TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 31st October 2023

1. ஓர் அண்மைய ஆய்வின்படி, நாட்டிலேயே அதிக புற்றுநோய் பாதிப்பு விகிதம் உள்ள இந்திய மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. பீகார்

இ. மிசோரம் 🗹

ஈ. குஜராத்

  • மிகக்குறைந்த மக்கள்தொகைகொண்ட நாட்டின் 2ஆவது மாநிலமாக இருந்தபோதிலும், இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு விகித அதிகம் உள்ள மாநிலமாக மிசோரம் உள்ளது. பதினெட்டாண்டுகால ஆய்வின் சமீபத்திய சான்றுகள், மிசோரம் மாநிலத்தில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறது. ஆண்களிடையே புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு வயிற்றுப்புற்றுநோயே முதன்மைக்காரணமாக உள்ளதாகவும்; அதே சமயம் பெண்களிடையே புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோயே முதன்மைக் காரணமாக உள்ளதாகவும் அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

2. Hostile Activity Watch Kernel (HAWK) அமைப்புடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா 🗹

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. உத்தரகாண்ட்

  • கர்நாடக மாநிலமானது இந்திய வனவிலங்கு அறக்கட்டளையுடன் இணைந்து, Hostile Activity Watch Kernel (HAWK) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வனவிலங்கு குற்றமேலாண்மைக்கான சிறப்பு மென்பொருள் ஆகும். வன உயிரிகள் மற்றும் வனக்குற்றங்கள் தொடர்பான 35,000 வழக்குகளின் தரவு இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் வனம் மற்றும் வன உயிரிகள் குற்றங்கள் அடங்கும்.

3. ஐபோன் தயாரிப்பாளரான விஸ்ட்ரான் தனது இந்திய அலகை கீழ்காணும் எந்த இந்திய நிறுவனத்திற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆ. டாடா எலக்ட்ரானிக்ஸ் 🗹

இ. கோத்ரெஜ் & பாய்ஸ் உற்பத்தி நிறுவனம்

ஈ. வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ்

  • தைவானைச் சார்ந்த விஸ்ட்ரான் அதன் இந்திய அலகான விஸ்ட்ரான் இன்ஃபோகாம் நிறுவனத்தை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. விஸ்ட்ரான் நிறுவனமானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் சாதனங்கள் மற்றும் உதிரிபாகங்களை பெங்களூரு மற்றும் ஓசூருவில் தொகுக்கிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் விஸ்ட்ரான் துணை நிறுவனத்தை $125 மில்லியன் டாலர்களுக்கு வாங்கவுள்ளது.

4. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான கிகாபிட் அகலக்கற்றை இணையை சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 🗹

ஆ. பார்தி ஏர்டெல்

இ. வோடபோன் ஐடியா (Vi)

ஈ. BSNL

  • ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனமானது இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான கிகாபிட் அகலக்கற்றை இணையை சேவையான ஜியோ ஸ்பேஸ் ஃபைபரை அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.

5. சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட ‘பிரதமர் இ-பஸ் சேவா திட்டம்’, எத்தனை இ-பஸ்களை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

அ. 1000

ஆ. 10000 🗹

இ. 1 இலட்சம்

ஈ. 1 மில்லியன்

  • பிரதமர் இ-பஸ் சேவா திட்டத்தின் ஒருபகுதியாக, மொத்தம் பத்தாயிரம் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 3,000 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு வெளியிடவுள்ளது. ஆகஸ்ட் மாதம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இம்முன்னெடுப்பு, தகுதியுள்ள 169 நகரங்களின் பொதுப்போக்குவரத்து அமைப்புகளில் 10,000 மின்சார பேருந்துகளை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மூன்று இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகைகொண்ட நகரங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கி செயல்படுத்தப்படும்.

6. காஷ்மீரில் இந்தியப்படைகள் வெற்றிபெற்றதன் 76ஆவது ஆண்டு நினைவாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

அ. விஜய் திவாஸ்

ஆ. ஷௌர்ய திவாஸ் 🗹

இ. வீர திவாஸ்

ஈ. பாரத் திவாஸ்

  • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய இராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூரும் 76ஆவது ‘ஷௌரிய திவாஸ்’ (வீரதீர நாள்) கொண்டாடப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங், இந்திய குடியரசு இடையே 1947 அக்.26-இல் கையொப்பமிடப்பட்டது. அதற்கடுத்த நாளான அக்.27இல் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற புத்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படைமூலம் இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்டது. இதுவே சுதந்திர இந்தியாவில் இராணுவம் பெற்ற முதல் வெற்றியாகும்.
  • இந்நாளை ஒவ்வோர் ஆண்டும் காஷ்மீரில் இந்திய இராணுவம் ‘வீரதீர தினமாகக்’ கொண்டாடுகிறது. அதேநாளை இந்திய இராணுவம் ‘காலாட்படை தினமாகவும்’ கொண்டாடி வருகிறது.

7. ‘நாணயவியல்’ என்பது எதுகுறித்த படிப்பாகும்?

அ. எண்கள்

ஆ. நாணயங்கள் 🗹

இ. மண்கள்

ஈ. பறவைகள்

  • ‘நாணயவியல்’ என்பது நாணயங்கள் மற்றும் பிற நாணய அலகுகளின் ஆய்வு மற்றும் பொதுவாக அரிதான நாணயங்களின் சேகரிப்புடன் தொடர்புடையது. இந்திய நாணயவியல் கழகத்தின் 105ஆம் தேசிய ஆண்டு மாநாடு சிம்லாவில் தொடங்கியது. ஹிமாச்சலப் பிரதேச மாநில அருங்காட்சியகம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், நாணயவியல் ஆர்வமுள்ள அறிஞர்கள், பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

8. 3ஆவது வடகிழக்கு இந்திய விழாவினை நடத்திய நாடு எது?

அ. தாய்லாந்து

. வியத்நாம் 🗹

இ. கம்போடியா

ஈ. லாவோஸ்

  • வடகிழக்கு இந்திய திருவிழாவின் 3ஆம் பதிப்பு வியத்நாமின் ஹோ சி மின் நகரில் தொடங்கியது. கல்வி, வர்த்தகம், வணிகம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் கவனஞ்செலுத்தி, இந்தியா மற்றும் வியத்நாம் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் இந்த விழா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. ‘அமிர்த கலச யாத்திரை ரெயில்கள்’ கீழ்காணும் எந்த இயக்கத்தின்கீழ் தொடங்கப்பட்டன?

அ. ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்

ஆ. என் மண் என் தேசம் 🗹

இ. யுவா

ஈ. ஆத்மநிர்பர் பாரத்

  • ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தின்கீழ், நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சேகரிக்கப்பட்ட புனிதமான மண்ணைக் கலப்பதற்காக, நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிக்கும் நினைவுச்சின்னமான கலசம் வைக்கப்பட்டு, கடமைப் பாதையில் உள்ள அமிர்தத் தோட்டத்தில் சம்பிரதாயபூர்வமாக வைக்கப்படும்.
  • ‘அமிர்த கலச யாத்திரை’ எனப் பெயரிடப்பட்ட சிறப்பு ரெயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு புனித மண்ணை எடுத்துச் செல்லும் பங்கேற்பாளர்கள் புது தில்லியை அடைவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கலாசார அமைச்சகத்தினால் இந்த இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10. NASAஇன் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி பிளாட்டினத்தைவிட அரிதான எந்தத் தனிமம் கண்டறியப்பட்டுள்ளது?

அ. டெல்லூரியம் 🗹

ஆ. சீரியம்

இ. யட்ரியம்

ஈ. யூரோபியம்

  • சுமார் 1 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில், பூமியிலுள்ள பிளாட்டினத்தை விடவும் அரிதான ஒரு தனிமமான டெல்லூரியத்தை வானியலாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்டுபிடித்துள்ளனர். NASAஇன் மேம்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கூர்நோக்கு ஆய்வின்மூலம் இக்கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.

11. ‘KAZIND-2023’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் 7ஆவது பதிப்பை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. கஜகஸ்தான் 🗹

இ. இலங்கை

ஈ. ஈரான்

  • கஜகஸ்தானில் உள்ள ஒட்டரில் நடைபெற்ற ‘KAZIND-2023’ என்ற கூட்டு இராணுவப்பயிற்சியின் 7ஆவது பதிப்பில் பங்கேற்பதற்காக 120 வீரர்கள் அடங்கிய இந்திய ராணுவ வீரர்களும் இந்திய வான்படை வீரர்களும் கஜகஸ்தான் நாட்டுக்குப் புறப்பட்டனர். இந்தியாவுக்கும் கஜகஸ்தானுக்கும் இடையிலான இந்தக் கூட்டுப்பயிற்சியானது 2016இல் ‘பிரபல் தோஸ்திக் பயிற்சி’ என தொடங்கப்பட்டது. இரண்டாவது பதிப்பிற்குப் பிறகு, இது ‘KAZIND’ என நிறுவன அளவிலான பயிற்சியாக மேம்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு வான்படையின் கூறுகளை உள்ளடக்கியதன்மூலம் இந்தப் பயிற்சி இரு-சேவை பயிற்சியாக மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

12. நகரப் போக்குவரவு இந்தியா மாநாட்டில், ‘சிறந்த பசுமைப் போக்குவரத்து முன்னெடுப்புடன் கூடிய நகரம்’ என்ற விருதை வென்ற மெட்ரோ ரெயில் நிறுவனம் எது?

அ. கொல்கத்தா மெட்ரோ

ஆ. கொச்சி மெட்ரோ 🗹

இ. சென்னை மெட்ரோ

ஈ. பெங்களூரு மெட்ரோ

  • 16ஆவது நகரப் போக்குவரவு இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சியானது புது தில்லியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கான விருதை ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் பெற்றது. ஜபல்பூர் நகரப்போக்குவரத்துச்சேவைகள் நிறுவனம் அதன் ‘புதுமையான நிதியமைப்பு பொறிமுறைக்காக’ விருது வென்றது. ‘சிறந்த பசுமைப் போக்குவரத்துகொண்ட நகரம்’ விருதை கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனம் அதன் கொச்சி நீர்வழி மெட்ரோ திட்டத்திற்காக பெற்றது.

13. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து போட்டிக்கானப் பட்டத்தை வென்ற மாநிலம் எது?

அ. பஞ்சாப் 🗹

ஆ. மகாராஷ்டிரா

இ. ஒடிசா

ஈ. மேற்கு வங்காளம்

  • அம்ஜோத் சிங்கின் 42 புள்ளிகள் காரணமாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கூடைப்பந்தாட்டப் போட்டியில் தமிழ்நாட்டை வீழ்த்தி பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேரள மாநிலம் கர்நாடக மாநிலத்தை வீழ்த்தி பெண்கள் கோப்பையை கைப்பற்றியது. இவ்வெற்றிக்கு இளம் வீராங்கனை ஆர் ஸ்ரீகலாவின் 29 புள்ளிகள் பெரிதும் உதவின.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அக்டோபர்.31 – சர்தார் வல்லபாய் படேலின் 149ஆவது பிறந்தநாள்: தேசிய ஒற்றுமை நாள்.

2. 16 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கொள்கை:

16 ஆண்டுகளுக்குப் பிறகு துறைமுக மேம்பாட்டுக்கான கொள்கை மாற்றியமைக்கப்பட்டு வகுக்கப்பட்டுள்ள புதிய கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையானது அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. மாநிலத்தில் 1,076 கிமீ நீளங்கொண்ட கடற்கரை உள்ளது. 4 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. தொழில் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த துறைமுக உட்கட்டமைப்பு தேவையாக இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, ‘தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை-2023’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுதுறைமுகங்கள் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கப்பல் மறுசுழற்சி, மிதவைக் கலன்கள் கட்டுதல், துறைமுகங்களை மேம்படுத்துதல், துறைமுகங்களை வர்த்தக ரீதியில் சாத்தியமாக்குவது, வியாபாரத்தை எளிதாக்குதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலுக்கு நிரந்தர தடை: அரசாணை வெளியீடு.

நைலான், நெகிழி உள்ளிட்ட செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலூக்கு தமிழ்நாடு அரசு அக்.6ஆம் தேதி முழுமையான தடைவிதித்துள்ள நிலையில் அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்!

நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. உயிரிழப்புகளில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழ்நாடும் உள்ளன. நாட்டில் 1 மணி நேரத்துக்கு சராசரியாக 53 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஐ ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், உயிரிழப்பு 9.4 சதவீதமும், காயமடைவது 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

5. தேர்தல் நன்கொடை ஆதாரத்தை அறிய உரிமையில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு.

தேர்தல் நிதியை ரொக்கமாக அளிப்பதற்கு மாற்றாகவும், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு 2017 பட்ஜெட்டில் அறிவித்து 2018 ஜனவரி 2ஆம் தேதிமுதல் அமல்படுத்தியது. இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் நன்கொடையாக `2,000 முதல் தேர்தல் நிதிப் பத்திரங்களாக பாரத வங்கியில் பெற்று அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். நன்கொடை பத்திரங்கள் மூலம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அரசியல்கட்சிகள் பெறலாம்; வெளிநாட்டு நன்கொடைகளும் பெறலாம் என இதற்கான சட்டத்தில் திருத்தங்களை விவாதமின்றி நிறைவேற்ற வழிவகுக்கும் பண மசோதாவாக மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஏ) தகவல் அறியும் உரிமையின்படி, நன்கொடைக்கான ஆதாரம் குறித்து அறிய மக்களுக்கு உரிமையில்லை. சட்டப்பிரிவு 19 (2)-இன்படி, அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது.

6. தாய்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு நுழைவு இசைவு தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மேலும், சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாள்கள் தங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை நவம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மே வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுடன் தைவான் நாட்டினருக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நுழைவு இசைவு தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

7. சாலை மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை’ செயலி.

நாட்டிலேயே முதல்முறையாக சாலை உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ‘நம்ம சாலை’ என்ற செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் சாலைப்பாதுகாப்பு, உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ‘நம்ம சாலை’ செயலி நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தகவல் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள்ளாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களும், 72 மணி நேரத்துக்குள் மாவட்டத்தின் பிரதான, இதர சாலைகளில் உள்ள பள்ளங்களும் சரிசெய்யப்படும். சாலைகள் சரிசெய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் நிழற்படத்துடன் உடனே செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!