந்தியாவின் கடல்சார் தொழிற்துறையை பாதுகாப்பான மற்றும் வளமானதாக ஆக்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. நீலகிரி கரும்வெருகு (Nilgiri marten) என்பது இந்தியாவில் பின்வரும் எந்தப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது?

அ. மேற்குத் தொடர்ச்சி மலைகள்

ஆ. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

இ. ஈரநிலங்கள்

ஈ. புல்வெளிகள்

  • நீலகிரி கரும்வெருகு போன்ற அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு, ‘தமிழ்நாடு அருகிவரும் உயிரினங்களுக்கான வளங்காப்பு நிதியத்தை’த் தொடங்கியுள்ளது. இந்த அரிய மாமிச உண்ணி, அறிவியல்பூர்வமாக, ‘Martes gwatkinsii’ என அழைக்கப்படுகிறது. இவ்விலங்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் பரவியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழ்கின்றன. சோலைக் காடுகளில் காணப்படும் இது, இன்னட்டு நிற ரோமங்களுடனும் மஞ்சள்நிறத் தொண்டையுடன் தேவாங்கைப்போன்று உள்ளது.

4. மாநிலத்தின் முதல் சிறப்பு புலிகள் பாதுகாப்புப் படையை நிறுவுவதற்காக NTCA உடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகிழக்கு மாநிலம் எது?

அ. மணிப்பூர்

ஆ. அஸ்ஸாம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. மிசோரம்

  • அருணாச்சல பிரதேச மாநில அரசு அதன் முதல் சிறப்பு புலிகள் பாதுகாப்புப் படையை உருவாக்குவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துடன் (NTCA) கூட்டிணைந்துள்ளது. நம்தாபா, கம்லாங் மற்றும் பக்கே ஆகிய மூன்று புலிகள் காப்பகங்களின் தாயகமாக இருந்தபோதிலும் இதுவரை தனக்கென பிரத்யேக புலிகள் பாதுகாப்புப் படை ஒன்று இல்லாமல் அருணாச்சல பிரதேச மாநிலம் இருந்து வந்தது. இந்தக் காப்புக்காடுகளில் புலிகள் பாதுகாப்பினை மேம்படுத்த 336 பணியாளர்களைக் கொண்ட சிறப்புப்படை அமைக்கப்படவுள்ளது.

5. அண்மையில், T20இல் விரைவாக 10000 இரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. பாபர் அசாம்

இ. டிராவிஸ் ஹெட்

ஈ. ரிஷப் பந்த்

  • PSL – 2024இல் கராச்சி கிங்ஸ் அதிர பெஷாவர் சல்மி போட்டியின்போது T20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக 10,000 இரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் படைத்தார். இதன்மூலம் இதுபோன்ற சாதனையை எட்டிய 13ஆவது வீரர் ஆனார் பாபர் அசாம்.

6. அரசாங்கத்தின் எந்தத் திட்டத்தின்கீழ் அண்மையில் AIIMS ஜம்மு நிறுவப்பட்டது?

அ. பிரதம மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோ

ஆ. மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்

இ. ஆயுஷ்மான் பாரத் யோஜனா

ஈ. அனைவருக்கும் சுகாதார காப்பீடு திட்டம்

  • ஜம்முவில் அமைந்துள்ள AIIMS விஜய்பூர், பிராந்திய சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பிரதம மந்திரி சுவஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின்கீழ் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்தியா முழுவதும் மலிவு விலையில் மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதையும் மருத்துவக் கல்வி வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நாடு முழுவதும் அணுகக்கூடிய மற்றும் தரமான சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்வதில் முனைப்பு காட்டுகிறது.

7. ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?

அ. மூன்று

ஆ. நான்கு

இ. ஐந்து

ஈ. ஒன்று

  • ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளில், பின்வரும் விளையாட்டு வீரர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர்: தஜிந்தர்பால் சிங் தூர்: வட்டெறிவர் ஜோதி யர்ராஜி: 100 மீட்டர் தடைதாண்டியான ஹர்மிலன் பெயின்ஸ்: 1500 மீ.

8. எதிர்கால ஆயுதங்கள் மற்றும் தேஜஸ் உணரிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்திற்காக, கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இந்திய வான்படை கையெழுத்திட்டுள்ளது?

அ. வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் (ADA)

ஆ. இராணுவ இணைவெளி முகமை

இ. பாதுகாப்பில் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனம்

ஈ. வானூர்தியியல் ஆராய்ச்சி மையம்

  • இலகுரக போர்விமானமான, ‘தேஜஸ்’ஐ மேம்படுத்துவதற்காக வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய வான்படை கையெழுத்திட்டுள்ளது. தற்போதைய போர்சூழலை நவீனமயமாக்க முக்கியமான எதிர்கால ஆயுதங்கள் மற்றும் உணரிகளை ஒருங்கிணைப்பதை இந்த கூட்டிணைவு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் உணரிகள் ஒருங்கிணைப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்றம் தொடங்கியுள்ளது. இது தேஜஸின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும்.

9. விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்காக, ‘கல்பனா பெல்லோஷிப்பை’ அறிமுகப்படுத்திய இந்திய தனியார் விண்வெளி உற்பத்தி நிறுவனம் எது?

அ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்

ஆ. துருவ் ஸ்பேஸ்

இ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்

ஈ. திகந்தரா

  • ஓர் இந்திய விண்வெளி உற்பத்தி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், விண்வெளி தொழில்நுட்பத்தில் மகளிர்க்கு அதிகாரமளிக்கும் இந்தியாவின் முதலாவது திட்டமான ‘கல்பனா பெல்லோஷிப்பை’ அறிமுகப்படுத்துகிறது. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரால் அழைக்கப்படும் இந்த முயற்சியானது, இறுதியாண்டு மாணவிகள் மற்றும் தொடர்புடைய பொறியியல் துறைகளில் சமீபத்தில் பட்டம் வாங்கியோரை குறிவைத்து இயக்கப்படுகிறது. விண்வெளி துறையில் பாலின வேறுபாட்டை நீக்குவதே இதன் நோக்கமாகும்.

10. நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுமத்தின் 28ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. லக்னோ

ஈ. பெங்களூரு

  • புது தில்லியில் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுமத்தின் (FSDC) 28ஆவது கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் தலைமைதாங்கினார். 2010இல் நிறுவப்பட்ட FSDC, நிதி அமைச்சகத்தின்கீழ் ஒரு சட்டப்பூர்வமற்ற உச்ச அமைப்பாக உள்ளது. 2008இல் இரகுராம் இராஜன் குழுவால் முன்மொழியப்பட்ட இது, RBI, IRDA, SEBI மற்றும் PFRDA போன்ற முக்கிய நிதி நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது இதில் நிதிச்செயலர், தலைமைப் பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதிச் சேவைகள் துறையின் செயலர் உள்ளிட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

11. 2024 – உலக சிந்தனை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Stand Together for Peace

ஆ. Our World, Our Thriving Future

இ. Our Planet, Our Peaceful Future

ஈ. Living Threads

  • பிப்.22 அன்று கொண்டாடப்படும் உலக சிந்தனை நாள், உலகம் முழுவதும் இளம்பெண்களிடையே நட்பு மற்றும் உடன்பிறந்தாள் நிலையை வலுப்படுத்துகிறது. இது இளம்பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, அவர்களின் அபரிமிதமான திறனை அங்கீகரிக்கிறது. தடைகளை உடைத்து, நட்பு மற்றும் அதிகாரமளிப்பதன்மூலம் பெண்களின் நிலையை உயர்த்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Our World, Our Thriving Future” என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

12. அண்மையில், ‘சர்வதேச சுவை விருதை’ வென்ற முதல் இந்திய உணவு பிராண்ட் எது?

அ. பார்லே

ஆ. ஹல்திராம்

இ. அமுல்

ஈ. பிரசுமா

  • இந்திய உறையுணவு பிராண்டான பிரசுமா, 2024 பிப்ரவரியில், ‘சர்வதேச சுவை விருதை’ வென்ற முதல் மற்றும் ஒரே இந்திய உணவு பிராண்டானது. பார்வை, வாசனை, சுவை மற்றும் அமைப்புபோன்ற மதிப்பிடு அளவுகோல்கள் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மனிதவளத் தலைநகராக தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு நாள் நடைபெறும், ‘யுமாஜின் 2024 (Umagine TN)’ என்ற தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாடு சென்னையில் தொடங்கியது. இந்த, ‘Umagine TN – 2024’ நிகழ்வின் கருப்பொருள் AT’TN – அதாவது, தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகும். இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry-CII) இணைந்து இம்மாநாடு நடத்தப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச Wi-Fi சேவைகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட முக்கியமான 500 இடங்களில் இலவச Wi-Fi சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துக்கென தனிக்கொள்கை, தனி துறை, பணிப் படை, ‘தமிழ்நெட்-99’ என்ற பெயரில் கடந்த 1997இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. தலைமுறையின் கடைசி அத்தியாயம்: பாலி சாம் நரிமன்

பாலி சாம் நரிமன் (10 ஜனவரி 1929 – 21 பிப்ரவரி 2024) உலக அளவில் புகழ்பெற்ற சட்ட அறிஞர். இந்திய உச்சநீதி மன்றத்தின் முதுபெரும் வழக்குரைஞர். 1991இல் பத்ம பூஷண், 2007இல் பத்ம விபூஷண் என்று இந்திய அரசின் தலைசிறந்த விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

1967 கோலக்நாத் வழக்கில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு உச்சநீதிமன்றம் வரம்புகளை ஏற்படுத்தியது. அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளில் மாற்றம் ஏற்படுத்த அனுமதி இல்லை என்பதை அந்த வழக்கு தெளிவுபடுத்தியது.

‘India’s Legal System; Can it be saved? (இந்தியாவின் நீதித்துறையைக் காப்பாற்ற முடியுமா?); ‘The state of The Nation’ (தேசத்தின் நிலைமை); ‘God save The Honourable Supreme Court’ (கடவுள்தான் உச்சநீதிமன்றத்தைக் காப்பாற்ற வேண்டும்); ‘Before Memory Fades’ (எனது நினைவு மங்கத்தொடங்கும் முன்னர்…) உள்ளிட்ட அவரது நூல்கள் மிகப் பிரபலமானவை.

3. சூரிய மின் தகடு அமைக்க மானியம்.

மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் சூரிய மின்தகடு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் சூரிய மின்தகடுகள் அமைக்க மானியம் பெறலாம். இந்தத் திட்டத்தின்கீழ் 1 கிலோ வாட் (KW) சூரியமின் தகடு அமைக்க `30,000 மானியமும், 2 கிலோவாட் (KW) சூரியமின் தகடு அமைக்க `60,000 மானியமும், 3 கிலோவாட் (KW) மற்றும் அதற்கு மேல் சூரிய மின்தகடு அமைக்க `78,000 மானியமும் வழங்கப்படுகிறது.

4. தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்.

நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் உள்ள ரெயில்நிலையங்கள் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு, ‘அம்ருத் பாரத் ரெயில் நிலையம்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிப்பது, இலவச Wi-Fi வசதி, காத்திருப்பறை, மின்தூக்கி – மின்படிகட்டு, உள்ளூர் தயாரிப்பை முன்னிலைப்படுத்தும், ‘ஒரு ரெயில் நிலையம் ஒரு தயாரிப்பு’ அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

இதில் தமிழ்நாட்டின் சென்னை கோட்டத்தில் 7 ரெயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரெயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தெற்கு ரெயில்வே சார்பில் 32 ரெயில் நிலையங்கள், தென்மேற்கு ரயில்வே சார்பில் தருமபுரி, ஒசூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. இதில் திருநெல்வேலி ரெயில் நிலையம் `270 கோடியிலும், கும்பகோணம் நிலையம் `118 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படும்.

5. இந்திய பெருங்கடலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகள் முத்தரப்பு பயிற்சி.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற, ‘தோஸ்தி-16’ என்ற முத்தரப்பு பயிற்சி மாலத்தீவுகளில் தொடங்கியது. இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள் நாடுகளின் கடலோரக் காவல்படையினரிடையே ஒத்துழைப்பு, செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய கடல்சார் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளவும், ‘தோஸ்தி-16’ முத்தரப்பு பயிற்சி உதவுகிறது.

6. புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை.01 முதல் அமல்.

‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நாடு முழுவதும் வரும் ஜூலை.01ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடை முறைச்சட்டம், 1898, இந்திய சாட்சிய சட்டம், 1872 ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த 3 புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முதல் முறையாக, ‘பயங்கரவாதம்’ என்ற வார்த்தைக்கான விளக்கம் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

7. `1,516 கோடியில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் `1516.82 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன்கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெருகிவரும் மக்கள்தொகையை கணக்கில்கொண்டு, நெம்மேலியில் இந்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன்கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் என்ற பெருமையை இதன்மூலம் தமிழ்நாடு அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!