TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 29th November 2023

1. மைதை மாயெக் எழுத்து வடிவத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர் 🗹

இ. நாகாலாந்து

ஈ. மிசோரம்

  • மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங், மைதை மாயெக் எழுத்துவடிவம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் இருமொழிப்பதிப்பை மணிப்பூரி மொழியில் இம்பாலில் வெளியிட்டார். நவம்பர்.26 அன்று இந்திய அரசியலமைப்பு நாளன்று அது வெளியிடப்பட்டது.

2. ‘விரைவாக நீதி பெறுவதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை’ எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம் எது?

அ. மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் 🗹

ஆ. தில்லி உயர்நீதிமன்றம்

இ. மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

ஈ. பம்பாய் உயர்நீதிமன்றம்

  • மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், “விரைவாக நீதிபெறுவதற்கான உரிமை என்பது அடிப்படை உரிமை” என்று கூறியுள்ளது. அதே வேளையில் ஒவ்வொரு காலாண்டிலும் 25 பழைய வழக்குகளுக்கு மாவட்ட நீதிமன்றங்கள் தீர்வுகாணவேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆணைக்கு எதிரான மனுவையும் அது நிராகரித்தது. ஒரு நீதி மன்றம் அதன் பழைய 25 வழக்குகளுக்கு ஒரு காலாண்டில் தீர்வுகாணத் தவறினால், அவை அடுத்த காலாண்டில் சேர்க்கப்படும். நிர்வாக ரீதியான இந்த ஆணையை எதிர்த்து மத்திய பிரதேசம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீண்ட நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3. கம்பளா பந்தயம் என்னும் பாரம்பரிய நிகழ்வு நடைபெறும் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா 🗹

ஈ. ஒடிசா

  • ‘கம்பளா’ என்பது கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில், குறிப்பாக துளு மொழிபேசுவோர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டாகும். சமீபத்தில் பெங்களூருவில் ‘கம்பளா’ பந்தயங்கள் நடத்தப்பட்டன; இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருகைதந்தனர். கம்பளா பந்தயம் கடந்த காலங்களில் உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது; ஆனால் கர்நாடக மாநில அரசு அந்தப் பந்தயங்களை நடத்த அனுமதிக்கும் விதமாக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

4. இந்தியாவிற்கு C295 இரக விமானங்களை வழங்குகிற நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. அமெரிக்கா

ஈ. ஸ்பெயின் 🗹

  • ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக C295 இரக விமானங்களைத் தயாரித்து அளிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஏர் பஸ் நிறுவனமும் கடந்த 2021இல் கையெழுத்திட்டன. C295 வகையைச் சேர்ந்த 56 விமானங்களை இந்திய வான்படைக்கு அளிப்பது அந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இவற்றில் சுமார் பதினாறு விமானங்கள் ஸ்பெயினிலிருந்து வாங்கப்படும். இந்தியாவிற்கு தேவைப்பட்டால் மேலும் பல C295 இரக விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
  • இவ்வாரம், ‘ஸ்பெயின்-இந்தியா மன்றம்’ புது தில்லியில் நடத்தப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக இந்தமன்றம் நடத்தப்பட்டது. இந்தோ-பசிபிக்-மத்திய தரைக்கடல் கூட்டாண்மைக்காக இந்தியத்திருநாட்டுடன் ஸ்பெயின் முக்கிய பங்காளராக உள்ளது.

5. ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் புதிய பெயர் என்ன?

அ. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் 🗹

ஆ. நமோ ஆயுஷ்மான் மந்திர்

இ. பாரத் ஆரோக்கிய மந்திர்

ஈ. நயா பாரத் மந்திர்

  • ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு, ‘ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்’ எனப் பெயரிட அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை முழுவதுமாக செயல்படுத்த மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் இலச்சினை இந்தப் புதிய பெயரோடு அப்படியே எந்த மாற்றமுமில்லாமல் இருக்கும். அதோடு, ‘ஆரோக்கியம் பரமம் தனம்’ என்ற புதிய முழக்கவரியும் அதில் இடம்பெற்றிருக்கும்.

6. 2023ஆம் ஆண்டின் அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளிவிவர அறிக்கையின்படி, 2022-23ஆம் ஆண்டில், கீழ்காணும் எந்தப் பொருளின் உற்பத்தி எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளது?

அ. பால்

ஆ. முட்டை

இ. இறைச்சி

ஈ. கம்பளி 🗹

  • தேசிய பால் நாள் நிகழ்வின்போது, ‘அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளிவிவரங்கள் – 2023’ என்ற அறிக்கையை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்டார். இது விலங்குகளின் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது (மார்ச் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை). கடந்த ஐந்து ஆண்டுகளில் 2022-23ஆம் ஆண்டில் பால், முட்டை மற்றும் இறைச்சியின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது; இருப்பினும் அதே காலகட்டத்தில் கம்பளி உற்பத்தி எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

7. இன்ஜெனியுட்டி என்பது எந்த வான்பொருளில் இயங்கும் ஒரு தனித்தியங்கும் திறன்பெற்ற ஹெலிகாப்டர் ஆகும்?

அ. திங்கள்

ஆ. செவ்வாய் 🗹

இ. வெள்ளி

ஈ. வியாழன்

  • ‘ஜின்னி’ என்ற புனைப்பெயர்கொண்ட இன்ஜெனியுட்டி என்பது தற்போது செவ்வாய் கோளிள் இயங்கும் ஒரு சிறிய தனித்தியங்கும் திறன்பெற்ற ஹெலிகாப்டராகும். இது NASAஇன் செவ்வாய்-2020 பயணத்தின் ஒருபகுதியாகும். இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் சமீபத்தில் செவ்வாய் கோளில் வளிவேகம் (airspeed) மற்றும் பறப்பு நீடிக்குந்திறன் ஆகியவற்றில் சாதனை படைத்தது.

8. துர்காவதி சரணாலயத்துடன் இணைந்த நௌராதேகி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்/யூபி எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மத்திய பிரதேசம் 🗹

இ. குஜராத்

ஈ. மேற்கு வங்காளம்

  • நௌராதேகி சரணாலயத்தை தாமோ மாவட்டத்தில் அமைந்துள்ள துர்காவதி சரணாலயத்துடன் இணைத்து, 2,300 சகிமீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகத்தை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டம், நாட்டின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தைப் பெற்ற இடமாக மாறவுள்ளது.

9. பால் உற்பத்தியை நாளொன்றுக்கு 39 இலட்சம் லிட்டராக அதிகரிக்க தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. ஒடிசா

இ. அஸ்ஸாம் 🗹

ஈ. சிக்கிம்

  • பால் உற்பத்தி மூலம் மாநிலத்தின் கிராமப்புறங்களுக்கு புத்துயிரளிக்கும் நோக்கோடு, அஸ்ஸாம் அரசு, மாநிலத்தின் பால் துறையின் விரிவான மேம்பாட்டிற்காக தேசிய பால் வளர்ச்சி வாரியத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எதிர்காலத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் பாலுற்பத்தியை நாளொன்றுக்கு 39 இலட்சம் லிட்டர் அளவுக்கு உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்குமார் இராமநாதனுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. செஸ்

ஆ. டேபிள் டென்னிஸ்

இ. டென்னிஸ் 🗹

ஈ. பூப்பந்து

  • இந்திய டேவிஸ் கோப்பை அணியின் உறுப்பினரான டென்னிஸ் வீரர் இராம்குமார் இராமநாதன் கிராண்ட் டபுள் பட்டத்தை வென்றார். ATP தரவரிசைப் பட்டியலில் 642ஆவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் டென்னிஸ் வீரர் இராம்குமார் இராமநாதன், MSLTA $25000 ஆடவர் ITF டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2023இன் அகில இந்திய ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 874ஆவது தரவரிசையிலுள்ள தேசிய சாம்பியன் விசுவகர்மாவை எதிர்த்து 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தார்.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அங்கோர் வாட் அமைந்துள்ள நாடு எது?

அ. மியான்மர்

ஆ. பூட்டான்

இ. இலங்கை

ஈ. கம்போடியா 🗹

  • கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட், இத்தாலியின் பாம்பீயை பின்னுக்குத் தள்ளி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம் என்பது தனித்துவம் மிக்க கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கீகாரம் ஆகும். தற்போது அங்கோர் வாட் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கடந்த 12ஆம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாம் சூர்யவர்மனால் இந்தக் கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் சுவர்களில் உள்ள சிக்கலான சிற்பங்கள் இந்து மற்றும் பௌத்த புராணங்களின் கதைகளைக் கூறுவனவாக திகழ்கின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்ப்பல்கலைக்கழக கரிகால் சோழன் விருதுக்கு 6 பேர் தேர்வு.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான கரிகால் சோழன் விருதுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2021க்கான விருதாளர்களாக, ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ என்ற நூலுக்காக இளந்தமிழன் (மலேசியா), ‘அம்பரம்’ புதினத்துக்காக இரமா சுரேஷ் (சிங்கப்பூர்), ‘ஆதுரசாலை’ புதினத்துக்காக சிவ. ஆருரன் (இலங்கை) ஆகியோரும், 2022க்கான விருதாளர்களாக, ‘உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும்’ என்ற கவிதை நூலுக்காக எம். கருணாகரன் (மலேசியா), ‘துமாசிக்’ சிறுகதைத் தொகுப்புக்காக பொன். சுந்தரராசு (சிங்கப்பூர்), ‘பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற புதினத்துக்காக நோயல் நடேசன் (இலங்கை) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2. 23 கோடி டன்னாக அதிகரித்த பால் உற்பத்தி.

கடந்த 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி, 2023 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 23.06 கோடியாக இருந்தது. கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் அதிக பால் உற்பத்தி செய்த மாநிலம் உத்தர பிரதேசம் இருந்தது. மொத்த பால் உற்பத்தியில் இந்த மாநிலத்தின் பங்கு 15.72 சதவீதமாக உள்ளது. பால் உற்பத்தியில் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை, கர்நாடகம் 8.76 சதவீதம் என்ற மிகவுயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் முட்டை உற்பத்தி சுமார் 13,838 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை, 2018-19ஆம் நிதியாண்டின் முட்டை உற்பத்தியோடு (10,380 கோடி) ஒப்பிடுகையில் 33.31 சதவீதம் அதிகமாகும். முட்டை உற்பத்தியில் ஆந்திர பிரதேசம் 20.13 சதவீத பங்கைக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 15.58 சதவீதம் பங்கு வகிக்கிறது.

3. ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின்கீழ் 2 இலட்சம் பேர் பயன்.

தமிழ்நாட்டில், ‘இன்னுயிர் காப்போம்; நம்மைக்காக்கும்-48’ திட்டத்தின்கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த 2021 டிச.18ஆம் தேதி தொடக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் 237 தனியார் மருத்துவமனைகள், 455 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் முதல் பயனாளியை மேல்மருவத்தூரிலும், 50 ஆயிரமாவது பயனாளியை சித்தாலப்பாக்கத்திலும் முதலமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

4. கடற்படைக்கு உள்நாட்டு தயாரிப்பில் 2ஆவது விமானந்தாங்கி போர்க்கப்பல்: பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல்.

இந்திய கடற்படைக்கு `40,000 கோடி மதிப்பில் இரண்டாவது விமானந்தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டில் கட்டும் முன்மொழிவுக்கு பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உள்நாட்டில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான INS விக்ராந்த், கடந்த செப்டம்பரில் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதிநவீன வான்பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்புடன் கூடிய இந்தப் பிரம்மாண்ட போர்க்கப்பல் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் `23,000 கோடி செலவில் கட்டப்பட்டதாகும். இது முப்பது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயங்கக்கூடிய திறன் கொண்டது. 262 மீ நீளம், 62 மீ அகலம், 59 மீ உயரம்கொண்ட இக்கப்பலில் 2,300க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்தியாவிடம் தற்போது INS விக்ரமாதித்யா (ரஷிய தயாரிப்பு) மற்றும் INS விக்ராந்த் ஆகிய இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!