TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 28th February 2024

1. எந்த இருநாடுகளுக்கு இடையே, ‘தர்மா கார்டியன்’ என்ற பயிற்சி நடத்தப்படுகிறது?

அ. இந்தியா & ஜப்பான்

ஆ. இந்தியா & இலங்கை

இ. இந்தியா & எகிப்து

ஈ. இந்தியா & ஆஸ்திரேலியா

  • இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானின் தரைப்படை இடையேயான 5ஆவது ‘தர்மா கார்டியன்’ கூட்டு இராணுவப் பயிற்சி இராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 மார்ச்.09 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘தர்மா கார்டியன்’ பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஜப்பானில் மாறி மாறி நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி இருதரப்பு படைகளுக்கும் இடையே பரஸ்பர இயக்கம், நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த வழிவகுக்கும். இது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும்.

2. ஆற்றுக்கால் பொங்கல் விழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • பெண்கள் அதிகளவில் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பக்தர்களாலும் கடைப்பிடிப்பதன்மூலம் உலகளவில் விரிவடைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் ஆற்றுக்கால் பகவதியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு மலையாள மாதமான மகரம் அல்லது கும்பத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் நீடிக்கும். 9ஆவது நாளில், ஆற்றுக்கால் பொங்கல் மகோற்சவம் நிகழ்கிறது. இதன் சமயம் பகவதி தேவிக்கு இனிப்புப்பாயசம் வழங்குவது நடைபெறுகிறது.

3. இந்திய சூரிய மின்னாற்றல் கழகமானது (SECI) இந்தியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை கீழ்காணும் எந்த மாநிலத்தில் வெற்றிகரமாக தொடக்கியுள்ளது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஜார்கண்ட்

இ. சத்தீஸ்கர்

ஈ. குஜராத்

  • இந்திய சூரிய மின்னாற்றல் கழகமானது உலக வங்கி மற்றும் தூய தொழில்நுட்ப நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், மாலை நேரத்தில் அதிக மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்னாற்றலுக்காக சூரிய ஆற்றலை மின்கலத்தில் சேமிக்கிறது. இருமுக சூரியவொளி மின்தகடுகளைக் கொண்டு அதிக மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இது, ஆண்டுதோறும் பல டன்கள் CO2 உமிழ்வைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4. சமீபத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் கேழல்மூக்கனை (Purple Frog) காப்பதற்காக சிறப்பு நிதியத்தை நிறுவிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிசா

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • தொன்மாக்கள் காலதிலிருந்தே வாழ்ந்து வரும், ‘வாழும் புதைபடிவமாக’ கருதப்படும் கேழல்மூக்கனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு நிதியத்தை நிறுவியுள்ளது. உலக அளவில் அரிதான தவளை இனங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது, ‘Sooglossidae’ குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நிலத்தடியிலேயே செலவிடுகிறது; பருவமழையின்போது இனச்சேர்க்கைக்காக மட்டுமே நிலத்திற்குமேல் வருகிறது. ஒரு தனித்துவமான தோற்றம், குட்டையான பின்னங்கால் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற குறிப்பிட்ட வாழ்விடத்தில் மட்டுமே வசிப்பதால், இந்த இனம் IUCNஆல், ‘அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம் – Near Threatened’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. WPAஇன் அட்டவணை-Iஇன்கீழ் இது இடம்பெற்றுள்ளது.

5. IIT மெட்ராஸ் ஆனது எந்த நிறுவனத்துடன் இணைந்து, ‘Garbhini-GA2’ என்ற AI மாதிரியை உருவாக்கியுள்ளது?

அ. பெயர்ச்சி சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (THSTI)

ஆ. IIM அகமதாபாத்

இ. IISc பெங்களூர்

ஈ. IIT பம்பாய்

  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT மெட்ராஸ்) மற்றும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் & டெக்னாலஜி இன்ஸ்டிடியூட், ஃபரிதாபாத் இணைந்து பிறப்பு விளைவுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி பல்துறைக் குழு-டிபிடி இந்தியா முன்முயற்சித் திட்டத்தின்கீழ் இரண்டாம், மூன்றாம் மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவின் வயதைத் துல்லியமாக நிர்ணயிக்க முதன்முறையாக இந்திய மக்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ‘Garbhini-GA2’ இந்திய மக்களுக்கான கருவின் வயதைத் துல்லியமாக மதிப்பிடுவதுடன், ஏறத்தாழ 3 மடங்கு பிழைகளைக் குறைக்கிறது.

6. உலக வர்த்தக அமைப்பின் (WTO) 13ஆவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. கலிபோர்னியா

இ. அபுதாபி

ஈ. பாரிஸ்

  • உலக வர்த்தக அமைப்பின் 13ஆவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் (ADNEC) 2024 பிப்.26 முதல் 29 வரை நடைபெறுகிறது. இம்மாநாடு பலதரப்பு வர்த்தக அமைப்பை மறுபரிசீலனை செய்ய மற்றும் WTOஇன் எதிர்காலப் போக்கை பட்டியலிட உலகம் முழுவதிலும் உள்ள வர்த்தக அமைச்சர்களை ஒன்றிணைக்கும். உலக வர்த்தக அமைப்பின் (WTO) சிக்கல்தீர்வு செயல்பாட்டை சீர்திருத்துதல் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தலை ஊக்குவிக்கும் மீன்பிடி மானியங்களை ஒழித்தல் போன்றவை இம்மாநாட்டின் முன்னுரிமைப் பொருட்களில் அடங்கும்.

7. நாட்டின் மிகநீளமான வடங்கள்-தாங்கு பாலமான, ‘சுதர்சன சேது’ திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. கோவா

  • ஓகா பிரதான நிலப்பகுதியையும் பேட் துவாரகா தீவையும் இணைக்கும், ‘சுதர்சன சேது’ சுமார் `979 கோடி செலவில் கட்டப்பட்டதாகும். சுமார் 2.32 கிமீ நீளமுள்ள இந்த வடங்கள்-தாங்கு பாலம், நாட்டின் மிக நீளமான வடங்கள்-தாங்கு பாலமாகும். இதனை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

8. மிகப்பெரிய உலகளாவிய ஜவுளிக் கண்காட்சியான, ‘பாரத் டெக்ஸ் – 2024’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. மதுரை

ஆ. புது தில்லி

இ. ஜெய்ப்பூர்

ஈ. போபால்

  • குறிப்பிடத்தக்க உலகளாவிய ஜவுளிக் கண்காட்சியான, ‘பாரத் டெக்ஸ் – 2024’ஐ பிரதமர் நரேந்திர மோதி புது தில்லியில் தொடக்கி வைத்தார். பாரத மண்டபம் மற்றும் யஷோ பூமி ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த நிகழ்வில், 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுமார் 40,000 பார்வையாளர்கள் இடம்பெறுவர். இந்திய பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைப்பதிலும், தொழில்நுட்பத்தை பாரம்பரியத்துடன் இணைப்பதிலும், ‘பாரத் டெக்ஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த நிகழ்வு, ‘ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற நோக்கத்தை அடையாளப்படுத்தி, பல்வேறு ஜவுளி பாராம்பரியங்களை வெளிப்படுத்தியது.

9. ‘சவேரா’ என்ற பெயரில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. கேரளா

இ. ஹரியானா

ஈ. இராஜஸ்தான்

  • ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதனைத் தடுப்பதற்கான சோதனை முயற்சியான, ‘சவேரா’ திட்டத்தைத் தொடங்கினார். மெடாண்டா அறக்கட்டளை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள, ‘சவேரா’ திட்டமானது மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளுக்கு பார்வையற்ற பெண்களின் தொட்டுணரக்கூடிய உயர் உணர்திறனைப் பயன்படுத்துகிறது. இது அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை விளைவுகளை மேம்படுத்தும்.

10. பேட் தீவு அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கோவா

ஈ. கேரளா

  • அரபிக்கடலில், 2.32 கிமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் மிகநீளமான வடங்கள்-தாங்கு பாலமான, ‘சுதர்சன சேது’வை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். பேட் துவாரகாவை குஜராத்தின் பிரதான நிலப்பகுதியான ஓகாவுடன் இணைக்கிற இப்பாலம், பகவத்கீதையால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை மற்றும் கிருஷ்ணரின் உருவங்களுடன் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பாலத்தில் 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தைக் கட்டமைப்பதற்கான செலவு `979 கோடியாகும். கிருஷ்ணரின் இருப்பிடமாக கருதப்படும் பேட் துவாரகா, திருக்கோவில்கள், வெண்மணல் கடற்கரைகள் மற்றும் கட்ச் வளைகுடா முகப்பில் உள்ள பவளப்பாறைகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிறிய தீவாகும்.

11. 2030-க்குள் ஆண்டுக்கு 1-5 இலட்சம் டன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ள நாடு எது?

அ. ஈரான்

ஆ. மலேசியா

இ. வியட்நாம்

ஈ. ஈராக்

  • அதன் ஆற்றல் மாற்றத்தின் முக்கிய அங்கமாக, 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 1-5 இலட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு ஹைட்ரஜன் (H) உற்பத்தியை மேற்கொள்ள வியட்நாம் இலக்கு வைத்துள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை 10-20 மில்லியன் டன்னாக அதிகரிக்கவும் அது திட்டமிட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, நிலையான ஆற்றல் முயற்சிகளுக்கு வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு உலகளாவிய CO2 நடுநிலையாக்கல் முயற்சிகளுக்கு பங்களிப்பதே இதன் நோக்கமாகும்.

12. NTPC புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமானது அண்மையில் கீழ்காணும் எந்த மாநிலத்தில் தனது முதலாவது சூரியவொளி மின்னாற்றல் உற்பத்தித் திட்டத்தைத் தொடக்கியது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. ஒடிசா

ஈ. பீகார்

  • NTPC புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமானது (NTPC-REL) தனது முதலாவது சூரியவொளிமூலம் மின்னாற்றல் உற்பத்தித் திட்டத்தை இராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கியது. 70 மெகாவாட் (MW) உற்பத்தித் திறன்கொண்ட இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 370 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது NTPCஇன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்க உத்தியின் ஒருபகுதியாகவும் விளங்குகிறது. தெலுங்கானாவில், இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரியவொளி மின்னுற்பத்தி நிலையத்தையும் NTPC உருவாக்கி வருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ரெயில் விபத்தைத் தடுக்க உதவிய முதிய தம்பதிக்கு `5 இலட்சம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

முதிர்ந்த வயதையும், இருள்சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் பெரும்விபத்து நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்குடன் ரெயில் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரெயிலை நிறுத்திய சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியின் வீரதீரச்செயலைப் பாராட்டி, `5 லட்சத்துக்கான காசோலையை முதிய தம்பதியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த முதிய தம்பதி தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர்.

2. ககன்யான்: விண்வெளிக்குச் செல்லும் நான்கு இந்தியர்கள் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின், ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் மோதி அறிவித்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இத்திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரின் பெயர்களை பிரதமர் அறிவித்தார்.

`1,800 கோடி மதிப்பில் 3 திட்டங்கள்:

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இராக்கெட்டுகளின் சீரான காற்று வெளிப்படுத்துதல் செயல்பாட்டை பரிசோதிக்கும், ‘டிரைசோனிக் காற்று சுரங்கப்பாதை’ அமைப்பு, தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் ISROஇன் உந்துவிசை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செமி-கிரையோஜெனிக் எஞ்சின் மற்றும் எஞ்சினின் பல்வேறு நிலை பரிசோதனை சோதனை வசதி மற்றும் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவன் ஏவுதளத்தில் அமைக்கப்பட்டுள்ள PSLV ஒருங்கிணைப்பு வசதி ஆகியவற்றை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவிருக்கும் இந்த மூன்று திட்டங்களும் `1,800 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

3. ரோகிணி இராக்கெட்.

நாட்டின் 2ஆவது இராக்கெட் ஏவுதளமான குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார். அங்கு சோதனை முறையில் ரோகிணி ராக்கெட் விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுமையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க, ‘RH 200 சவுண்டிங்’ ரோகிணி இராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தயாரிக்கும் PSLV; GSLV; மற்றும் GSLV Mk-III ஆகிய முக்கியமான இராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது ‘RH 200’ என்று அழைக்கப்படும் ‘ஆய்வு எறிகணை’ இராக்கெட்டாகும். இந்த வகை ராக்கெட்டை பயன்படுத்தி காற்றின் திசை வேகம், ஒலியெழுப்பும் இராக்கெட்டுகளின் வளர்ச்சி, இராக்கெட்டுகளில் உயிர்வாழ்வு உள்ளிட்ட பல முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

குலசேகரன்பட்டினம் ஏன்?

  • ஏவுதளம் புவி நிலநடுக்கோட்டுக்கு அருகில் இருக்கவேண்டும்.
  • ஏவப்படும் விண்கலம் தென்துருவத்தை நோக்கி, கிழக்குக்கடற்கரைக்கு அருகில் இருக்கவேண்டும்.
  • ஏவுகலத்திலிருந்து பிரிந்துவிழும் பாகங்கள் கடலில் விழ வேண்டும்.
  • பூமியின் சுழல் வேகம் 0.5 கிமீ/ நொடி கூடுதலாகக் கிடைக்கும். இதனால், அதிக எடைகொண்ட விண்கலத்தை அனுப்ப முடியும்.
  • காற்றின் வேகம் 30 கிமீ-க்குள் இருக்கவேண்டும்.
  • குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாக இருக்கவேண்டும்.
  • புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும்.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இராக்கெட்களின் பாகங்கள், இலங்கையில் மக்கள் வசிப்பிடத்தில் விழாமல் இருக்க, ‘Dogleg Maneuver’ என்ற முறையில் வளைந்துசெல்லும் படி அனுப்பப்படுகிறது. இதனால், எரிபொருள் செலவு கூடுகிறது.
  • பூமத்திய ரேகையில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் ஸ்ரீஹரிக்கோட்டா உள்ளது. 8.36 டிகிரி வடக்கில் உள்ளது குலசேகரன்பட்டினம். இதனால், இங்கிருந்து ராக்கெட்களை ஏவினால் எரிபொருள் செலவு குறையும். ராக்கெட்டின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
  • குலசேகரன்பட்டின ஏவுதளம் அருகில், ‘விண்வெளி தொழிற்பூங்கா’ தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

4. லோக்பால் தலைவராக A M கான்வில்கர் நியமனம்.

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி A M கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம் பி-க்கள், மத்திய அரசுப்பணியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும். இதற்கு முன்பு லோக்பால் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் பதவி வகித்தார். அவர் கடந்த 2022ஆம் ஆண்டு மே.27ஆம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார். அதன் பின்னர், அந்த அமைப்புக்கு முன்னாள் நீதிபதி பிரதீப் குமார் மொகந்தி பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!