TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 26th February 2024

1. பின்வரும் நாடுகளில், ‘தோஸ்தி’ என்ற பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் எவை?

அ. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள்

ஆ. மியான்மர், இலங்கை மற்றும் நேபாளம்

இ. இந்தியா, வங்காளதேசம் & மியான்மர்

ஈ. பூட்டான், நேபாளம் & மியான்மர்

  • கடந்த 1991ஆம் ஆண்டு முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தரப்பு கடலோரக் காவல்பயிற்சியான ‘தோஸ்தி-16’ என்ற பயிற்சிக்காக இந்திய மற்றும் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பல்கள் அண்மையில் மாலத்தீவுகளில் குழுமின. கடந்த 2012இல்தான் இலங்கை இந்தப் பயிற்சியில் இணைந்தது. வங்காளதேசம் ஒரு பார்வையாளர்ராக இந்தப் பயிற்சியில் பங்கேற்கும். கடல்சார் விபத்துகள் மற்றும் மாசுபாடுபோன்ற சூழ்நிலைகளில் பரஸ்பர செயல்பாட்டுத்திறன், இயங்குதன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இப்பயிற்சி கவனம் செலுத்துகிறது.

2. பழங்கால பாதாமி சாளுக்கியர் காலத்திய திருக்கோவில்கள் எந்த ஆற்றின் கரையோரம் உள்ள முடிமாணிக்யம் கிராமத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன?

அ. கோதாவரியாறு

ஆ. காவேரியாறு

இ. கிருஷ்ணா ஆறு

ஈ. தபியாறு

  • 1,300-1,500 ஆண்டுகள் பழமையான இரண்டு பாதாமி சாளுக்கிய காலத்திய திருக்கோவில்கள் மற்றும் 1,200 ஆண்டுகள் பழமையான முத்திரைக் கல்வெட்டு ஆகியவை கிருஷ்ணா ஆற்றுக்கு அருகில் உள்ள முடிமாணிக்யம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதாமி சாளுக்கியர்கள் மற்றும் மேற்கு மற்றும் கிழக்குச் சாளுக்கியர்களின் வம்சங்களை உள்ளடக்கிய சாளுக்கியர்கள் 6 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை தக்காணத்தை ஆண்டனர். பொ ஆ 550இல் பாதாமியைத் தலைநகரமாகக் கொண்டு முதலாம் புலகேசி இவ்வம்சத்தை நிறுவினார். 2ஆம் புலிகேசி, ஹர்ஷரையும் விஷ்ணுகுந்தினனையும் தோற்கடித்து, பேரரசை விரிவுபடுத்தினார்; ஆனால் பின்னர் வாதாபியை பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் இழந்தார்.

3. இராணி சென்னம்மாவுடன் தொடர்புடைய நிகழ்வு எது?

அ. மோப்லா கிளர்ச்சி

ஆ. அஹோம் கிளர்ச்சி

இ. கிட்டூரு கலகம்

ஈ. சன்யாசி கலகம்

  • பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இராணி சென்னம்மா மேற்கொண்ட கிளர்ச்சியின் 200 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், நாடுதழுவிய அளவில், ‘நானூ இராணி சென்னம்மா’ என்ற பிரச்சார இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் காகத்தியில் பிறந்த இவர், இராஜா மல்லசர்ஜாவை மணமுடித்த பிறகு கிட்டூருவின் இராணியானார். அவரது இறப்பிற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் சிவலிங்கப்பாவை வாரிசாக அங்கீகரிக்க மறுத்தது, கிட்டூரு கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. பிரிட்டிஷ் படைகள் ஆரம்பத்தில் இழப்புகளைச் சந்தித்தாலும், இறுதியில் 1824இல் கிட்டூரு கோட்டையைக் கைப்பற்றியது. இராணி சென்னம்மாவும் அவர்தம் குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்டனர்; அவர் 1829இல் பைல்ஹோங்கல் கோட்டையில் காலமானார்.

4. உத்தர பிரதேச மாநில அரசு தனது முதல், ‘ஆமைகள் காப்பகத்தை’ எந்த ஆற்றில் நிறுவவுள்ளது?

அ. சர்ஜு ஆறு

ஆ. சாரதா ஆறு

இ. கோமதியாறு

ஈ. பெலனாறு

  • உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா வனத்துறை, சர்ஜு ஆற்றில் ஆமைகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ‘Turtle Survival Alliance Foundation India’ என்ற அமைப்புடன் கூட்டிணைந்துள்ளது. ஏறக்குறைய 5,000 ஆமைகள் சர்ஜு ஆற்றில் வசித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழிந்து வரும் இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிராந்தியத்தின் வளமான ஆமை பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை இந்தக் கூட்டிணைவு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. அண்மையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?

அ. சுரேஷ் N படேல்

ஆ. A S இராஜீவ்

இ. பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா

ஈ. அரவிந்த குமார்

  • மகாராஷ்டிரா வங்கியின் முன்னாள் MD & CEO A S இராஜீவ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார். CVC சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட CVC, தற்போது 2023 மே மாதம் முதல் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் 2022 ஆகஸ்ட் முதல் ஊழல் கண்காணிப்பு ஆணையராக அரவிந்த குமார் ஆகியோருடன் மூன்று உறுப்பினர்களைக்கொண்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

6. 2024இல் ஐந்தாவது சர்வதேச கீதை மகோத்சவத்தை நடத்துகிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. மியான்மர்

இ. இலங்கை

ஈ. நேபாளம்

  • இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றிய சர்வதேச கீதை மகோத்சவத்தின் 5ஆவது பதிப்பு மார்ச்.01-03 வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இதன் கடந்த பதிப்புகள் மொரிஷியஸ், லண்டன், கனடா மற்றும் ஆசுதிரேலியா ஆகிய இடங்களில் நடந்தது. பகவத்கீதையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும் இந்த நிகழ்வு.

7. பழங்குடியின மாணவர்களின் நலத்தை மையமாகக்கொண்ட ஒரு முன்னெடுப்பைத் தொடங்குவதற்காக கீழ்காணும் எந்த இரண்டு அமைச்சகங்கள் கூட்டிணைந்துள்ளன?

அ. கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம்

ஆ. ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் விவசாய அமைச்சகம்

  • பொது சுகாதார முன்னெடுப்புகள்மூலம் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கூட்டு முயற்சியை ஆயுஷ் அமைச்சகமும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் இணைந்து அறிவித்துள்ளன. பழங்குடியின மக்களின் சுகாதாரத் தேவைகளை ஆய்வு செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு, குருதிச்சோகை, அரிவாள் செல் நோய்கள் போன்ற முக்கியத் துறைகளில் பொது சுகாதார சேவைகளை பூர்த்தி செய்வயதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

8. இராஷ்ட்ரிய உத்யமித விகாஸ் பரியோஜனாவின் பயனாளிகள் யார்?

அ. AB PM-JAY பயனாளிகள்

ஆ. PM SVANidhi பயனாளிகள்

இ. PM சுரக்ஷா பீமா யோஜனா பயனாளிகள்

ஈ. PM விஸ்வகர்மா யோஜனா பயனாளிகள்

  • இராஷ்ட்ரிய உத்யமிதா விகாஸ் பரியோஜனா என்பது ஒரு தேசிய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமாகும். இது தொழில்முனைவோர் பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திறன் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியான இத்திட்டம், குறிப்பாக PM SVANidhi திட்டத்தின் பயனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

9. 2024 – 8ஆவது ஆசிய பொருளாதார உரையாடலின் கருப்பொருள் என்ன?

அ. Asia and the Emerging World Order

ஆ. Global Trade and Finance Dynamics

இ. Geo-economic Challenges in an Era of Flux

ஈ. Sustainable Economic Development

  • 2024 – 8ஆவது ஆசிய பொருளாதார உரையாடலின் கருப்பொருள், “Geo-economic Challenges in an Era of Flux” என்பதாகும். இம்மாநாடு புனேவில் 2024 பிப்.29 முதல் மார்ச்.02 வரை நடைபெறும். வருடாந்திர புவி-பொருளாதார மாநாடான இதில், 11 நாடுகளைச் சேர்ந்த 46 பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் புனே சர்வதேச மையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றன.

10. துர்கா-2 என்ற லேசர் ஆயுதத்தை உருவாக்கவுள்ள அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. IIT மெட்ராஸ்

ஈ. NTRO

  • பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பானது (DRDO) DURGA-2 (Directionally Unrestricted Ray-Gun Array) என்ற லேசர் ஆயுதத்தை உருவாக்குகிறது. DURGA-2 என்பது 100 KW திறன்கொண்ட, இலகுரக, திசை-இயக்க ஆற்றல்கொண்ட ஆயுதமாகும். இது தரை, கடற்படை மற்றும் வான் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படலாம். DURGA-2ஆல் ஆளில்லா விமானம் அல்லது எறிகணை தாக்குதல்களை வானத்திலிருந்தவாறே தாக்கியழிக்க முடியும். இது ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடியது.

11. நரம்பு சிலந்தி நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணி எது?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. ஒட்டுண்ணி

ஈ. பூஞ்சை

  • Dracunculus medinensis’ என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான நரம்பு சிலந்தி நோயானது முற்றிலும் ஒழியும் நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2021இல் இதன் பாதிப்புகள் 14ஆகவும், 2022இல் 13ஆகவும், 2023இல் வெறும் 6ஆகவும் குறைந்துள்ளது. நரம்பு சிலந்தி வளர்புழு தொற்றுடைய நீர் வாழும் தெள்ளு பூச்சியுள்ள தண்ணீரைப் பருகும் நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று வருகிறது. பொதுவாகப் பெண் புழுக்களால் காலின் கீழ்ப்பகுதி சருமத்தில் கொப்பளங்கள் தோன்றுகிறது. தற்போது, இந்த நோய்க்கு மருந்து சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை.

12. 2024-25 சர்க்கரைப் பருவத்திற்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை (Fair and Remunerative Price) எவ்வளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?

அ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340

ஆ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.320

இ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.310

ஈ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.360

  • 2024-25ஆம் ஆண்டு சர்க்கரைப் பருவத்தில் (அக்டோபர்-செப்) கரும்பு கொள்முதலுக்கு குவிண்டால் ஒன்றுக்கு `340 ரூபாயை குறைந்தபட்ச ஆதார விலையாக சர்க்கரை ஆலைகள் வழங்க இந்தியப் பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது நடப்பு 2023-24 பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட சுமார் 8% அதிகமாகும். இந்தக் குறைந்தபட்ச ஆதார விலை 2024 அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை: தமிழ்நாடு வனத்துறை.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட நீலகிரி மார்டின் என்னும் கரும்வெருகு மற்றும் மூவகை நீர்நாய்கள் (ஆற்று நீர்நாய், சிறிய நகங்கள்கொண்ட ஆசிய நீர்நாய் மற்றும் யூரேசிய நீர்நாய்) வாழ்விட இழப்பு காரணமாக பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. இவையிரண்டும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தில் (IUCN) அழிந்துவரும் விலங்கினங்களைக் குறிக்கப் பயன்படும் சிவப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நீர்நாய் மற்றும் நீலகிரி கரும்வெருகு போன்ற அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு அழிந்துவரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையின் எழுச்சி நாள் ஆண்டுதோறும் பிப்.23ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2. கிண்டியில் `157 கோடியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை.

சென்னை கிண்டியில் `157.17 கோடியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோதி காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார்.

3. இராஜஸ்தானில் இந்தியா, ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சி தொடக்கம்.

இராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள உள்ள மஹாஜன் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டு இராணுவப் பயிற்சி தொடங்கியது. ‘தர்ம பாதுகாவலர்’ என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், இந்தியா தரப்பில் இராஜபுதன ரைபிள்ஸ் வீரர்களும், ஜப்பான் தரப்பில் அந்நாட்டின் 34ஆவது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர். இருநாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வளர்த்தல், இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துதல் ஆகியவையே இந்தப் பயிற்சியின் நோக்கம். சிறப்பு ஆயுத திறன்கள் குறித்த அடிப்படைகள், உத்திசார்ந்த கூட்டுப் பயிற்சிகள், கூட்டுத் திட்டமிடல் உள்ளிட்டவைமீது பயிற்சியில் கவனம் செலுத்தப்படும்.

4. பத்து ஆண்டுகளில் மாதாந்திர குடும்ப செலவு இருமடங்கு அதிகரிப்பு: குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வில் தகவல்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின்கீழ், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்தியது. குடும்பத்தின் மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் மற்றும் நாட்டின் கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களின் வாரியாக மதிப்பீடுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆய்வின்படி, தற்போதைய விலையில் சராசரி தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு நகர்ப்புறங்களில் கடந்த 2011-12ஆம் ஆண்டின் `2,630இலிருந்து கடந்த 2022-23ஆம் ஆண்டில் `6,459ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் `1,430இலிருந்து `3,773ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதேகாலகட்டத்தில் தனிநபர் வருமானம் நகர்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆய்வின்படி, நாட்டின் விளிம்புநிலை ஏழைகள் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு `46 (மாதத்துக்கு `1,371) மற்றும் நகர்ப்புறத்தில் `67 (மாதத்துக்கு `2,001) மட்டுமே செலவழிப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் சராசரி மாதாந்திர குடும்பசெலவு:

கிராமப்புறம்: `5310. நகர்ப்புறம்: `7630.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!