TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 3rd & 4th April 2024

1. அண்மையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பால் (FIDE) மதிப்பிடப்பட்ட செஸ் போட்டியை நடத்திய நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி தில்லி

ஈ. ஐஐடி ஹைதராபாத்

  • 2024 மார்ச்.30 முதல் 31 வரை சென்னையில் 6ஆவது சாஸ்த்ரா ரேபிட் FIDE செஸ் போட்டியை ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது. ஆண்டுதோறும் ஓபன் ரேபிட் ரேட்டிங் செஸ் போட்டியை நடத்தும் இந்தியாவின் ஒரே ஐஐடி நிறுவனம் இதுவாகும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்களுடன் ஐஐடி மெட்ராஸைச் சார்ந்த 35-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் இணைந்துள்ளனர்.

2. ‘ஸ்டார்கேட்’ என்றால் என்ன?

அ. கருந்துளை

ஆ. வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்

இ. AI அடிப்படையிலான மீக்கணினி

ஈ. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்

  • மைக்ரோசாப்ட் மற்றும் OpenAI ஆகியவை கூட்டாக இணைந்து $100 பில்லியன் டாலர் மதிப்பில், ‘ஸ்டார்கேட்’ என்ற AI மீக்கணினியை உருவாக்குகின்றன. 2028இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம், 2022இல் OpenAIஇன் AI மேம்படுத்தலைப் பின்பற்றி செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் தற்போதுள்ள தரவு மையங்களின் திறன்களை 100 மடங்கு விஞ்சிவிடும். ஐந்து கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயலாக்கம் செய்யப்படும் இதன் ஒரு சிறிய வடிவம் 2026ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ளது.

3. அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச கலாச்சார விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?

அ. ரிஸ்வானா ஹசன்

ஆ. மீனா சரண்டா

இ. நஜ்லா மங்கூஷ்

ஈ. தைஃப் சமி முகமது

  • தில்லி பல்கலைக்கழகத்தின் காளிந்தி கல்லூரியின் முதலமைச்சர் பேராசிரியர் மீனா சரண்டா, கல்வி மற்றும் சமூக சேவைகளில் அவரது சிறந்த பங்களிப்புகளுக்காக, 2024ஆம் ஆண்டுக்கான, ‘சர்வதேச கலாச்சார விருதை’ பெற்றார். 2024 மார்ச்.30 அன்று இந்திய சர்வதேச மையத்தில் வைத்து அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

4. அண்மையில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்திய கடற்படையால் மீட்கப்பட்ட ஈரானிய மீன்பிடிக்கப்பலின் பெயர் என்ன?

அ. பயந்தோர்

ஆ. கைவன்

இ. சஹந்த்

ஈ. அல் கம்பார்

  • இந்தியப் பெருங்கடலில் ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஆபரேஷன் சங்கல்ப் நடவடிக்கையின்கீழ் ஈரானிய மீன்பிடிக்கப்பலான அல் கம்பார் மற்றும் அதன் 23 பாகிஸ்தான் பணியாளர்களை இந்திய கடற்படை மீட்டது.
  • INS சுமேதா மற்றும் INS திரிசூல் ஆகியவை சோகோத்ராவிலிருந்து தென்மேற்கே 90 கடல் மைல் தொலைவில், இந்த ஆபரேஷனை நடத்தின. ஏடன் வளைகுடாவிற்கு அருகிலுள்ள சோகோத்ரா தீவுக்கூட்டம் யேமனின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியாகும்.

5. Cnemaspis vangoghi சார்ந்த இனம் எது?

அ. பல்லி

ஆ. சிலந்தி

இ. மீன்

ஈ. தவளை

  • இந்தியாவிலுள்ள தாக்ரே வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த அறிவியலாளர்கள், தமிழ்நாட்டின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் Cnemaspis vangoghi என்றவொரு புதிய பல்லி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். வின்சென்ட் வான் கோக்கின் பெயரால் அழைக்கப்படும் இது, 3.4 செ.மீ நீள உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.
  • பாறை வாழ்விடங்களை விரும்பும் இதனை, கட்டிடங்கள் மற்றும் மரங்களிலும் காணலாம். Cnemaspis vangoghi உடன், Cnemaspis sathuragiriensis என்ற மற்றொரு உயிரினமும் அதே பகுதியில் அடையாளம் காணப்பட்டது. இந்த இரண்டு இனங்களும் திருவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் தாழ்நிலக்காடுகளில் வாழ்கின்றன.

6. சுற்றுச்சூழல்-நிவாஸ் சம்ஹிதா (ENS) என்ற குடியிருப்பு ஆற்றல் பாதுகாப்பு கட்டிடக் குறியீட்டை உருவாக்கிய அமைப்பு எது?

அ. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA

ஆ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR)

இ. எரிசக்தித் திறன் பணியகம் (BEE)

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

  • சுற்றுச்சூழல் நிவாஸ் சம்ஹிதா (Eco-Niwas Samhita) கட்டிடங்களில் வெப்பப்பரிமாற்றத்தை அளவிடும், Residential Envelope Transmittance Value (RETV) அறிமுகப்படுத்தியுள்ளது. இது எரிசக்தித் திறன் பாதுகாப்பு பணியகத்தின் (BEE) ஒரு குடியிருப்பு ஆற்றல் பாதுகாப்பு கட்டிடக் குறியீடு ஆகும்; இது ஆற்றல் திறன்கொண்ட குடியிருப்புகளுக்கான தரநிலைகளை நிறுவுகிறது. ENS 2018 (பகுதி 1) கூட்டு வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகிறது; அதே நேரத்தில் ENS பகுதி-2 (ENS 2021) குறியீடு இணக்கம் மற்றும் மின்-வேதி அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது. குறைந்த RETV மதிப்புகள் குளிர்ச்சியான உட்புற சூழல்களுக்கு வழிவகுப்பதோடு ஆற்றல் பயன்பாட்டையும் குறைக்கிறது.

7. கோடியக்கரை வனவிலங்கு சரணாலயமானது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

அ. தஞ்சாவூர்

ஆ. நாகப்பட்டினம்

இ. சிவகங்கை

ஈ. புதுக்கோட்டை

  • தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரையில் அமைந்துள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறை ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பினை நடத்தி வருகிறது. காலிமர் முனை என்றும் அழைக்கப்படுகிற இது, திருமறைக்காட்டிற்கு தெற்கே சுமார் 9 கிமீ தொலைவில் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ளது.
  • சோழர் காலத்தைச் சேர்ந்த திருக்கோடி குழகர் திருக்கோவில் மற்றும் 2004ஆம் ஆண்டு இந்தியப்பெருங்கடல் கடற்கோளின்போது அழிக்கப்பட்ட சோழர்களின் கலங்கரை விளக்கம்போன்ற அமைப்புகளுடன் இந்த நிலப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள காடுகள் கிழக்குத் தக்காண வறண்ட பசுமைமாறா காடுகளின் எச்சங்களாகும்.

8. அண்மையில், ‘கமனே’ என்ற வெப்பமண்டல சூறாவளியால் தாக்கப்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடு எது?

அ. மடகாஸ்கர்

ஆ. தான்சானியா

இ. கென்யா

ஈ. மொரிஷியஸ்

  • மடகாஸ்கரை தாக்கிய ‘கமனே’ என்ற வெப்பமண்டல சூறாவளியின் காரணமாக 18 உயிர்கள் பறிபோயின மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவான மடகாஸ்கர், இந்தியப்பெருங்கடலில் 592,800 சகிமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் நிலப்பகுதி கிழக்குக் கடற்கரைப் பகுதி, மத்திய பீடபூமி மற்றும் மேற்கு தாழ்வான பீடபூமிகள் என 3 பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

9. P-800 ஆனிக்ஸ் என்ற ஏவுகணையை உருவாக்கியுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

  • ரஷ்யாவின் ஆனிக்ஸ் என்ற மீயொலி சீரவேக ஏவுகணையான, ‘P-800 ஆனிக்ஸ்’ அல்லது ‘ஆனிக்ஸ்’ என அழைக்கப்படுகிற இது, ஒரு புதிய இலக்கு தேடியுடன் கொடியதாக மாறவுள்ளது. மணிக்கு 3,000 கிமீட்டருக்குமேல் வேகத்தில் பயணிக்கும் இதனை இடைமறித்தல் என்பது மிகவும் கடினமான செயலாகும். தாழ்வான உயரத்தில் இயங்கும் இது, மறைந்திருந்து தாக்கும் கப்பல்கள் மற்றும் தரைப்பொருட்களை இலக்காகக் கொண்டு செயல்படும். 300 கிமீ வரையிலான தூர வரம்பை இது கொண்டுள்ளத.

10. ‘INDRA App’ என்றால் என்ன?

அ. விண்வெளி வீரர்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் பன்னோக்கு செயலி

ஆ. வானிலை தொடர்பான தகவல்களையும் முன்னறிவிப்புகளையும் பரப்பும் செயலி

இ. மாநிலங்களுக்கு டிஜிட்டல் நிதித்தரவை வழங்கும் செயலி

ஈ. அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்பான செயலி

  • உலக வானிலை நாள் கொண்டாட்டத்தின்போது, கடல்சார் பெருங்கடலியல் & வானிலை ஆய்வுப்பள்ளி மற்றும் தெற்கு கடற்படை கட்டளை மையத்தில் உள்ள இந்திய கடற்படை வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து வானிலை தொடர்பான தகவல்கள் மற்றும் முன்கணிப்புகளை அறிவிக்கின்ற INDRA செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. BISAG மற்றும் இந்திய கடற்படையால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி விரைவான முடிவெடுக்க உதவுகிறது.

11. அண்மையில், செயற்கை நுண்ணறிவு துறைக்கு ஓர் ஆலோசனையை வழங்கிய அமைச்சகம் எது?

அ. தகவல் தொடர்பு அமைச்சகம்

ஆ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. சட்டம் & நீதி அமைச்சகம்

  • மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது AI தொழிற்துறைக்கு குறிப்பாக கூகுள் போன்ற முக்கிய தளங்களை குறிவைத்து ஓர் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அந்த ஆலோசனையில் குறிப்பிட்ட அத்தளங்கள் 15 நாட்களுக்குள் செயல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. AI மாதிரிகளைச் சோதிப்பதற்கு அனுமதி வேண்டுதல், சோதனைக்குட்பட்ட அல்லது நம்பத்தகாத AIக்கு வெளிப்படையான ஒப்புதல் பெறுதல் போன்றவை அந்த முக்கிய ஆலோசனைகளில் அடங்கும்.

12. மரவகண்டி அணை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. தெலுங்கானா

  • மீன்பிடித்தல் நிறுத்தப்பட்டதை அடுத்து, நீலகிரி மாவட்டம் மரவகண்டி அணைக்கு வலசைப்பறவைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது, சீகூர் ஆற்றின் கிளையாறான அரவரிகல்லா ஓடையின்மீது 1951ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை மோயாறு நீர்மின்நிலையத்திற்கு முக்கிய நீராதாரமாக செயல்படுகிறது. இது புலம்பெயர் காலங்களில் பல்வேறு பறவையினங்களை விருப்ப இடமாக மாறுகிறது.

13. கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே கச்சத்தீவு அமைந்துள்ளது?

அ. இந்தியா மற்றும் வங்காளதேசம்

ஆ. இந்தியா மற்றும் மியான்மர்

இ. இந்தியா மற்றும் இலங்கை

ஈ. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்

  • தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சித்தலைவர் K அண்ணாமலையால் RTI விண்ணப்பத்தின்மூலம் பெறப்பட்ட ஆவணங்கள், இலங்கையுடனான கச்சத்தீவு பிரச்சனையில் இந்தியாவின் முரண்பாடான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றது. பாக் நீரிணையில் உள்ள சிறிய தீவான கச்சத்தீவு நிரந்தர குடியிருப்பும் நன்னீர் ஆதாரமும் இல்லாத ஒரு தீவாகும். வரலாற்று ரீதியாக இந்தியா மற்றும் இலங்கையால் நிர்வகிக்கப்பட்டு வந்த அந்தத் தீவின் எல்லையானது கடந்த 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்மூலம் நிர்ணயம் செய்யப்பட்டது.

14. 2024 – உத்கல நாளுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. பீகார்

இ. ஜார்கண்ட்

ஈ. தெலுங்கானா

  • ஒடிஸா நாள் என்றும் அழைக்கப்படும் உத்கல நாள், 1936 ஏப்ரல்.01 அன்று ஒடிஸா உருவானதை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது. இது மாநிலத்தின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை குறிக்கிறது; இது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் தனி அடையாளத்திற்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த நாள், அலங்காரங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட விழாக்கள் மூலம் ஒடிஸாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

15. அண்மையில், குளோபல் ஜியோபார்க்ஸ் வலையமைப்பில் சேர்க்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கை என்ன?

அ. 16

ஆ. 17

இ. 18

ஈ. 19

  • 2024 மார்ச்சில், UNESCOஇன் நிர்வாக வாரியம் குளோபல் ஜியோபார்க்ஸ் வலையமைப்பில் 18 புதிய தளங்களைச் சேர்த்தது. இதன்மூலம் மொத்த தளங்களின் எண்ணிக்கை 213ஆக (48 நாடுகள்) ஆனது. இந்தப் புதிய தளங்கள் பெல்ஜியம், நெதர்லாந்து, பிரேசில், சீனா, குரோஷியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி, போலந்து, போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன. குளோபல் ஜியோபார்க்ஸ் என்பது பாதுகாப்பு, கல்வி மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றின் முழுமையான கருத்துடன் நிர்வகிக்கப்படுகின்ற ஒற்றை புவியியல் பகுதிகளாகும்.

16. அண்மையில், நாட்டின் முதல் முப்படை பொது பாதுகாப்பு நிலையமாக ஆயுதப்படைகளால் நிறுவப்பட்ட நகரம் எது?

அ. சென்னை

ஆ. மும்பை

இ. வேலூர்

ஈ. பராக்பூர்

  • ராணுவம், கடற்படை மற்றும் இந்திய வான்படை ஆகியவற்றுக்கான இந்தியாவின் முதல் முப்படை பொது பாதுகாப்பு நிலையமாக மும்பையை மாற்ற ஆயுதப்படைகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டிணைவு என்பது ஒருங்கிணைந்த கட்டளைகளை வழங்குவதற்கும் சேவைகளுக்கு இடையே கூட்டுத்தன்மையை வளர்ப்பதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. போருக்கான வளங்களை மேம்படுத்த இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை திறன்களை ஒருங்கிணைப்பதையும் இது உள்ளடக்கியுள்ளது.

17. அண்மையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் அரங்கில் நடந்த போட்டியில், 2024 – மியாமி ஓபன் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றவர்கள் யார்?

அ. கார்லோஸ் அல்கராஸ் மற்றும் சின்னர் ஜானிக்

ஆ. ரோகன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன்

இ. டேனியல் மெட்வெடேவ் மற்றும் சி. நோரி

ஈ. இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக்

  • இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன், 2024 – மியாமி ஓபன் ஆடவர் இரட்டையர் பட்டத்தை 2024 மார்ச்.31 அன்று புளோரிடாவின் ஹார்ட் ராக் அரங்கில் வென்றார். அவர்கள் இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஆகியோரை முறியடித்து, அப்பட்டத்தை வென்று ATP உலக நம்பர்.01 தரவரிசையை மீட்டெடுத்தனர். ரோகன் போபண்ணா, தனது சொந்த சாதனையை முறியடித்து, ATP 1000 மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற மிக வயதான வீரர் ஆனார்.

18. அண்மையில், 2023ஆம் ஆண்டுக்கான கிளீன் எனர்ஜி டிரான்சிஷன்ஸ் புரோகிராம் ஆண்டறிக்கையை வெளியிட்ட அரசு நிறுவனம் எது?

அ. பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA)

ஆ. எரிசக்தித் திறன் பணியகம் (BEE)

இ. பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) அண்மையில் தனது 2023ஆம் ஆண்டுக்கான தூய ஆற்றல் மாற்றம் திட்ட அறிக்கையை வெளியிட்டது. 2017இல் நிறுவப்பட்ட இத்திட்டம், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐநாஇன் நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs) இணைந்து, நிகர-சுழிய ஆற்றல் அமைப்பை நோக்கிய உலகளாவிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில் 1974இல் நிறுவப்பட்ட IEA, OECD கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் தொழிற்துறைகளுடன் இணைந்து இது செயல்படுகிறது. 31 உறுப்புநாடுகளுடன், பாதுகாப்பான, நிலையான ஆற்றல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இது கவனம் செலுத்துகிறது.

19. சமீபத்தில், ஆறாவது ஆண்டு ஹாக்கி இந்தியா விருதுகளில் முறையே, ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்த வீரர் எனத் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார்?

அ. குர்ஜித் கௌர் மற்றும் மன்பிரீத் சிங்

ஆ. இராணி இராம்பால் மற்றும் விவேக் பிரசாத்

இ. சலிமா டெடே மற்றும் ஹர்திக் சிங்

ஈ. சவிதா புனியா மற்றும் கிரிஷன் பதக்

  • 2023 – ஹாக்கி இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வு 2024 மார்ச்.31 அன்று புது தில்லியில் நடைபெற்றது. சலிமா டெடே மற்றும் ஹர்திக் சிங் ஆகியோர் முறையே ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஆண்டின் சிறந்த வீரர் எனக் கௌரவிக்கப்பட்டனர். கடந்த 2014இல் தொடங்கப்பட்ட இந்த விருதுகள் இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி திறமைகளை கௌரவிக்கிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த துணைக் கேப்டன் ஹர்திக் சிங், FIH ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த நடுகள வீரர் ஆகிய விருதுகளை வென்றார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சலிமா டெடே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது சாதனைகளுக்காக, AHF வளர்ந்துவரும் ஆண்டின் சிறந்த வீராங்கனை என கௌரவிக்கப்பட்டார்.

20. அண்மையில், 2023-24 நிதியாண்டில் நாட்டின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 30 சதவீத பங்களிப்பை அளித்து, மின்னணுப் பொருட்களின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. தெலுங்கானா

  • 2023-24 நிதியாண்டில் நாட்டின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 30 சதவீத பங்களிப்பை அளித்து, இந்தியாவின் மிகப்பெரிய மின்னணுப்பொருட்கள் ஏற்றுமதியாளராக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை, தமிழ்நாட்டின் மின்னணுப்பொருட்கள் ஏற்றுமதி $7.37 பில்லியனாக உள்ளது; இது அதே காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதியில் 32.52% ($22.65 பில்லியன் மதிப்பிலானது) ஆகும். வரலாற்று ரீதியாக, 2021-22 நிதியாண்டு வரை இத்துறையில் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவை ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த நிலையிலேயே தமிழ்நாடு இருந்து வந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில், தமிழ்நாடு இந்தத் துறையில் சீரான வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

21. நீர்மட்டம் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற வைகை, மேட்டூர் மற்றும் பாபநாசம் அணைகள் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மத்திய பிரதேசம்

ஈ. கோவா

  • வைகை, மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு அணைகளின் நீர்மட்டம் குறித்து அண்மைச் செய்திகள் எடுத்துக் கூறின. தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை மதுரையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. சேலம் மாவட்டத்தில் பாய்ந்தோடும் காவிரியாற்றில் உள்ள மேட்டூர் அணை, கர்நாடகாவில் இருந்து வரும் நீர்வரத்துக்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய அணையாக விளங்கிவருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையானது சிவத்தலத்துடன் இணைந்து புனிதமாக கருதப்படுகிறது. இந்த அணை நெல்லை (திருநெல்வேலி) மற்றும் தூத்துக்குடி கழனிகளுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கிறது.

22. சமயவிளக்கு விழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. தெலுங்கானா

  • சமயவிளக்கு அல்லது கோட்டங்குளங்கரா திருவிழா என்பது கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பகவதி தேவி திருக் கோவிலில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இந்த விழாவின்போது ஆண்கள் பெண்களின் உடைகளை அணிந்துகொண்டு, விளக்குகளை ஏந்தி ஊர்வலமாகச்செல்கின்றனர். தேவியின் மீதிருக்கும் பக்தியை உணர்த்தும் இந்தச் சமயவிளக்கை ஏந்தி பக்தர்கள் திருக்கோவிலை வலம்வருவார்கள். பகல்நேர சடங்கான காக்காவிளக்கு சடங்கிற்காக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெண் வேடமிட்டனர்.

23. அண்மையில், நைஜருக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. பங்கஜ் சரண்

ஆ. P R சக்ரவர்த்தி

இ. விக்ரம் மிஸ்ரி

ஈ. சீதா ராம் மீனா

  • 2008ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த IFS அதிகாரியான சீதா ராம் மீனா, நைஜர் குடியரசுக்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் வெளியுறவு அமைச்சகத்தின் பிரதிச் செயலாளராக சீதா ராம் மீனா பணியாற்றி வந்தரர். சீதா ராம் மீனாவின் அரசியல் ரீதியான அனுபவமும் நிபுணத்துவமும் அவரை இந்தப் புதிய பதவியில் சிறப்பாக நிலைநிறுத்துகிறது; இது உலக அரங்கில் நைஜருடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

24. 2024 – உலக மதியிறுக்கம் (ஆட்டிசம்) குறித்த விழிப்புணர்வு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Empowering Autistic Voices

ஆ. The Transition to Adulthood

இ. Inclusive Quality Education for All

ஈ. Assistive Technologies, Active Participation

  • உலக மதியிறுக்கம் குறித்த விழிப்புணர்வு நாளானது ஆண்டுதோறும் ஏப்.02ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இது மதியிறுக்கங்கொண்ட நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் வாதிடுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு ஐநா தீர்மானத்தால் நிறுவப்பட்ட இந்த நாள், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் உள்ளடக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. “Empowering Autistic Voices” என்பது 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கனடாவில் காலை உணவுத் திட்டம்.

தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை ஈர்த்துள்ள நிலையில், இந்திய நாட்டைக் கடந்து வெளிநாடுகளிலும் அந்தத் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தனது வலைதளப்பக்கத்தில் இத்திட்டம் குறித்து கூறியுள்ளார். கனடா நாட்டில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

2. தேர்தல் குறித்த தகவல்களை சரிபார்க்க புதிய வலைதளம்.

மக்களவைத் தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபார்க்க, ‘மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர்’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

3. 2023-24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் `20.14 இலட்சம் கோடி: 11.7% வளர்ச்சி.

2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக `20.14 இலட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் கூடுதல் வசூலாகும். கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் `1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. இதுவே அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் தொகையாக உள்ளது.

4. தணிக்கை தலைமை இயக்குநராக G K அருண் சுந்தர் தயாளன் நியமனம்.

நிதித்துறை கூடுதல் செயலராக உள்ள G K அருண் சுந்தர் தயாளனுக்கு, தணிக்கை தலைமை இயக்குநர் பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும், கூட்டுறவு, பால் கூட்டுறவு தணிக்கை, உள்ளாட்சி நிதி தணிக்கை, இந்து சமய அறநிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனங்களின் தணிக்கைத் துறைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிட மாநில அரசின் சார்பில் தணிக்கை தலைமை இயக்குநர் பதவியிடம் கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

5. மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 24 இலட்சம் குடும்பங்களுக்கு `1,487 கோடி நிவாரணம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா `6,000 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அது சுமார் 24 இலட்சம் குடும்பங்களுக்கு `1,487 கோடி நிவாரணத் தொகை வழங்கபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

6. ரெயில் நிலையங்களில் UPI மூலம் பயணச்சீட்டு பெறலாம்.

நாட்டில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் UPI மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதி ஏப்ரல்.01 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை UPI மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

7. இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி: உலக வங்கி கணிப்பு.

இந்திய பொருளாதார வளர்ச்சி 2023-24ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கக்கூடும் என்று உலக வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டான 2024-25ஆம் ஆண்டில், தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், 2023-24ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

8. சி-விஜில் செயலியில் இதுவரை 1,694 புகார்கள்: கரூர் முதலிடம்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பாக புகார்களைத் தெரிவிப்பதில் கரூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என்று மாநிலத் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

9. கோடை காலத்துக்கு ஏற்ற கரும்பு இரகங்கள்: வேளாண் துறை அறிவுறுத்தல்.

கோடைகாலத்தில் பயிரிடுவதற்கு ஏற்ற கரும்பு வகைகளை தேர்ந்தெடுத்து பயிரிடுமாறு விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, எல்லா பட்டங்களுக்கும் ஏற்றதும், செவ்வழுகல் நோயை மிதமாக எதிர்ப்பதுமான, ‘கோ 86032’ என்ற இரகமும், வறட்சியை எதிர்த்து அதிக மகசூல்தரும், ‘டிஎன்ஏயு SC SI 8’ ஆகிய இரகமும் பயிரிடலாம். அதேபோல், தரமான சர்க்கரையை தருவதும், வறட்சியை தாங்கக்கூடியதுமான, ‘கோ 0212’ என்ற கரும்பு இரகத்தையும், ‘கோ V09356’ என்ற கரும்பு இரகத்தையும் ஏப்ரல்-மே மாதங்களில் விவசாயிகள் பயிரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!