TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 5th April 2024

1. அண்மையில், 2023-24இல் சரக்கு கையாளுவதில் முன்னணி துறைமுகமாக உருவான துறைமுகம் எது?

அ. காரைக்கால் துறைமுகம்

. பாரதீப் துறைமுகம்

இ. காண்ட்லா துறைமுகம்

ஈ. கொச்சி துறைமுகம்

  • ஒடிஸா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுக ஆணையம், 2023-24ஆம் ஆண்டில், இந்தியாவின் சிறந்த சரக்கு கையாளும் பெரிய துறைமுகமாக காண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுக ஆணையத்தை விஞ்சியது. 145.38 MMT சரக்குகளைக் கையாண்டு, முந்தைய ஆண்டைவிட 7.4% வளர்ச்சியை அது பதிவுசெய்தது. இது 289 MMTஐ கையாளும் திறன்கொண்டதாகும். கடந்த 1962ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, 1966இல் இந்தியாவின் 8ஆவது மிகப்பெரிய துறைமுகமாக ஆனது. தற்போது துறைமுக அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.

2. ஜூடித் சுமின்வா துலுகா என்பவர் கீழ்காணும் எந்த நாட்டின் முதல் பெண் பிரதமரானார்?

அ. அங்கோலா

ஆ. ஜாம்பியா

இ. காங்கோ

ஈ. ருவாண்டா

  • ஜூடித் சுமின்வா துலுகா காங்கோ மக்களாட்சிக் குடியரசின் முதல் பெண் பிரதமரானார். இவருக்குமுன் ஜீன்-மைக்கேல் சாமா லுகோண்டே பிரதமராக இருந்தார். அதிபர் பெலிக்ஸ் சிசெகெடியின் இந்நியமனம் அவரது பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. முன்னாள் திட்டமிடல் அமைச்சராக இருந்த ஜூடித் சுமின்வா துலுகா, ஜீன்-மைக்கேல் சாமா லுகோண்டே பதவி விலகியபின் மூன்று ஆண்டுகளாக அப்பதவியில் இருந்தார்.

3. அண்மையில், 2024 – SKOCH ESG விருது வென்ற REC லிட் உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. மின்சார அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. விவசாய அமைச்சகம்

ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

  • மத்திய மின்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய மகாரத்னா பொதுத்துறை நிறுவனமும், வங்கிசாராத நிதிக்கழக முன்னணி நிறுவனமுமான ஊரக மின்மய கழகம், ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதிப்பிரிவில்’ ஸ்கோச் ESG விருது -2024ஐ வென்றுள்ளது. இந்த விருது நிலையான நிதியுதவிக்கான ஊரக மின்மய கழகத்தின் (REC) அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. SKOCH ESG விருதுகள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG) நடைமுறைகளில் சிறந்த செயல்திறனை நிரூபிக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன.

4. ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை முறையுடன் தொடர்புடைய நோய் எது?

அ. டெங்கு

ஆ. HIV/AIDS

இ. காசநோய்

ஈ. மலேரியா

  • இலவச ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சைமுறை முன்னெடுப்பின் 20 ஆண்டுகள் நிறைவு HIV/AIDS சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. 2004 ஏப்ரல்.01இல் தொடங்கப்பட்ட இது, HIV (PLHIV) உடன் வாழும் நபர்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இம்முன்னெடுப்பு HIV நகலெடுப்பை அடக்குவதற்கு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்துகிறது; அதன் காரணமாக உலகளவில் HIV பரவல் மற்றும் புதிய தொற்றுநோய்களைக் குறைக்கிறது. 2023ஆம் ஆண்டில், 15-49 வயதுடையவர்களில் HIV பாதிப்பு 0.20%ஆகக் குறைந்தது. PLHIVஇல் இந்தியாவின் பங்கு 6.3%ஆகக் குறைந்துள்ளது.

5. ஷிக்மோ பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. மத்திய பிரதேசம்

இ. ஒடிசா

ஈ. கோவா

  • கொங்கன் பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஷிக்மோ திருவிழாவைத் தொடங்கும் விதமாக, கோவா மாநிலத்தில் வசந்த காலம் தொடங்கியுள்ளது. 2024 மார்ச்.26 முதல் ஏப்.08 வரை நீடிக்கும் இது, வசந்த காலத்தின் வெப்பத்தை வரவேற்கும் வகையிலும் விடைபெறுகிற குளிர்காலத்திற்கு பிரியாவிடைதரு விழாவாகவும் உள்ளது. ஹோலியின் உற்சாகம் மற்றும் திருவிழா பரபரப்பு ஆகியவற்றின் கலவையான ஷிக்மோ, நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மற்றும் புராண நிகழ்வுகளுடன் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

6. 2023-24இல் 56ஆவது தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப்பை வென்ற மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. மத்திய பிரதேசம்

  • தில்லியின் கர்னைல் சிங் அரங்கு மற்றும் இந்திராகாந்தி உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 2023-24-க்கான 56ஆவது தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் மகாராஷ்டிர அணி ஆதிக்கம் செலுத்தியது. பரபரப்பான இறுதிப்போட்டியில் மகாராஷ்டிராவின் ஆண்கள் அணி இந்திய ரெயில்வே அணிக்கு எதிராக வென்றது. அதே சமயம் சம்பதா மௌரியா தலைமையிலான பெண்கள் அணி இந்திய விமான நிலைய ஆணைய அணியை வென்றது. இந்தச் சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 37 அணிகள் பங்கேற்றன; இந்திய கோ-கோ கூட்டமைப்பு இதனை ஏற்பாடு செய்தது.

7. அண்மையில், டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சியை (Digital India Trust Agency – DIGITA) இணையவெளிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய கருவியாக நிறுவிய நிறுவனம் எது?

அ. RBI

ஆ. CBI

இ. SEBI

ஈ. NABARD

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) இணையவெளிக் குற்றங்களை எதிர்கொள்வதற்காக டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சியை (DIGITA) நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் செயலிக்கு சட்டப்பூர்வ அனுமதி பெறுவது மற்றும் சட்ட விரோதமான கடன்வழங்கும் செயலிகள் தடுக்கப்படும். எண்ம முறையில் கடன்வழங்கும் செயலிகளை சரிபார்ப்பது, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வது DIGITAஇன் நோக்கமாககும்.

8. அண்மையில், “A Decade of Documenting Migrant Deaths” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO)

ஆ. உலக வர்த்தக அமைப்பு (WTO)

இ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)

ஈ. புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM)

  • புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பானது 2014இல் தொடங்கப்பட்ட அதன் காணாமல்போன புலம்பெயர்ந்தோர் திட்டத்தின் பத்தாண்டுகால நிறைவைக் குறிக்கும் வகையில், “A Decade of Documenting Migrant Deaths” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் மோதல் பகுதிகளிலிருந்து குடியேறியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அடையாளம் தெரியாத முறையில் இறப்பைத் தழுவியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரில் மூழ்குதல், விபத்துக்கள் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இறப்புக்கான முக்கிய காரணங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.

9. ‘இணைவி எரிபொருள்’ என்றால் என்ன?

அ. இயற்கை எரிவாயு

ஆ. நிலக்கரி

இ. வளியாற்றல்

ஈ. சூரிய ஆற்றல்

  • நிலக்கரி மற்றும் எண்ணெயிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதில் நாடுகளுக்கு உதவும் காரணத்தால் இயற்கை எரிவாயு பொதுவாக ‘இணைவி எரிபொருள்’ என அழைக்கப்படுகிறது. சமுதாயம் தூய்மையான ஆற்றலை நோக்கி மாறும்போது, இயற்கை எரிவாயு போன்ற இணைவி எரிபொருட்கள் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இயற்கை எரிவாயு குறைவான பைங்குடில் (green house) வாயுக்களை வெளியிடும் அதே வேளையில், ஓர் இணைவி எரிபொருளாக அதன் பங்கு ஆற்றல் தற்சார்பை மேம்படுத்துதல் மற்றும் மாசுபாடு செலவுகளைக் குறைத்தல் போன்ற காரணிகளைச் சார்ந்துள்ளது.

10. கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகமானது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

அ. மதுரை

ஆ. தேனி

இ. திண்டுக்கல்

ஈ. கரூர்

  • தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய வானியற்பியல் நிறுவனமான கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் அதன் 125வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. சூரிய வானியற்பியலில் முன்னோடியாக விளங்கும் இது, கடந்த 1909ஆம் ஆண்டில் ஜான் எவர்ஷெட் கண்டுபிடித்த எவர்ஷெட் விளைவின் மூலம் புகழடைந்தது. பூமியின் வளிமண்டலத்தில் சூரியனின் தாக்கத்தைப் புரிந்துகொள்வது, சூரிய கிரகணங்கள், சூரியப்பொட்டுகள் மற்றும் சூரிய தீக்கொழுந்துகளை ஆராய்வது போன்றவற்றில் இதன் பணி அளப்பரியது.

11. அண்மையில், ‘ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்’ திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. IREDA

ஆ. BHEL

இ. NHAI

ஈ. NPCI

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) தேசிய நெடுஞ்சாலைகளில் ‘FASTag’களை பயன்படுத்தி சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்காக, ‘One Vehicle One FASTag’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு வாகனத்தையும் ஒரேயொரு FASTagஉடன் இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் ஒரு வாகனத்திற்கு பல FASTag-கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அது எண்ணம் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை சுங்கக்கட்டண வசூல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் செயல்முறையை நெறிப்படுத்துகிறது; மேலும் சீரான போக்குவரத்து ஓட்டத்திற்கும் இது பங்களிக்கிறது.

12. அண்மையில், 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற ஒரே இந்திய பளுதூக்கும் வீரர்/வீராங்கனை யார்?

அ. மீராபாய் சானு

ஆ. குஞ்சராணி தேவி

இ. குர்தீப் சிங்

ஈ. கர்ணம் மல்லேசுவரி

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது இடத்தைத் தக்கவைத்து, தகுதிபெற்ற ஒரே இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். தாய்லாந்தின் ஃபூகெட்டில் நடந்த IWF உலகக்கோப்பையில், ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற 29 வயதான மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிகி-B பிரிவில் மூன்றாவது இடத்தையும் ஒட்டுமொத்தமாக 11ஆவது இடத்தையும் பிடித்தார். ஆறுமாத காயத்திற்குப் பிறகு, மீராபாய் சானு இந்த நிகழ்வில் மொத்தம் 184 கிகி எடையைத்தூக்கி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அரசின் மருத்துவ சேவைகளை மேம்படுத்த புதிய செயலி அறிமுகம்.

மத்திய அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களை சென்றடையும் நோக்கில், ‘My CGHS’ என்ற புதிய iOS செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் தங்கள் உடல்நலன் குறித்த அறிக்கைகள், தகவல்களை இணையவழிமூலம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக வாக்கு ஒப்புகைச் சீட்டுக் கருவிகளை (VVPAT) தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!