TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 3rd & 4th February 2024

1. Agasthyagama edge’ சார்ந்த இனம் எது?

அ. பாம்பு

. கங்காருப்பல்லி 

இ. ஓநாய்ச்சிலந்தி

ஈ. தவளை

  • அறிவியலாளர்கள், அண்மையில், மேற்குத் தொடர்ச்சி மலையில், ‘Agasthyagama edge’ என்ற புதிய கங்காருப்பல்லி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். எட்ஜ் திட்டத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்தப் பல்லி இனம், ‘Agasthyagama’ இனத்தில் இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட இனமாகும். இடுக்கியில் உள்ள குளமாவில் காணப்படும் இப்பல்லி இனம், ‘Agamidae’ குடும்பத்தைச் சேர்ந்ததாகும். தரையில் வாழும் இந்த ஊர்வனம், ஏறுவதற்கு ஐந்தாவது கால்விரல் இல்லாததால், இலைகளால் மூடப்பட்ட பகுதிகளில் மறைந்து வாழ்கின்றன. சராசரியாக 4.3 செமீ நீளங்கொண்ட இவை சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன.

2. “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • மாநில அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குடிமக்களுக்கு மாதாந்திர முறையில் நேரடியாக கிடைப்பதற்காக தமிழ்நாடு அரசானது, “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த முன்னெடுப்பு திட்டங்களின் செயல்திறனை மீள்பார்வை செய்யவும், உட்கட்டமைப்பை ஆய்வுசெய்வதையும், பொதுமக்களின் குறைகளுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று தீர்வு தருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், அரசாங்கத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்துவதை இது உறுதிசெய்கிறது.

3. அண்மையில் முதன்முறையாக, மனித மூளையில் கணினி சில்லைப் பதித்து சாதனை படைத்துள்ள நியூரோ டெக்னாலஜி நிறுவனம் எது?

அ. நியூராலிங்க் 

ஆ. கர்னல்

இ. பிளாக்ராக் நியூரோடெக்

ஈ. நியூராபிள்

  • மனித மூளையில் கணினி சில்லைப்பொருத்திய முதல் நிறுவனம், ‘நியூராலிங்க்’ ஆகும். ‘நியூராலிங்க்’ என்பது 2016 ஆம் ஆண்டில் எலான் மஸ்க் மற்றும் பிற 7 அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களால் நிறுவப்பட்ட ஒரு நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் உள்வைப்பு, ‘லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது; இது மனித மூளைக்குள் அறுவைச்சிகிச்சைமூலம் வைக்கப்படும் ஒரு சிறிய சாதனமாகும்.
  • இந்த சில்லின்மூலம், “ஒரு நபர் கணினி அல்லது திறன்பேசியை வெறுமனே சிந்தித்தே இயக்கமுடியும்” என நியூரா லிங்க் கூறுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளில் உணர்திறன் செயல்பாடுகளை மீட்டெடுக்க, மறதிநோய் மற்றும் மனச்சோர்வுபோன்ற நரம்பியல் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க, தொலைநுண்ணுர்வு (telepathy) தொடர்பைச் செயல்படுத்தவுமாக இதைப் பயன்படுத்த அந்நிறுவனம் எண்ணிவருகிறது.

4. ‘குடவோலை முறை’ என்றால் என்ன?

அ. சாதிய முறை

ஆ. தேர்தல் முறை 

இ. நீர்ப்பாசன முறை

ஈ. வரி முறை

  • தமிழ்நாட்டில் நடைபெறும் 2024 – குடியரசு நாள் அணிவகுப்பில் 10ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச்சேர்ந்த பழங்கால தேர்தல்முறையான, ‘குடவோலை முறை’ இடம்பெற்றது. இந்த முறை, உத்திரமேரூர் கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்தேர்தல்முறை கிராம நிர்வாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்பட்டது. இந்த அமைப்பானது கிராமங்களை குடும்புகளாகப் பிரிப்பதை உள்ளடக்கியதாகும்.
  • கிராமத்தில் வசிப்போர் ஒரு தனித்துவமான செயல்முறையின்மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்கிறார்கள். போட்டியாளர்களின் பெயர்கள் பனையோலைகளில் (ஓலை) எழுதி ஒரு பானையில் (குடம்) போட்டுவிடுவார்கள். பின்னர் அதை ஒரு சிறுவர்மூலம் கைவிட்டு எடுக்கச் செய்வார்கள். எடுக்கப்பட்ட பனையோலையில் உள்ள நபர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார். இவ்வரலாற்று தேர்தல் முறையைக்காட்டும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி மூன்றாவது சிறந்த விருதைப் பெற்றது.

5. அண்மையில், ‘ஸ்டார்ட்அப் இந்தியா’வின் முதன்மையான முடுக்கித் திட்டமான, ‘ஸ்டார்ட்அப்ஷாலா’வை அறிமுகப்படுத்திய துறை எது?

அ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை

ஆ. தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை 

இ. பொருளாதார விவகாரங்கள் துறை

ஈ. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை

  • தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வணிகமேம்பாட்டுத்துறையால் (DPIIT) தொடங்கப்பட்ட, ‘ஸ்டார்ட்அப்ஷாலா’ ஆனது ஒரு முதன்மையான முடுக்கித் திட்டமாகும். தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன்மூலம் அவர்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடைவகங்கள், கல்வி நிறுவனங்கள் & பெருநிறுவனங்களில் பரந்துவிரிந்திருக்கும் கூட்டாளர்களின் வலைப்பின்னல்மூலம், ஸ்டார்ட்அப்கள் பல்வேறு வசதிகள் & வளங்களில் இருந்து பயனடைந்து, தங்கள் பயணத்தை அடுத்தகட்ட வெற்றிக்குக் கொண்டுசெல்கின்றன.

6. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சிகுறித்த IMFஇன் கணிப்பு யாது?

அ. 6.1%

ஆ. 6.2%

இ. 6.4%

ஈ. 6.7% 

  • பன்னாட்டு செலாவணி நிதியமானது (IMF) நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை, முந்தைய மதிப்பீட்டான 6.3%இலிருந்து 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.7%ஆக உயர்த்தி உள்ளது. அண்மைய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, இந்த நேர்மறையான திருத்தம், வலுவான பொது முதலீடு மற்றும் நேர்மறையான தொழிலாளர் சந்தைப் போக்குகளின் காரணமாக மாற்றம் பெற்றுள்ளது.

7. 2024 – கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம் எது?

அ. வங்கப்புலி

ஆ. பனிச்சிறுத்தை 

இ. பருந்து

ஈ. ஆர்க்டிக் நரி

  • 2024 – கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப்போட்டிக்கான சின்னமாக, லடாக் பகுதியில், ‘ஷீன்-இ ஷீ’ (அ) ‘ஷான்’ என்று அழைக்கப்படும் பனிச்சிறுத்தை தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பின் பல்லுயிர் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இச்சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிப்.02-6 வரை லடாக்கிலும், பிப்.21-25 வரை ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க்கிலும் இந்த விளையாட்டுகள் நடைபெறும். இச்சின்னம் விளையாட்டுகளின் உணர்வைக்குறிப்பதோடு அழிந்துவரும் பனிச்சிறுத்தை உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

8. கரைவெட்டி பறவைகள் சரணாலயமும் லாங்வுட் சோலை காப்புக்காடுகளும் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. இமாச்சல பிரதேசம்

  • ராம்சர் சாசனத்தின் குறிப்பிடத்தக்க ஈரநிலங்களின் உலகளாவிய பட்டியலில் இந்தியாவிலிருந்து கூடுதலாக ஐந்து ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் உள்ள மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 80 ஆக மாறியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்தபடி, புதிதாக சேர்க்கப்பட்ட சதுப்பு நிலங்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் லாங்வுட் சோலைக் காப்புக் காடுகளுடன் மகதி கெரே காப்பகம், அங்கசமுத்திர பறவைகள் காப்பகம் மற்றும் கர்நாடகத்தின் அகனாஷினி ஆகியவை அடங்கும். நீர்தேங்கியிருக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.

9. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. கர்நாடகா

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நாட்டிலேயே அதிகமாக மொத்தம் 16 ராம்சர் தளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் லாங்வுட் சோலை காப்புக்காடுகளை ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டன. இதன்மூலம், தமிழ் நாட்டின் மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கை பதினாறாக அதிகரித்தது.
  • பன்னாட்டு சாசனத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட ராம்சர் தளங்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம், பல்லுயிர் வளம் மற்றும் மனிதவாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் நலத்தை ஆதரிப்பதில் முக்கியப்பங்கை வகிக்கின்றன.

10. 2024 – ஆஸ்திரேலிய ஓபனில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற வீராங்கனை யார்?

அ. அங்கிதா ரெய்னா

ஆ. அரினா சபலெங்கா 

இ. ஜெங் கின்வென்

ஈ. பார்போரா கிரெஜ்சிகோவா

  • பெலாரஸின் அரினா சபலெங்கா, 2024 – ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். சபலெங்கா 6–3, 6–2 என்ற செட்கணக்கில் சீனாவின் ஜெங் கின்வெனை வீழத்தி தொடர்ந்து இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் விக்டோரியா அசரென்காவுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற முதல் பெண்மணியாக அரினா சபலெங்கா திகழ்கிறார்.

11. ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் – Kalaignar Sports Kit’ திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ கேரளா

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், ‘கலைஞர்’ மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 12,000 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும், ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ திட்டத்தை விளையாட்டு மேம்பாடு மற்றும் இளையோர்நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டம், பிப்.7 அன்று தமிழ்நாட்டின், திருச்சியில் தொடங்கிவைக்கப்படவுள்ளது. இளம் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு உதவும் நோக்கம் கொண்டது இது.

12. 2024 – இடைக்கால பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற அமைச்சகம் எது?

அ. ரெயில்வே அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம் 

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • பாதுகாப்பு பட்ஜெட் 2024-25 நிதியாண்டில் `6,21,540.85 கோடியை எட்டியுள்ளது. இது மொத்த மத்திய பட்ஜெட்டில் 13.04% ஆகும். 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டைவிட சுமார் ஒரு இலட்சம் கோடி (18.35%) அதிகமாகவும், நிதியாண்டு 2023-24 ஒதுக்கீட்டைவிட 4.72% அதிகமாகவும் உள்ளது. இதில், 27.67% மூலதன செலவினங்களுக்காகவும், 14.82% வாழ்வாதாரம் மற்றும் செயல்பாட்டு தயார் நிலைக்கான வருவாய் செலவினங்களுக்கும், 30.68% ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கும், 22.72% பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கும், 4.11% பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள சிவில் அமைப்புகளுக்கும் செல்கிறது.

13. அண்மையில், BRICS குழுமத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ஐந்து நாடுகள் எவை?

அ. சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் & எத்தியோப்பியா 

ஆ. அர்ஜென்டினா, சிலி, ஈராக், சூடான் & சோமாலியா

இ. பெரு, நமீபியா, கயானா, பல்கேரியா & துருக்கி

ஈ. மாலி, தாய்லாந்து, மியான்மர், லாவோஸ் & பூடான்

  • சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய 5 நாடுகள் அதிகாரப்பூர்வமாக BRICS குழுமத்தில் இணைந்தன. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பதினைந்தாவது BRICS உச்சிமாநாட்டிற்குப் பிறகு, கடந்த 2023 ஆகஸ்டில் BRICSஇல் சேர இந்த 5 நாடுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டன. அர்ஜென்டினாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் டிசம்பர் இறுதியில் அந்நாடு பின்வாங்கியது. BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வளர்ந்துவரும் தேசியப் பொருளாதாரங்களின் கூட்டமைப்பாகும். இந்தச் சொல் முதன்முதலில் 2001இல் கோல்ட்மேன் சாக்ஸ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் என்பவரால் “BRIC” என உருவாக்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பயி சோரன் பதவியேற்பு!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் மூத்த தலைவர் சம்பயி சோரன் பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த JMM கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டார். அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சம்பயி சோரன் தேர்வுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 12ஆவது முதலமைச்சராக சம்பயி சோரன் (67) பதவியேற்றுள்ளார்.

2. புற்றுநோய்: இந்தியாவில் புதிதாக 14.1 இலட்சம் பேர் பாதிப்பு; 9.1 இலட்சம் பேர் உயிரிழப்பு. 🫁

இந்தியாவில் புதிதாக 14.1 இலட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும், 9.1 இலட்சம் பேர் உயிரிழந்திருப்பதும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதும், ஒன்பது ஆண்களுக்கு ஒருவரும், பன்னிரண்டு பெண்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயிரிழப்பு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் ஆபத்தைப் பொருத்தவரை ஓஷியானியா கண்டம் முதலிடத்தில் உள்ளது. 75 வயதை அடையும்முன் புற்றுநோய் உருவாகும் ஆபத்து இந்த நாட்டில் 38 சதவீதமாக உள்ளது. 34 சதவீதத்துடன் வட அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. மொத்த புற்றுநோய் உயிரிழப்புகளில் 19 சதவீதம் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுகிறது. இரண்டாவது பொதுவான பாதிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் உள்ளது.

கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை ஒழிக்க உலகளாவிய திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றது. அதன்படி, உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் பெண்களுக்கு 4 பேர் என்ற அளவில் குறைக்க இலக்குநிர்ணயித்தது. இந்த இலக்கை அடைய, 90 சதவீத சிறுமிகளுக்கு 15 வயதை எட்டும் முன்பாக HPV தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும், பெண்கள் 35 மற்றும் 45 வயதை எட்டும்போது புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த 2023ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்.23 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. முப்பதாண்டுகால எரிசக்தி மேம்பாட்டு முகமை இணைப்பு: தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தொடக்கம். 🔋

தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக செயல்பட்டுவந்த, புதுப்பிக்கத்தக்க எரிசக்திப்பிரிவும், எரிசக்தி மேம்பாட்டு முகமையும் இணைக்கப்பட்டு, ‘தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம்’ என்ற புதிய அமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பசுமை எரிசக்திக்கழகம்: பசுமை எரிசக்திக்கழகமானது நீர்மின்சக்தி, நீரேற்று விசைமூலமான மின்சக்தி உற்பத்தி உட்பட அனைத்து வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களையும் செயல்படுத்தும். தமிழ்நாட்டில் நடப்பில் உள்ள மற்றும் ஏற்கெனவே பராமரிக்கப்பட்டு வரும் புதுப்பிக்கத்தக்க மின்திட்டங்கள், இனி பசுமை எரிசக்திக் கழகத்தின் வசமாகும். புதிய மின்னுற்பத்திகளாகக் கருதப்படும் பசுமை ஹைட்ரஜன், கழிவிலிருந்து எரிசக்தி, கடல் அலைகளிலிருந்து எரிசக்தி, மின்கலனில் மின்சக்தியை சேமித்துவைத்துப் பயன்படுத்துவது போன்றவற்றை பரவலாக்குவதும், வணிகரீதியாகச் செயல்படுத்துவதற்குமான பணிகளையும் இக்கழகம் மேற்கொள்ளும்.

4. `29க்கு 1 கிகி ‘பாரத்’ அரிசி. 🍚

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் `29க்கு 1 கிலோ அரிசி விற்பனைசெய்யும் திட்டத்தை மத்திய அரசு பிப்.2 அன்று அறிவித்தது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (NCCF) ஆகிய இரண்டின்மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தர்) இந்த விற்பனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஏற்கெனவே, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் `27.50க்கு 1 கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் `60க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெண்கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

5. RTIஇன்கீழ் ஊழல் விசாரணைத் தகவல்களை CBI அளிக்கவேண்டும்: தில்லி உயர்நீதிமன்றம். ⚖️

பதற்றத்துக்குரிய வழக்கு விசாரணைகளைத் தவிர, பிற ஊழல் மற்றும் மனித உரிமைகள் மீறல்குறித்த விசாரணை தகவல்களை, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் (RTI) கீழ், CBI அளிக்கவேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊழல் மற்றும் மனித உரிமைகள் மீறல்தொடர்பான தகவலை விண்ணப்பதாரர் கோரினால், அந்தத் தகவலை CBI போன்ற அமைப்புகள் வழங்க தகவலறியும் சட்டப்பிரிவு-24 அனுமதிக்கிறது.

6. LK அத்வானிக்கு இந்திய மாமணி (பாரத இரத்னா). 🎖️

பாஜக மூத்த தலைவர் லால் (L) கிருஷ்ண (K) அத்வானிக்கு (96) நாட்டின் உயரிய இந்திய மாமணி (பாரத இரத்னா) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, துணைப் பிரதமராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் அத்வானி பதவி வகித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான, ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

மறைந்த பிகார் முன்னாள் முதலமைச்சரும் சோஷலிச தலைவருமான கர்பூரி தாக்கூருக்கு கடந்த ஜன.24ஆம் தேதி ‘இந்திய மாமணி’ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7. மனிதக் கடத்தலைத் தடுப்போம். 🙏

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், 2018 முதல் 2022 வரை 10,659 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன எனவும், இக்கடத்தல்கள் தொடர்பாக 26,840 நபர்கள்மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு இவர்களில் 19,821 நபர்கள்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. மனிதக் கடத்தல் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த ஐந்தாண்டுகளில் 1,392 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் முறையே 1301 மற்றும் 987 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. நம் தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 6,000 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது. நம் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2,75,125 குழந்தைகள் காணாமல்போயுள்ளனர். இவர்களில் 2,40,502 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டில் சட்டவிரோத மனித கடத்தல் தடுப்புச் சட்டம் 1956இல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தை கடுமையாக்கும் வகையில் கடந்த 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தங்களின்படி, முதன்முறையாக மனித கடத்தலில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள்தண்டனையும் வழங்க முடியும். நம் நாட்டின் அரசியல் சாசனமும் பிரிவு-23மூலம் மனித கடத்தல் மற்றும் அதன் தொடர்பான கட்டாய உடலுழைப்பு மற்றும் பிச்சை எடுத்தலை தடைசெய்கிறது.

8. கும்பகோணம் யானை மங்களத்துக்கு விருது. 🕉️🐘🎖️

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் திருக்கோவில் யானையான மங்களத்துக்கு, “சுறுசுறுப்பான யானைக்கான விருது” வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு விருதை மத்திய அரசின் அங்கீகாரம்பெற்ற புதுதில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டுநிறுவனமான லோக்தந்த்ரா ஔர் ஜந்தா அமைப்பு வழங்கியுள்ளது.

9. திருக்குறள் மாணவர் மாநாடு.

திருக்குறளின் தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக, “தீராக்காதல் திருக்குறள்” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து எதிர்காலத்தை செழுமைப்படுத்தும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி.02-3 ஆகிய தேதிகளில் திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!