TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 28th & 29th December 2023

1. FAME இந்தியா திட்டத்தை நிர்வகிக்கும் அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. ஆயுஷ் அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • கனரக தொழிற்துறை அமைச்சகம், Faster Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles in India (FAME India) திட்டத்தை நிர்வகிக்கிறது. கடந்த 2015இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டில் மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாகும். கனரக தொழிற்துறை அமைச்சகத்தால் FAME இந்தியா திட்டத்தின் கட்டம்-II செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கடந்த 2019 ஏப்ரல்.01 முதல் தொடங்கி 5 ஆண்டுகாலம் செயலில் இருக்கும். இதன் மொத்த நிதி ஒதுக்கீடு `10,000 கோடியாகும். இதன் முதற்கட்டம் – FAME I அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் கொள்முதலின்போது ஊக்கத்தொகைகளை வழங்கியது. மின்சார வாகனங்களுக்கான FAME-2இன் மானியம் 2024 மார்ச்.31 அன்று முடிவடையும்.

2. அண்மையில், 2023 – சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றவர் யார்?

அ. தொம்மராஜு குகேஷ்

ஆ. இரமேஷ்பாபு பிரக்ஞானந்தா

இ. விதித் சந்தோஷ் குஜராத்தி

ஈ. சந்தீபன் சந்தா

  • 2023 – சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில், இந்திய செஸ் வீரர் தொம்மராஜு குகேஷ், சகநாட்டவரான பென்டலா ஹரிகிருஷ்ணாவை டிராசெய்து பட்டத்தை வென்றார். இதற்கிடையில், அர்ஜுன் எரிகைசி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

3. இந்தியாவின் முதல் இமாலய வான் பயணம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. லடாக்

ஈ. ஜம்மு & காஷ்மீர்

  • டிச.16 அன்று, நாட்டின் முதல் இமாலய வான் பயணம் உத்தரகாண்டிலிருந்து தொடங்கப்பட்டது. கைரோகாப்டர் சாகசத்தைத் தொடங்கிய நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்சர் தளமான பாங் அணை, எந்த ஆற்றின்மீது அமைந்துள்ளது?

அ. ராவி

ஆ. பியாஸ்

இ சட்லெஜ்

ஈ. நர்மதா

  • காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பாங் அணை வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதியை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அண்மையில் வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
  • பாங் அணை ஏரி (மகாராணா பிரதாப் சாகர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஷிவாலிக் மலைகளின் ஈரநில மண்டலத்தில் பியாஸ் ஆற்றின்மீது பாங் அணை கட்டப்பட்டதால் உருவான மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்த் தேக்கமாகும். கடந்த 1983ஆம் ஆண்டில், முழு நீர்த்தேக்கமும் ஹிமாச்சல பிரதேச மாநில அரசால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பாங் அணை ஏரி 2002 நவம்பரில் இராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது.

5. அண்மையில் தொடங்கப்பட்ட, “SUPACE” என்பது கீழ்காணும் எதனுடன் தொடர்புடையது?

அ. இந்திய நாடாளுமன்றம்

ஆ. இந்திய உச்சநீதிமன்றம்

இ. இந்திய வான்படை

ஈ. இந்தியாவின் சுற்றுச்சூழல்

  • SUpreme Court Portal for Assistance in Court’s Efficiency (SUPACE) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவியாகும். இது பொருத்தமான சட்டங்களைச் சேகரித்து, அவற்றை நீதிபதிகளுக்கு அவர்களின் ஆய்வுக்காக எளிதான முறையில் வழங்குகிறது. ஆராய்ச்சி செயல்முறையை ஒழுங்குபடுத்துவதன்மூலம் நீதிபதிகளின் பணிச் சுமையைக் குறைக்கும் ஓர் ஆதரவு அமைப்பாக இது செயல்படுகிறது. SUPACE என்பது முடிவெடுக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதைக் கவனத்தில்கொள்ளவேண்டும்; மாறாக, அதன் நோக்கம் மெய்களைச் செயலாக்குவது மற்றும் முடிவெடுப்பதில் உதவ மதிப்புமிக்க தகவல்களை நீதிபதிகளுக்கு வழங்குவதாகும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நிகுஸ்த் 2.0’ என்பது கீழ்காணும் எந்த நோயுடன் தொடர்புடையது?

அ. காசநோய்

ஆ. நீரிழிவு நோய்

இ. புற்றுநோய்

ஈ. தொழுநோய்

  • ஹேன்சன் நோய் என்றும் குறிப்பிடப்படுகிற, ‘தொழுநோய்’ மைக்கோபாக்டீரியம் லெப்ரேயினால் ஏற்படுகிறது. இந்த நிலை தோல், புற நரம்புகள், மேல் சுவாசக்குழாயின் மேற்பரப்புகள் மற்றும் கண்புறங்களைப் பாதிக்கிறது. எல்லா வயதினருக்கும் ஏற்படும் இந்தத் தொழுநோய் குணப்படுத்தக்கூடியதாகும். தொழுநோயானது மூக்கு மற்றும் வாயில் இருந்து வரும் நீர்த்துளிகள்மூலமும் சிகிச்சையளிக்கப்படாத நோயாளிகளுடன் நெருங்கிப் பழக்குவதான் மூலமும் பரவுகிறது. இந்தியா, கடந்த 2005இல், ‘தொழுநோய் ஒழிக்கப்பட்ட’ நிலையை அடைந்தது. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் தொழுநோய் மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த வலைத்தளமாக நிகுஸ்த் 2.0 உள்ளது.

7. புதிய இந்திய தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, பயனர்களுக்குத் தேவையில்லாமல் செய்தி அனுப்புவதற்கு அதிகபட்சம் விதிக்கப்படும் அபராதம் எவ்வளவு?

அ. ரூ.25,000

ஆ. ரூ.50,000

இ. ரூ.2,00,000

ஈ. ரூ.3,00,000

  • இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டம் பயனர்களுக்கு தேவையில்லாத செய்திகளை அனுப்பினால் `50,000 அபராதம் விதிக்க வழிவகை செய்துள்ளது. இதுபோன்ற வீண்செய்திகளை மீண்டும் மீண்டும் அனுப்புபவர்களுக்கு, அவர்களின் தொலைத்தொடர்பு வலையமைப்பை இடைநிறுத்தவும் இச் சட்டம் விதி வழங்குகிறது. தொல்லைதரும் செய்திகள் மற்றும் அழைப்புகளைத் தடுப்பதற்கான இந்த ஏற்பாடு, ‘தொந்தரவு செய்யாதீர்கள்’ என்ற விருப்பத்தில் பயனர்கள் இருந்தபோதிலும் சந்தாதாரர்களைத் தொந்தரவுசெய்யும் டெலிமார்க்கெட்டர்கள் மீதான அதிகரித்து வரும் புகார்களுக்குத் தீர்வுகாண்பதற்காக சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

8. ரூபாய்-திர்ஹாம் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் இந்திய ரூபாய் செலுத்தி, இந்தியா, அண்மையில் எந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது?

அ. சௌதி அரேபியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. கத்தார்

ஈ. ஓமன்

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாய் கொடுத்து இந்தியா கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்தது. இது கடந்த 2022 ஜூலையில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ரூபாய்-திர்ஹாம் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒருபகுதியாகும். இந்தியன் ஆயில் நிறுவனம் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திற்கு (ADNOC) 1 மில்லியன் பீப்பாய்கள் ஐக்கிய அரபு அமீரக கச்சா எண்ணெய் வாங்குவதற்காக பணம் செலுத்தியது.

9. ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சிக்கான வடகிழக்கு நிறுவனம் (NEIAFMR) அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. திரிபுரா

  • இது அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பாசிகாட்டில் அமைந்துள்ளது. அருணாச்சல பிரதேச பயணத்தின்போது, ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், நாட்டுப்புற மருத்துவத்தின் தேசிய மையமாக NEIAFMRஐ உருவாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார். கூடுதலாக செலவிடப்படும் `53 கோடி உட்கட்டமைப்பு, ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம்பற்றிய ஆராய்ச்சியில் திறனை வளர்க்கவும், தரமான ஆயுர்வேதக் கல்வியை அறிமுகப் படுத்தவும் உதவும்.

10. 2024 – BRICS உச்சிமாநாட்டை நடத்தும் நகரம் எது?

அ. கசான், ரஷ்யா

ஆ. சாவ் பாலோ, பிரேசில்

இ. ஷாங்காய், சீனா

ஈ. ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா

  • 2024ஆம் ஆண்டுக்கான BRICS உச்சிமாநாடு ரஷ்யாவின் கசான் நகரத்தில் நடைபெறவுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2023 ஏப்ரல்.3 அன்று இந்த உச்சிமாநாட்டை நடத்துவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் அண்மைய அறிக்கையின்படி, BRICS உச்சிமாநாடு 2024ஆம் ஆண்டு அக்டோபரில் கசானில் நடைபெறவுள்ளது. சுமார் முப்பது நாடுகள் BRICS உடன் உறவுகளை வைத்திருக்க விரும்புவதாக அவர் கூறினார்.

11. பவளப்பாறைகள் கடலடி மட்டத்தில் எத்தனை சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன?

அ. 0.1%க்கும் குறைவாக

ஆ. சுமார் 1%

இ. சுமார் 1.5%

ஈ. சுமார் 2.5%

  • சமீபத்திய அறிக்கைகளின்படி, பவளப்பாறைகள் மொத்த கடல் பரப்பில் 0.1%க்கும் குறைவாகவே உள்ளன. இவை அறியப்பட்ட மொத்த கடலுயிரினங்களில் 25% உயிரினங்களுக்கு உதவியாக இருந்து கடல்சூழலியலில் பல்லுயிர் பெருக்கத்திற்கு முதன்மையாக விளங்குகின்றன. காலநிலை மாற்றம் அவற்றின் உயிர்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க இடரை ஏற்படுத்துகிறது. துபாயைச் சார்ந்த, ‘கோரல் வைட்டா’ என்ற துளிர் நிறுவனம், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வகத்தில் வெப்பத்தை எதிர்க்கும் திறன்கொண்ட பவளப்பாறைகளை வளர்த்து அவற்றை மீண்டும் கடலுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

12. வான் பொருட்களில், ‘அபோபிஸ்’ என்பது எதனைக் குறிக்கிறது?

அ. விண்மீன் பேரடை

ஆ. சிறுகோள்

இ. புறக்கோள்

ஈ. நிலா

  • 2029ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வரவுள்ள, ‘அபோபிஸ்’ என்ற சிறுகோளை ஆய்வுசெய்ய NASA மீண்டும் பூமிக்கும் திரும்பும் ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. ‘அபோபிஸ்’ என்பது எகிப்தின் ‘குழப்பத்தின் கடவுள்’ என்பதன் பெயராகும். இந்தச் சிறுகோள் பூமிக்கு மிக நெருக்கமாக வரும்போது பூமியின் ஈர்ப்புவிசையால் அந்தச் சிறுகோளின் சுற்றுப்பாதை மற்றும் அதன் மேற்பரப்பு எவ்வாறு மாறுகிறது என்பதை இந்த விண்கலம் ஆயும்.

13. அண்மையில் காலஞ்சென்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் (தேமுதிக) நிறுவனர் திரு. விஜயகாந்த், கீழ்க்காணும் எந்தச் சிறப்புப் பெயரில் அன்பாக அழைக்கப்படுகிறார்?

அ. தலைவா

ஆ. தளபதி

இ. கேப்டன்

ஈ. புரட்சி திலகம்

  • தமிழ்நாட்டின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்த்தின் (DMDK) நிறுவனர் விஜயகாந்த், 2023 டிசம்பர்.28 அன்று தனது 71ஆம் வயதில் காலமானார். வெற்றிப்படமான, ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தில் நடித்ததில் இருந்து அவர் ‘கேப்டன்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். கடந்த 2006இல் அரசியலில் நுழைந்தார். 2006 மாநிலத்தேர்தலில் சுயேட்சையாக 8.38% வாக்குகளைப்பெற்று மூன்றாவது சக்தியாக விஜயகாந்த் உருவெடுத்தார். பின்னர் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது வாக்கு சதவீதம் 10%ஐத் தாண்டியது. 2011இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, 29 சமஉக்களுடன் விஜயகாந்தை எதிர்க்கட்சித் தலைவராக்கிய தேமுதிக, சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அதிமுகவிலிருந்து விலகிய பிறகு அவரது அரசியல் செல்வாக்கு சரிந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. திருவள்ளூர் விவசாயிக்குப் பிரதமர் பாராட்டு.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தின் விவசாயி ஹரிகிருஷ்ணனுக்கு, ‘வணக்கம்’ என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வேளாண்மையில் நானோ யூரியா அறிமுகம் போன்ற புதுமையான திட்டங்களுக்காகப் பிரதமர் அவரைப் பாராட்டினார். அவர் டிரோன்கள் மற்றும் பிற நவீன நடைமுறைகளைப்பயன்படுத்தி உழவைப் பெருக்கி வருகிறார்.

2. ‘அம்ருத் பாரத்’ விரைவு இரயில்.

வரும் டிசம்பர்.30ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் முதல், ‘அம்ருத் பாரத்’ இரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்கவுள்ளார். இந்த ரயில், தர்பங்கா-அயோத்தி-ஆனந்த்விகார் இடையே பயணிக்கும்.

3. தில்லியில் நடைபெறும் தலைமைச் செயலர்கள் தேசிய மாநாடு.

மாநில தலைமைச் செயலர்களின் மூன்றாவது தேசிய மாநாடு தில்லியில் தொடங்கியது. ஒன்றிய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் மாநில தலைமைச்செயலர்கள் மாநாடு கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு 2022 ஜூன் மாதம் தர்மசாலாவிலும், 2ஆவது மாநாடு தில்லியில் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 3ஆவது தேசிய மாநாடு தில்லியில் தொடங்கியது. இதில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில், மக்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும். இவைதவிர, சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

4. வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா.

சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொள்ளவுள்ளதாகவும், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர் மற்றும் “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூல் வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

வைக்கம் போராட்டம்:

கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் திருக்கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, கடந்த 1924ஆம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, கேரள போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி, “இந்தப் போராட்டத்துக்கு நீங்கள் வந்துதான் உயிர்கொடுக்கவேண்டும், உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று கோரினர். கடிதம் கிடைத்ததும், உடனே, பெரியார் தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு வந்து; வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார்.

போராட்டம் தீவிரமடைந்தது. மக்கள் திரண்டு போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். அதனால் பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். முதல்முறை 1 மாதமும், இரண்டாம் முறை ஆறு மாதமும் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் கால்-கைகளில் சங்கிலியால் கட்டுற்று அவர் பெருங்கொடுமைப்படுத்தப்பட்டார். இடையில் திருவாங்கூர் அரசர் இயற்கை எய்திடவே, ராணியார் அனைவரையும் விடுதலை செய்தார். பெரியாருடன் சமாதானம் நடைபெற்று, வைக்கம் தெருவில் நடக்கக்கூடாது என்ற தடையை இராணி நீக்கினார். இதனால், பெரியாரின் போராட்டம் மகத்தான வெற்றியில் முடிந்து, ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் சமூக அளவில் சாதி காரணமாக நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்திட நடைபெற்ற முதல் போராட்டம் இந்த வைக்கம் போராட்டம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!