TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 8th March 2024

1. அண்மையில் தனது ஓய்வை அறிவித்த B சாய் பிரனீத் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. ஹாக்கி

இ. கால்பந்து

ஈ. பூப்பந்து

  • 2024 மார்ச்சில், சாய் பிரனீத் சர்வதேச பாட்மிண்டனில் இருந்து ஓய்வுபெறுவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார். தெலுங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான அவர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட காயங்கள் தான் ஓய்வுக்குக்காரணம் என்று கூறியுள்ளார். ஓய்வுக்குப்பின் அமெரிக்காவில் பயிற்சியாளராக திட்டமிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில், பிரனீத் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றார்; இதன்மூலம் 1983க்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

2. அண்மையில், ‘2024-அனைத்திந்திய ஆராய்ச்சி அறிஞர்கள்’ உச்சிமாநாட்டை (AIRSS) நடத்திய நிறுவனம் எது?

அ. ஐஐடி சென்னை

ஆ. IIM ஆமதாபாத்

இ. ஐஐடி கான்பூர்

ஈ. ஐஐடி பம்பாய்

  • ஐஐடி சென்னை நிறுவனமானது அனைத்திந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் உச்சிமாநாட்டை (AIRSS) 2024 மார்ச்.04 முதல் 07 வரை நடத்தியது. ஆராய்ச்சி விவகார குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சமீபத்திய ஆராய்ச்சி முன்னேற்றங்களை வெளிக்காட்டவும் ஆராயவுமாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியலாளர்களை ஒருங்கிணைத்தது. கல்வி மற்றும் தொழிற்துறைக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதில் கவனஞ்செலுத்தும் வகையில், புதுமையின்மூலம் தற்சார்பை ஊக்குவிக்கும் ஆத்மநிர்பர் பாரதத்தின் நோக்கோடு இந்த உச்சிமாநாடு நடத்தப்பட்டது.

3. பீகார் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. பிரஜேஷ் மெரோத்ரா

ஆ. திரிபுராரி ஷரன்

இ. நிஷித் வர்மா

ஈ. அமீர் சுபானி

  • புதிய தலைமைச் செயலாளராக மூத்த இஆப அதிகாரி பிரஜேஷ் மெரோத்ராவை பீகார் அரசு நியமித்தது. தற்போது வருவாய் மற்றும் நிலச்சீர்திருத்தங்களின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள பிரஜேஷ் மெரோத்ராவின் மெச்சத்தக்க பணிகள் தற்போது அரசு நிர்வாகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் வரை பங்கு வகிக்கின்றது.

4. அண்மையில், DPIITஉம் கீழ்காணும் எந்த அமைப்பும் கூட்டாக இணைந்து, போக்குவரவு திறன்மேம்பாட்டிற்கான தேசிய பயிலரங்கை ஏற்பாடு செய்தது?

அ. உலக வங்கி

ஆ. IMF

இ. WTO

ஈ. UNICEF

  • தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) மற்றும் உலக வங்கி குழுமம் ஆகியவை புது தில்லியில் போக்குவரவுத் திறன் மேம்பாடு குறித்த தேசிய பயிலரங்கை ஏற்பாடு செய்தன. இந்தப் பயிலரங்கு, போக்கு வரவுத் துறை சமூகத்தின் விவாதம் மற்றும் சிந்தனை பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது. DPIIT என்பது வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துறையாகும்.

5. எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை யார்?

அ. மிதாலி மதுமிதா

ஆ. சுமன் குமாரி

இ. தனுஸ்ரீ பரீக்

ஈ. சோனாலி மிஸ்ரா

  • சார்பு-ஆய்வாளர் சுமன் குமாரி, எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை (ஸ்னைப்பர்) ஆனார். அண்மையில் அவர் இந்தூரில் உள்ள மத்திய ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய பள்ளியில் 8 வார துப்பாக்கிசுடும் பயிற்சியை நிறைவு செய்து, ‘பயிற்றுவிப்பாளர்’ தரத்தை அடைந்தார். ஸ்னைபர் பயிற்சி பிரிவில் பங்கேற்ற 56 பேருள் சுமன் குமாரி மட்டுமே பெண் ஆவார்.

6. இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவாக, ‘MYUVA’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஒடிஸா

  • உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவாக, ‘முதலமைச்சர் யுவ உத்யமி விகாஸ் அபியான் (MYUVA)” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் `5 இலட்சம் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்மூலம் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதையும் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வதையும் உபி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில், ‘ஆசிய ஆற்றுச்சறுக்குப் படகுப்பயண சாம்பியன்ஷிப்’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. சிம்லா

ஆ. டேராடூன்

இ. வாரணாசி

ஈ. அயோத்தி

  • ரிட்ஜ் சிம்லா அருகே சட்லெஜ் ஆற்றில் பசந்த்பூர் அருகே ஆசிய ஆற்றுச்சறுக்குப் படகுப்பயண சாம்பியன்ஷிப்பை இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நேபாளம், பூடான், இலங்கை, ஈரான், ஈராக், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்கின்றன. சாகச சுற்றுலாவை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி இந்தச் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது.

8. இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை உட்கட்டமைப்புத் திட்டமான, ‘சீபேர்ட் திட்டம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

  • இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை உட்கட்டமைப்புத் திட்டமான சீபேர்ட் திட்டத்தின்கீழ், கர்நாடகாவின் கார்வாரில் உள்ள கடற்படைத்தளத்தில் கடற்படை அதிகாரிகள் & பாதுகாப்புப் பணியாளர்களுக்கு 320 வீடுகளை வழங்கும் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைக்கவுள்ளார். 1980களின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டு 1985ஆம் ஆண்டில் அனுமதியளிக்கப்பட்ட இந்த சீபேர்ட் திட்டம் 11,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆழ்கடல் துறைமுகம், அலைதாங்கிகள், நகரியம், கடற்படை மருத்துவமனை மற்றும் பல உள்ளன.

9. இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?

அ. பாட்னா

ஆ. போபால்

இ. லக்னோ

ஈ. டேராடூன்

  • இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார். இந்த மையம் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கையாற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மையமானது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆறுகளின் சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும். இம்மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், டால்பின்களின் உணவுப்பழக்கவழக்கங்களை ஆராய்வது மற்றும் மாறிவரும் சூழலுக்கேற்ப டால்பின்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துவார்கள். மீன்பிடி நடவடிக்கைகளின் போது கவனக்குறைவாக டால்பின்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து மீனவர்களுக்கு பயிற்சியளிப்பதில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும்.

10. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிவேக ஈனுலைக்கான மைய-பளுவேற்றல் செயல்முறையின் தொடக்கத்தை இந்தியப் பிரதமர் எங்கு சென்று பார்வையிட்டார்?

அ. கல்பாக்கம், தமிழ்நாடு

ஆ. தாராபூர், மகாராஷ்டிரா

இ. கைகா, கர்நாடகா

ஈ. நரோரா, உத்தர பிரதேசம்

  • தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகேயுள்ள கல்பாக்கத்தில், இந்தியாவின் முதலாவது அதிவேக ஈனுலையின், ‘கோர் – லோடிங்’ பணியைப் பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். நுகர்வைவிட அதிக எரிபொருளை உற்பத்தி செய்யும் இந்த ஈனுலை, இந்தியாவின் பரந்த தோரியம் இருப்புக்களைப் பயன்படுத்த வழிவகுக்கும்.
  • இவ்விரைவு ஈனுலை தொடக்கத்தில் யுரேனியம்-புளூட்டோனியம் கலந்த ஆக்சைடு எரிபொருளைப் பயன்படுத்தும். மேலும் தோரியம்-232 அணுவாற்றல் மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும். திரவ சோடியம் ஒரு குளிரூட்டியாக செயல்பட்டு, மின்னுற்பத்தியை எளிதாக்குகிறது. மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், பவினியால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ஈனுலையானது, MSMEகள் உட்பட 200+ இந்தியத் தொழிற்துறையின் குறிப்பிடத்தக்க சாதனையை பறைசாற்றுகிறது.

11. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற, ‘ரிசா ஜவுளி’ சார்ந்த மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர்

இ. மிசோரம்

ஈ. திரிபுரா

  • திரிபுரா மாநிலத்துப் பழங்குடியினரின் பாரம்பரிய உடையான, ‘ரிசா’ புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்தக் கையால் நெய்யப்பட்ட துணி ஒரு பெண்ணின் மேலாடையாகவும், தலையணியாகவும், புற அங்கியாகவும், மரியாதைக்குரிய ஆடையாகவும் பயன்படுத்தப்படுகிறது. வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்டுள்ள இது, சமூக மற்றும் மதம் சார் குறிப்பாக கரியா பூஜை மற்றும் திருமணங்களில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

12. உலக வங்கியின் பெண்கள், வணிகம் மற்றும் சட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 112

ஆ. 113

இ. 114

ஈ. 115

  • உலக வங்கியின் பெண்கள், வணிகம் மற்றும் சட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை 190 நாடுகளில் 113ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு, போக்குவரவு, பணியிடம் மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட எட்டு வகைகளில் பெண்களின் பொருளாதார வாய்ப்புகளுக்கான சட்டச்சூழலை மதிப்பிடுகிறது. 0 முதல் 100 வரை மதிப்பெண்கள் கொண்டுள்ள இந்தக் குறியீட்டில் 100 என்பது அதிகபட்ச சம உரிமைகளைக் குறிக்கிறது. பாலின சமத்துவத்தை நோக்கிய உலகளாவிய முன்னேற்றத்திற்கான புறநிலை வரையறைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விண்வெளித் துறையில் புத்தாக்க நிறுவனங்கள்: தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

TIDCO நிறுவனம் மற்றும் IN-SPACe நிறுவனம் இணைந்து கடந்த மார்ச்.06 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ்நாட்டில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்குவதற்குமான வழிமுறைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்வெளித்துறை முன்னேற்றத்துக்காக TIDCOஆல் திறன்மிகு மையம் அமைக்கப்படவுள்ளது.

2. தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுகள்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்மூலம் 2023ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது-ப அருளி; வீரமாமுனிவர் விருது-முனைவர் ச சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இருவருக்கும் தலா `2 இலட்சம் விருதுத்தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டது.

நற்றமிழ்ப்பாவலர் விருது – அரிமாப்பாமகன் (மரபுக்கவிதை), கெளதமன் நீல்ராசு (புதுக்கவிதை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் ரொக்கப் பரிசாக தலா `50,000, `25,000 மதிப்பிலான தங்கப்பதக்கம், கேடயம், தகுதியுரை ஆகியவை வழங்கப்பட்டன. இதுதவிர கடந்த 2023ஆம் ஆண்டுக்கான தூயதமிழ்ப்பற்றாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 அறிஞர்களுக்கு ரொக்கப்பரிசு தலா `20,000, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

3. எழுத்தாளர் பாமாவுக்கு, ‘ஔவையார் விருது’.

2024ஆம் ஆண்டுக்கான, ‘ஔவையார் விருது’ எழுத்தாளர் பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் நாளன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்நாடு அரசால், ‘ஔவையார் விருது’ வழங்கப்படுகிறது. விருதாளர்களுக்கு `1.50 இலட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை இலக்கிய படைப்புகளாகவும், சாதி & பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். அவரது கருக்கு, சங்கதி, வன்மம், மனுஷி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய, ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 2000இல் ‘கிராஸ் வேர்ல்ட்புக்’ விருதைப் பெற்றுள்ளது.

4. முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய படைப்பாளிகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. ‘Gen-Z’ என்றழைக்கப்படும் இளம் சமூகத்தினரை இலக்காகக் கொண்டு ‘தேசிய படைப்பாளிகள் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. நாட்டின் வலிமை மற்றும் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்ப உதவியவர்கள், பசுமை சாம்பியன்கள், தூய்மை தூதர்கள், வேளாண் படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்ப படைப்பாளிகள் உள்ளிட்ட சுமார் 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

5. பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும், ‘மை சேப்டிபின்’ செயலி.

சென்னையில் பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், ‘மை சேப்டிபின்’ செயலி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வுகாணும் வகையிலும், மகளிர்க்கு பாதுகாப்பான பகுதிகள் குறித்து தெரிவிக்கும் வகையிலும், ‘மை சேப்டிபின்’ செயலி 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!