TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 9th & 10th March 2024

1. அண்மையில் சஞ்சார் ஷாதி இணையதளத்தில், எண்ம நுண்ணறிவு தளம் மற்றும் ‘சாக்ஷு’ என்ற வசதியை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. எரிசக்தி அமைச்சகம்

ஆ. சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம்

இ. தகவல் தொடர்பு அமைச்சகம்

ஈ. புவி அறிவியல் அமைச்சகம்

  • சஞ்சார் ஷாதி இணையதளத்தில் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் (DIP) மற்றும் ‘சாக்ஷு’ ஆகியவற்றை தகவல் தொடர்பு அமைச்சர் தொடக்கி வைத்தார். தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், சட்ட அமலாக்க முகவர், வங்கிகள், சமூக ஊடக தளங்கள் மற்றும் அடையாள ஆவண அதிகாரிகள் போன்ற பங்குதாரர்களிடையே நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பை DIP எளிதாக்குகிறது. தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்ட DIP என்பது குடிமக்களால் அணுகமுடியாத ஒரு பாதுகாப்பான தளமாகும்.

2. அண்மையில் எந்த மாநிலத்தில், புதிய கற்காலத்திய குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம்

  • சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு செட்டிமேடு பாத்தூரில் புதிய கற்காலத்திய குழந்தையின் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்துள்ளனர். பொஆமு 5000 – 1500 வரை நீடித்த புதிய கற்காலத்திய புதைமேடுகள் அரிதானவை என்று அக்குழு கூறியது. இந்தப் புதைமேட்டில் ஒரு பானை கிடைத்துள்ளது; அது புதிய கற்காலத்திற்கு முந்தையதாக உள்ளது. புதிய கற்காலம் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் நிலவிய கற்காலத்தின் இறுதிக்காலமாகும். இது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி செம்புக்காலத்தின் இடைக்காலம் வரை நீடித்தது.

3. ஆண்டுதோறும், ‘சர்வதேச ஆயுத ஒழிப்பு & பரவல் தடுப்பு விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மார்ச்.04

ஆ. மார்ச்.05

இ. மார்ச்.06

ஈ. மார்ச்.07

  • சர்வதேச ஆயுத ஒழிப்பு மற்றும் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நாளானது ஆண்டுதோறும் மார்ச்.05ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இது, ஐநா பொதுச்சபையால் 2021இல் நிறுவப்பட்டது. இந்த நாள் ஆயுதக்குறைப்பு குறித்த உலகளாவிய புரிதலை குறிப்பாக இளைஞர்களிடையே மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரழிவு ஆயுதங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நிராயுதபாணியாக்கம் குறித்த கல்வியை ஊக்குவித்தல் மற்றும் அச்சுறுத்தல்களைக் குறைத்து அமைதி & பாதுகாப்பை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவை இதன் நோக்கங்களில் அடங்கும். நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “The Way Forward” ஆகும்.

4. கெவ்ரா சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சத்தீஸ்கர்

ஆ. ஜார்கண்ட்

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

  • 2024 மார்ச் நிலவரப்படி, இந்தியாவின் சத்தீஸ்கரில் உள்ள கெவ்ரா சுரங்கம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாகும். இந்தச் சுரங்கமானது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்; இது சௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிட்இன் (SECL) ஒருபகுதியாகும். 2024 மார்ச்சில், இச்சுரங்கம் அதன் உற்பத்தித்திறனை ஆண்டுக்கு 52.5 மில்லியன் டன்களிலிருந்து ஆண்டுக்கு 70 மில்லியன் டன்களாக உயர்த்த சூழல் அனுமதியைப் பெற்றது.

5. இந்தியாவின் முதல் நீரடி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ள இடம் எது?

அ. கொல்கத்தா

ஆ. சென்னை

இ. ஐதராபாத்

ஈ. பெங்களூரு

  • இந்தியாவின் முதல் நீரடி மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோதி தொடக்கிவைத்தார். கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒருபகுதியான இத்திட்டம், ஹௌரா மற்றும் சால்ட் லேக் இடையேயான இணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிழக்கு-மேற்கு மெட்ரோவின் மொத்த 16.6 கிலோமீட்டர்களில், ஹூக்ளி ஆற்றின் கீழ் உள்ள சுரங்கப்பாதை உட்பட 10.8 கிலோமீட்டர்கள் நிலத்தடியில் உள்ளன. மீதமுள்ளவை நிலத்திற்கு மேல் உள்ளது.

6. இந்திராகாந்தி பியாரி பேனா சுக் சம்மன் நிதி யோஜனா தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இமாச்சல பிரதேசம்

இ. பீகார்

ஈ. ஒடிஸா

  • இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில், “இந்திராகாந்தி பியாரி பேனா சுக் சம்மன் நிதி யோஜனா’ என்றவொரு புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் மாதந்தோறும் `1,500 உதவித்தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்திற்கான மொத்தமாக செலவினம் ஆண்டுக்கு `800 கோடி. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக உள்ளது.

7. 2024 – தேசிய தோட்டக்கலை கண்காட்சிக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Innovative Horticulture for self-reliance

ஆ. Start-Up & Stand-Up India

இ. Horticulture for Rural Prosperity

ஈ. Nextgen technology-led horticulture for sustainable development

  • பெங்களூருவில் மூன்று நாள் நடைபெறும் தேசிய தோட்டக்கலை கண்காட்சியை, IIHR நடத்துகிறது. “Nextgen technology-led horticulture for sustainable development” என்ற கருப்பொருளின்கீழ் இக்கண்காட்சி நடைபெறுகிறது. நீர் பாதுகாப்பை வலியுறுத்திய இந்தக் கண்காட்சி திறன்மிகு பாசனம், செங்குத்து வேளாண்மை மற்றும் டிஜிட்டல் தோட்டக்கலை போன்ற புதுமையான தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்வானது விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதையும், உயர்தர தோட்டக்கலை விளைவுகளை உறுதிசெய்வதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. அண்மையில், பசுமை ஹைட்ரஜன் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. உத்தர பிரதேசம்

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

  • 2028ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 1 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் இலக்குகொண்ட ஐந்தாண்டு பசுமை ஹைட்ரஜன் கொள்கைக்கு உத்தர பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் நிறுவப்படும் தொழிற்துறைகள் மொத்தமாக `5,045 கோடி மதிப்பிலான மானியங்கள் & ஊக்கத்தொகைகளைப் பெறும்; மேலும், மூலதன செலவினத்தில் 10-40 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படும். `8,624 கோடி செலவில் அன்பாராவில் NTPC ஒத்துழைப்புடன் 2*800 மெகாவாட் அலகுகள் நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

9. அண்மையில், நீரில் மூழ்குவதைக் கண்டறியும் ரோபோவை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மண்டி மற்றும் பாலக்காடு

ஆ. ஐஐடி பம்பாய் மற்றும் மண்டி

இ. ஐஐடி கான்பூர்

ஈ. ஐஐடி ரூர்க்கி

  • நீருக்கடியில் ஆய்வு மற்றும் ஆய்வுகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளற்காக IIT மண்டி மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீரில் மூழ்குவதைக் கண்டறியும் ரோபோவை உருவாக்கியுள்ளனர். கடல், நீர்த்தேக்கம் மற்றும் அணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, மனிதர்களுக்கு மாற்றாக இவ்வாறான ஆபத்தான பணியை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. AI மற்றும் ரோபோடிக்ஸ் மையத்தின் உதவிப்பேராசிரியரான ஜக்தீஷ் கடியம் தலைமையிலான குழு, கடல்சார் நடவடிக்கைகளில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வலியுறுத்தும் ஒரு முன்மாதிரியை உருவாக்கியது. இந்தக் கண்டுபிடிப்பு தேடல் பணிகளுகளில் அதிகரித்த துல்லியம் மற்றும் குறைந்த அபாயங்களை இலக்காகக் கொண்டுள்ளது.

10. அண்மையில், US கோல்ஃப் சங்கத்தின் (USGA) உயரிய கௌரவமான, ‘2024 – பாப் ஜோன்ஸ் விருது’க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. ஜாக் நிக்லஸ்

ஆ. சே ரி பாக்

இ. ஜூலி இன்க்ஸ்டர்

ஈ. டைகர் வூட்ஸ்

  • ஐக்கிய அமெரிக்க கோல்ஃப் சங்கம் (USGA) வழங்கும் உயரிய கௌரவமான பாப் ஜோன்ஸ் விருதுக்கு, டைகர் வூட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது வூட்ஸின் விளையாட்டுத்திறன் மற்றும் கோல்ஃப் மரபுகளுக்கான அவரது அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. பதினைந்து முறை முதன்மை சாம்பியனான டைகர் வூட்ஸ், 82 PGA டூர் நிகழ்வுகளை வென்றுள்ளார்.

11. மாநில கைம்பெண் மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர்

இ. மிசோரம்

ஈ. ஜார்கண்ட்

  • ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பயி சோரன் மாநில கைம்பெண் மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்து, கைம்பெண் மறுமணத்தின்போது `2 இலட்சம் நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கைம்பெண்கள் வாழ்வில் புது ஒளிப் பாய்ச்சுவதை நோக்கமாகக்கொண்ட இம்முன்னெடுப்பு, கைம்பெண்ணான ஒரு வருடத்திற்குள் மறுமணம் செய்வதை ஊக்குவிக்கிறது. ஜார்கண்ட் மாநில அரசு 2024-25 நிதியாண்டுக்கு `1.28 லட்சம் கோடியை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

12. இந்தியாவின் முதல் சிறிய அளவிலான LNG அலகு திறக்கப்பட்ட மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 17 மாநிலங்களில் 201 CNG நிலையங்களையும், இந்தியாவின் முதலாவது சிறிய அளவிலான LNG அலகையும் GAILஇன் விஜயப்பூர் LPG ஆலையில் திறந்து வைத்தார். புது தில்லியில் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், இணையமைச்சர் இராமேஷ்வர் டெலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • தூய்மையான எரிபொருளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2030 ஆம் ஆண்டுக்குள் முதன்மை எரிசக்தி உற்பத்தியில் 15% இயற்கை எரிவாயுவின் பங்காக இருக்கும் எனக் கூறினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மூத்த பத்திரிகையாளர் V N சாமிக்கு, ‘கலைஞர் எழுதுகோல்’ விருது; 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புகள்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி, முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுபோன்ற விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ‘கனவு இல்லம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 2021-22ஆம் ஆண்டுக்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சோ தர்மராஜ், மா இராமலிங்கம் என்ற எழில் முதல்வன், 2022-23ஆம் ஆண்டுக்கு பொன் கோதண்டராமன், சு வெங்கடேசன், ப மருதநாயகம், இரா கலைக்கோவன், எஸ் ராமகிருஷ்ணன், ஜோ டி குரூஸ், சி கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து பேருக்கு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

2023-24ஆம் ஆண்டுக்கு எழுத்தாளர்கள் ம ராஜேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோருக்கு குடியிருப்புக்கான நிர்வாக அனுமதி உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.

‘கலைஞர் எழுதுகோல்’ விருது: சமூக மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு, ‘கலைஞர் எழுதுகோல்’ விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் எழுதுகோல்’ விருது ‘தினமணி’ முன்னாள் தலைமை நிருபரும், மூத்த பத்திரிகையாளருமான V N சாமிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது `5 இலட்சத்துக்கான பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் அடங்கியது.

2. பெண் குழந்தை பாலின விகித உயர்வு: 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பதக்கம்.

ஒவ்வொரு நிதியாண்டிலும் பெண் குழந்தைகள் பாலின விகித உயர்வுக்கு சிறப்பான முறையில் பணியாற்றும் 3 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பாண்டில் இராமநாதபுரம் (தங்கப்பதக்கம்), காஞ்சிபுரம் (வெள்ளி) மற்றும் ஈரோடு (வெண்கலம்) ஆகிய மாவட்ட நிர்வாகங்கள் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

3. மக்களவைத் தேர்தல்: பணம், பரிசுப்பொருள்கள் வழங்கினால், ‘சி-விஜில்’ செயலியில் புகார் அளிக்கலாம்.

வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள் வழங்கினால், ‘C-VIGIL’ செயலியில் புகார் அளிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் வழங்கப்படும்போது எடுக்கப்படும் நிழற்படம் அல்லது காணொலியை தேர்தல் ஆணையத்துக்கு இந்தச் செயலிமூலம் பொதுமக்கள் அனுப்பலாம். புகார் பெறப்பட்ட 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோர் இந்தத்தேர்தலில் சிரமமில்லாமல் வாக்களிக்க, ‘சக்ஷம்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தேர்தல் அதிகாரி, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீடுகளுக்கேச் சென்று நேரடியாக வாக்குகளைப் பெறமுடியும்.

4. தேசிய படைப்பாளர்கள் விருது.

தேசிய படைப்பாளர்கள் விருதானது பசுமை வெற்றியாளர்கள், வேளாண் படைப்பாளிகள், சிறந்த கதைசொல்லிகள், தூய்மை தூதர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, தொழில்நுட்பம், உணவு உள்பட 20 பிரிவுகளின்கீழ் சிறந்த படைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்றவர்களில் சிலர்… ‘பசுமை வெற்றியாளர்’ என்ற பிரிவில் பங்கதிக்கும் ‘சிறப்பாக கதை சொல்லும்’ பிரிவின் கீழ் கீர்த்திகா கோவிந்தசுவாமிக்கும் விருது வழங்கப்பட்டது. ‘கலாசார தூதர்’ பிரிவில் பாடகர் மைதிலிக்கும், ‘தொழில் நுட்பம்’ பிரிவில் கௌரவுக்கும், ‘சுற்றுலா’ சார்ந்த சிறந்த படைப்புகளை உருவாக்கியதற்காக கமியாவுக்கும் விருது வழங்கப்பட்டது. நடப்பாண்டு மூன்று சர்வதேச படைப்பாளிகள் உள்பட 23 வெற்றியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. அருணாசல பிரதேசத்தில் உலகின் மிகநீளமான இருவழி சுரங்கப்பாதை திறப்பு!

அருணாசல பிரதேச மாநிலத்தின் தவாங் பகுதியில் பாலிபாரா – சரித்வார் – தவாங் சாலை மார்க்கத்தில் அனைத்து பருவநிலைகளிலும் சாலை பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ள, ‘சேலா சுரங்கவழிச்சாலை’யை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

`825 கோடி மதிப்பீட்டில் எல்லைப்புறச் சாலை அமைப்பால் (BRO) கட்டப்பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதை 980 மீட்டர் மற்றும் 1555 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கங்களை உள்ளடக்கியது. சேலா கணவாயின் அடியில் 400 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கவழிச்சாலை உலகின் மிகநீளமான இருவழி சுரங்கப்பாதையாகும்.

6. உலக அழகியாக செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு.

71ஆவது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச்சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டம் வென்றார். இந்தியாவில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக அழகிப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

7. மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு: முதலமைச்சர் ஆணை.

கடந்த 2001ஆம் ஆண்டு தில்லியில் நடந்த விழாவில், சுயவுதவிக்குழுக்களின் அடையாளமாகத் திகழும் மதுரை சின்னப்பிள்ளைக்கு, ‘ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் – மாதா ஜீஜாபாய்’ விருது வழங்கியதுடன் அவரது காலிலும் விழுந்து வணங்கினார் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி. 2018இல் தமிழ்நாடு அரசின் ‘அவ்வையார்’ விருதும் 2019 இல், ‘பத்மஸ்ரீ’ விருதும் மதுரை சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், புதிதாக வீடுகட்டித்தருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!