TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 5th March 2024

1. அண்மையில், மாநில நீர் தகவல் மையத்தை நிறுவ முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?

அ. பீகார்

. ஒடிஸா

இ. குஜராத்

ஈ. ஜார்கண்ட்

  • ஒடிஸா மாநில அரசாங்கம் நீராதாரத் தரவை ஒருங்கிணைக்கவும், சேமிக்கவும் மற்றும் பரப்பவும் மாநில நீர் தகவல் மையத்தை நிறுவ முடிவுசெய்துள்ளது. மாநில நீர்வளத்துறையின்கீழ் செயல்படும் இது, ஒடிஸாவிற்கான நீர்ம வானிலைசார் தரவுகளின் விரிவான களஞ்சியத்தை பராமரிப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மையத்தில் நீர்வள மேலாண்மை மற்றும் தரவு கையாளுதல் நிபுணர்கள் பணியாற்றுவார்கள்.

2. சிந்திரி உர ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. உத்தரபிரதேசம்

இ. இராஜஸ்தான்

ஈ. குஜராத்

  • இந்தியாவின் யூரியா தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2024 மார்ச்.01 அன்று ஜார்கண்டில் HURL சிந்திரி உர ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டிற்கு ஆண்டுக்கு 360 இலட்சம் மெட்ரிக் டன்கள் யூரியா தேவை என்றும் ஆனால் கடந்த 2014இல் 225 இலட்சம் மெட்ரிக் டன்கள் யூரியா மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது எனவும் பிரதமர் தெரிவித்தார். அரசின் முயற்சியால் கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தி 310 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்குள் அதிக ஆலைகளுக்கு புத்துயிரளிக்கும் திட்டங்களையும், விவசாயிகளுக்கு மலிவுவிலையில் உரங்கள் கிடைப்பை உறுதிசெய்ய புதிய திட்டங்கள் மேற்கொள்ள உள்ளதாகவும் நரேந்திர மோதி கூறினார்.

3. அண்மையில், AB-PMJAYஇன்கீழ் ஐந்து கோடி ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கிய முதல் மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

  • ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின்கீழ், ஐந்து கோடி ஆயுஷ்மான் அட்டைகளை உத்தர பிரதேச மாநில வழங்கியுள்ளது. 3,716 மருத்துவமனைகளில் உள்ள 74,382,304 தனிநபர்கள் பயன்பெறும் வகையில் 50,017,920 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தாக்கல் செய்யப்பட்ட 3,481,252 காப்பீடு கோரல்களில், 92.48% அளவுக்கு இந்தத் திட்டத்தின்மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது.

4. அம்ராபாத் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

  • தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அம்ராபாத் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அண்மைய, “இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை” அறிக்கை தெரிவிக்கிறது. 2611.4 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இது, இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகங்களுள் ஒன்றாகவும் நாட்டின் மையப் பகுதியில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பாகமாகவும் உள்ளது. முதலில் நாகார்ஜுனாசாகர் -ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தின் ஒருபகுதியாக இருந்த அம்ராபாத் புலிகள் காப்பகம், மாநிலம் இரண்டாகப் பிரிவு செய்யப்பட்ட பிறகு தனி புலிகள் காப்பாகமாக உருவானது.

5. கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. பெங்களூரு

ஈ. ஜெய்ப்பூர்

  • கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் புது தில்லியில், தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூன்று திட்டங்கள் மற்றும் ரெயில்வே அமைச்சகத்தின், இரு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த பன்முகட்டு கட்டமைப்புத் திட்டமிடல் குழுவானது இணைப்பு உட்கட்டமைப்பு அமைச்சகங்களுக்கான ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்பார்வை செய்கிறது. இது பொருளாதார மண்டலங்களையும் இணைப்பு உட்கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் பல துறைகளுக்கு வழிகாட்டுகிறது.

6. ‘VSHORADS’ என்றால் என்ன?

அ. மனிதனால் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வான்பாதுகாப்பு அமைப்பு (MANPAD)

ஆ. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான இராணுவ பயிற்சி

இ. ஐரோப்பாவில் நடத்தப்படும் அமைதிகாக்கும் நடவடிக்கைகள்

ஈ. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய குறுகிய தூர வான்பாதுகாப்பு அமைப்பு

  • இந்திய தொழிற்துறையுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நான்காவது தலைமுறை, ‘MANPAD’ என்ற மிகக்குறுகிய தூர வான்பாதுகாப்பு அமைப்பான, ‘VSHORADS’ ஏவுகணையை DRDO வெற்றிகரமாக சோதித்தது. குறுகிய தூர வான்பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இது, 6-கிமீ தூர வரம்பைக் கொண்டுள்ளது. கையடக்க ஏவுகணையான இது, குறைந்த உயரத்தில் உள்ள வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தரைப்படைகள் மற்றும் முக்கியமான சொத்துக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில், ‘உலகளாவிய நற்பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான கூட்டணி’யை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • பில் கேட்ஸ் மற்றும் சந்திரஜித் பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்ட ஒரு விழாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உலகளாவிய நற்பாலின ஒப்புரவு & சமத்துவத்திற்கான கூட்டணிக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை வெளியிட்டார். பெண்கள் அதிகாரமளிப்பதில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வலியுறுத்திய ஸ்மிருதி இரானி, தாவோஸில் கிடைத்த சர்வதேச ஆதரவை எடுத்துக்காட்டிப் பேசினார். 2024இல் தாவோஸில் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோதியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்துள்ளது. SDGகளில் கவனஞ்செலுத்துகிற இது, நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும், அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், பெண்களின் நலம், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்க்கவும் எண்ணுகிறது.

8. பன்னாட்டு பெரும்பூனைகள் கூட்டணிக்கு மத்திய அமைச்சரவை எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?

அ. ரூ.250 கோடி

ஆ. ரூ.150 கோடி

இ. ரூ.100 கோடி

ஈ. ரூ.110 கோடி

  • இந்தியாவில் சர்வதேச பெரும்பூனை கூட்டமைப்பை தலைமையகத்துடன் அமைப்பதற்கு 2023-24ஆம் ஆண்டு முதல் 2027-28ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கு `150 கோடி மதிப்பிலான ஒருமுறை ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2019 உலகளாவிய புலிகள் பாதுகாப்பு நாளையொட்டி பிரதமர் உரையாற்றியபோது, புலிகள், இதர பெரிய பூனை இனங்கள், ஆபத்தின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதில் இந்தியாவின் முன்னணி பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார். இத்தகைய இனங்கள் ஆசியாவில் வேட்டையாடப்படுவதைத் தடுக்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று புலிகள் வாழும் 97 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார். புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் உள்ளிட்ட பெரிய பூனை இனங்களில் புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஆகிய இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

9. ISRO உடன் இணைந்து புவனைப் பயன்படுத்தி நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வுமேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஈ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

  • மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகமும் (NSO-கள அலுவலகப்பிரிவு) ISROஇன் கீழ் உள்ள தேசிய தொலையுணர்வு மையமும் இணைந்து டிஜிட்டல் முறையில் அதி நவீன ஜியோ ஐசிடி கருவிகள் மற்றும் புவன் தளத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • நகர்ப்புற புவியியல் பிரிவு கட்டமைப்புகளை நிர்வகிக்க, நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வானது ஐந்தாண்டுகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. பெருமளவிலான சமூக பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ள நகர்ப்புறத் துறையில் மாதிரி கட்டமைப்புகளைச் சேகரிப்பதில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் இதில் ஈடுபடுத்தப்படுகிறது. முதன்முறையாக 2017-22ஆம் ஆண்டில் நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வு டிஜிட்டல் வடிவில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புவன் தளத்தைப் பயன்படுத்தி 5300-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. 2022-27ஆம் ஆண்டின் தற்போதைய காலகட்டத்தில் 8,134 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

10. சமுத்திர லட்சமணப் பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர்

ஆ. இந்தியா மற்றும் மலேசியா

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா

  • இந்திய கடற்படை மற்றும் இராயல் மலேசிய கடற்படைக்கு இடையேயான கூட்டு கடற்படை பயிற்சியான, ‘சமுத்ர லட்சமனா’ பயிற்சி பிப்ரவரி.28 அன்று தொடங்கி மார்ச்.02 அன்று விசாகப்பட்டினம் கடற்கரையில் நிறைவடைந்தது. அதன் 3ஆவது பதிப்பில், இந்திய கடற்படை கப்பல் கில்டன் மற்றும் இராயல் மலேசிய கப்பல் கேடி லெகிர் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இருதரப்பு பிணைப்புகளை வலுப்படுத்துவது, ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே இயங்குதிறனை மேம்படுத்துவது போன்ற தொழிற்சார் தொடர்புகள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் கூட்டு கடல் நடவடிக்கைகள் ஆகியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாக இருந்தது.

11. இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் படகானது உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த இடத்தில் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது?

அ. லக்னோ

ஆ. கான்பூர்

இ. வாரணாசி

ஈ. அயோத்தி

  • கொச்சின் கப்பல்கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் செல் படகை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோதி சேவைக்காகத் தொடக்கி வைத்தார். இந்த ஹைட்ரஜன் எரிபொருள் செல் அமைப்பினை KPIT டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சி ஆய்வகங்களின் கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. ஹரித் நௌகா (பசுமைப்படகு) என்ற இம்முயற்சியானது, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் வழிநடத்தப்படுகிறது; இது உள்நாட்டுக் கப்பல்களில் பசுமை ஆற்றல் மாற்றத்தை கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஜனவரியில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 2034ஆம் ஆண்டளவில் 50% உள்நாட்டு பயணிகள் படகுகளில் பசுமை ஆற்றலும், 2045ஆம் ஆண்டளவில் 100% உள்நாட்டு படகுகளில் பசுமை ஆற்றலும் மாநிலங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். பைங்குடில் இல்ல வாயு உமிழ்வை எதிர்த்துப் போராடுவதே இதன் நோக்கமாகும்.

12. இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு – 2022 என்ற அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

  • “இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு – 2022” என்ற அறிக்கை, கடந்த 2018இல் 12,852ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் காணப்படும் இந்திய சிறுத்தைகள், மத்திய இந்தியாவிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (8,820), அதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள் (3,596) மற்றும் சிவாலிக் மலைகள்/கங்கைச் சமவெளிகளிலும் (1,109) அதிகம் காணப்படுகின்றன. மாநில வாரியாக, 3,907 சிறுத்தைகளுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா (1,985), கர்நாடகா (1,879), தமிழ்நாடு (1,070) ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘அதிதி’ திட்டம்.

பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான, ‘அதிதி’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.

‘அதிதி’ திட்டத்தின்கீழ் பாதுகாப்புத்துறையில் புதிய தொழினுட்பங்களை மேம்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் புத்தாக்க நிறுவனங்களுக்கு `25 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. `750 கோடி மதிப்பிலான இத்திட்டம் 2024-2026 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவைப்படுகின்ற கடினமான மற்றும் சவாலான முப்பது தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்குமாகும்.

2. சுமன் குமாரி – BSFஇன் முதல் பெண் ‘ஸ்னைப்பர்’.

எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) தொலைதூரத்திலிருந்து குறிதவறாது சுடும் முதல் பெண் என்ற பெருமையை சுமன் குமாரி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி (28), கடந்த 2021ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளராக BSFஇல் இணைந்தார்.

3. பாரீஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி: வரலாறு படைத்தது இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்.

இந்திய ஆடவர், மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று வரலாறு படைத்தன. ஒலிம்பிக் போட்டியில் 2008ஆம் ஆண்டு முதல் டேபிள் டென்னிஸ் விளையாடப்பட்டு வரும் நிலையில், அணிகள் பிரிவில் இந்தியா அந்தப் போட்டிக்கு தகுதிபெற்றது இதுவே முதல் முறையாகும்.

4. விவ​சா​யி​க​ளுக்​குக் கடன்: ‘இ-கி​சான் உபஜ் நிதி’ அறி​மு​கம்.

விளைபொருள்களை அடகு வைத்து விவசாயிகள் கடன்பெற, ‘இ-கிசான் உபஜ் நிதி’ என்ற எண்ம தளத்தை மத்திய உணவுத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ‘இ-கிசான் உபஜ் நிதி’ தளம்மூலம், எந்தப் பிணை​யமும் இல்லாமல் 7 சதவீத வட்டி விகிதத்தில் விவசாயிகளால் எளிதில் கடன் பெற முடியும்.

5. கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டம்.

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது அதிவிரைவு ஈனுலையில் 500 மெகாவாட் (MW) ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிக மேம்பட்ட அணு உலை-முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையை கட்டுவதற்கும், இயக்குவதற்கும் பாரதிய நாபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (BHAVINI) உருவாக்க 2003இல் அரசு ஒப்புதல் அளித்தது. இந்த முன்மாதிரி வகை அதிவிரைவு ஈனுலை முழுமையாக வடிவமைப்பு செய்யப்பட்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது. இந்த அதிவிரைவு ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் விரைவு ஈனுலைகொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.

6. 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்.

சிறந்த திரைப்படம் முதல் பரிசு: தனி ஒருவன்.

சிறந்த திரைப்படம் இரண்டாம் பரிசு: பசங்க 2.

சிறந்த திரைப்படம் மூன்றாம் பரிசு: பிரபா.

சிறந்த திரைப்படம் சிறப்புப்பரிசு: இறுதிச்சுற்று.

பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே.

சிறந்த நடிகர்: மாதவன் (இறுதிச்சுற்று).

சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே).

சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்).

சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு).

சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக்கல்யாணம்/36 வயதினிலே)

சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று).

சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன் / பாபநாசம்).

சிறந்த பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே).

7. சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய வசதி.

மத்திய தொலைத்தொடர்புத்துறை சார்பில், தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் ‘சஞ்சார் ஷாத’ இணையதளத்தில் ‘சாக்ஷு’ என்ற புதிய வசதி மற்றும் இணைய மோசடிகளைத் தடுக்கும் வகையில் ‘எண்ம நுண்ணறிவு தளம்’ ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சைபர் குற்றங்கள், நிதிமோசடி, போலியான விளம்பரங்கள், கடன் சலுகை, வங்கி KYC புதுப்பிப்பு, சந்தேகப்படும் வகையிலான குறுஞ்செய்திகள், மோசடி அழைப்புகள் உள்பட தவறான நோக்கங்களுக்காக தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்துவதுகுறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாயின் இப்புதிய வசதியை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!