General TamilTnpsc

General Tamil Model Question Paper 16

31. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

(அ) யசோதர காவியம்

(ஆ) நாககுமார காவியம்

(இ) உதயணகுமார காவியம்

(ஈ) வளையாபதி

விடை மற்றும் விளக்கம்

(ஈ) வளையாபதி

விளக்கம்:

யசோதர காவியம், நாக குமார காவியம், உதயண குமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்களாகும்.

வளையாபதி-ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.

32. “செல்வத்துப் பயனே ஈதல்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல்

(அ) திருக்குறள்

(ஆ) பரிபாடல்

(இ) பதிற்றுப்பத்து

(ஈ) புறநானூறு

விடை மற்றும் விளக்கம்

(ஈ) புறநானூறு

விளக்கம்:

புறநானூறு 189-ஆம் பாடல்

“தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்போம் எனினே, தப்புரு பலவே”

ஆசிரியர்-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

திணை-பொதுவியல்.

துறை-பொருண்மொழிக்காஞ்சி

33. “தேவார மூவர்” எனப்படுவோர்

(அ) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்

(ஆ) அப்பர், சுந்தரர், மணிவாசகர்

(இ) நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்

(ஈ) சம்பந்தர், அப்பர், சுந்தரர்

விடை மற்றும் விளக்கம்

(ஈ) சம்பந்தர், அப்பர், சுந்தரர்

விளக்கம்:

தேவார மூவர் – அப்பர், சுந்தரர், சம்பந்தர்.

இம்மூவரும் பாடிய பதிகங்கள் அடங்கிய தொகுப்பு “தேவாரம்” எனப்படுகிறது. “அப்பர்” என அழைக்கப்படுகின்ற திருநாவுக்கரசர் பதிகங்கள் 370 என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. ஆயினும் தற்பொழுது 312 பதிகங்கள் கிடைத்துள்ளன.

திருஞானசம்பந்தர் எழுதிய பதிகங்கள் ஏட்டுச் சுவடிகளின் மூலம் 383 மற்றும் திருவிடைவாய் கல்வெட்டு மூலம் ஒன்று என 384 கிடைத்துள்ளன. சுந்தரர் பதிகங்கள் 100. ஆகவே தற்போது கிடைத்துள்ள மூவர் திருப்பதிகங்களின் தொகை 796 ஆகும். இவற்றின் பாடல்கள் எண்ணிக்கை 8250 ஆகும்.சிறப்புப் பெயர்கள்:

திருநாவுக்கரசர்-ஆளுடைய அரசு.

சுந்தரர்-ஆளுடைய நம்பி.

திருஞான சம்பந்தர்-ஆளுடைய பிள்ளை

34. “ஊக்கம் உடையான் ஒடுக்கம்” எதைப் போன்றது?

(அ) பதுங்கும் புலி

(ஆ) வளைந்து நிற்கும் வில்

(இ) பின்வாங்கி நிற்கும் ஆடு

(ஈ) சீறும் பாம்பு

விடை மற்றும் விளக்கம்

(இ) பின்வாங்கி நிற்கும் ஆடு

விளக்கம்:

“ஊக்கம் முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து”

திருக்குறள்-49-வது அதிகாரம்(காலம் அறிதல்)

குறள் எண்-486,

பிரிவு – பொருட்பால்.

இயல் – அரசியல்.

பொருள்: மிகுந்த தைரியம் உடையவன், ஒரு காரியத்தைச் செய்யக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது, ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்கு பின்வாங்கும் தன்மை போலாகும்.

பொருதகர்-ஆட்டுக்கடா;

பேருந்தகைத்து-பின்வாங்கும் தன்மை.

35. “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” எனப்போற்றப்படும் நூல்.

(அ) கம்பராமாயணம்

(ஆ) சிலப்பதிகாரம்

(இ) திருக்குறள்

(ஈ) நாலடியார்

விடை மற்றும் விளக்கம்

(இ) திருக்குறள்

36. ஞாலத்தின் மாணப்பெரிது

(அ) எதிர்பாராமல் செய்யப்படும் உதவி

(ஆ) பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி

(இ) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி

(ஈ) பயனை எதிர்பாராமல் செய்த உதவி

விடை மற்றும் விளக்கம்

(இ) தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி

விளக்கம்:

“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது”

திருக்குறள்-11-ஆவது அதிகாரம் (செய்ந்ந்ன்றியறிதல்).

குறள் எண்-102,

பிரிவு-அறத்துப்பால்.

இயல்-இல்லறவியல்.

பொருள்:தகுந்த காலத்தில் செய்த உதவி சிறிதளவாக இருப்பினும் அதன் தன்மை உலகத்தை விடப் பெரியதாகும்.

37. “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப் பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்

(அ) பலபட்டடைச் சொக்கநாதர்

ஆ) குமரகுருபரர்

(இ) தாயுமானவர்

(ஈ) இராமலிங்கர்

விடை மற்றும் விளக்கம்

(அ) பலபட்டடைச் சொக்கநாதர்

விளக்கம்:

கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் ஜெயங்கொண்டார் ஆவார். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகப் “பரணி” பாடிய பெருமைக்குரியவர் ஆவார். “பரணி” என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இவரை “பரணிக்கோர் ஜெயங்கொண்டார்” எனப் பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.

“பலபட்டடைக் கணக்கு” என்னும் பணியினை இவரின் முன்னோர் செய்தமையால் “பலபட்டடை” எனும் அடைமொழி இவர் பெயருடன் இணைந்தது. இவர் எழுதிய நூல்களாவன: அழகர் கிள்ளைவிடு தூது, மும்மணிக் கோவை, யமகவந்தாதி, தேவையுலா, தென்றல் விடு தூது, வளைமடல் போன்றவையாகும்.

38. “உலா” எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை

(அ) கலிவெண்பா

(ஆ) ஆசிரியப்பா

(இ) விருத்தப்பா

(ஈ) வஞ்சிப்பா

விடை மற்றும் விளக்கம்

(அ) கலிவெண்பா

விளக்கம்:

“உலா” என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இறைவனையோ, அரசனையோ, மக்களுள் சிறந்தவரையோ பாட்டுடைத் தலைவானகாகக் கொண்டு அவர்கள வீதியில் உலா வரும்போது ஏழு பருவத்தைச் சேர்ந்த பெண்களும் காதல் கொள்வதாய்க் கலிவெண்பாவால் பாடப்படுவது “உலா” ஆகும்.

39. பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக.

(அ) நீதான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்

(ஆ) நீதான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்

(இ) நீதான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்

(ஈ) நீதான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்

விடை மற்றும் விளக்கம்

(ஆ) நீதான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்

40. பருப்பு உள்ளதா? – இது எவ்வகை வினா?

(அ) கொளல் வினா

(ஆ) கொடை வினா

(இ) ஐய வினா

(ஈ) ஏவல் வினா

விடை மற்றும் விளக்கம்

(அ) கொளல் வினா

விளக்கம்:

பொருள் வாங்கும் பொருட்டு கேட்பது கொளல் வினாவாகும்.

இல்லாதவர்க்கு கொடுக்கும் பொருட்டு கேட்பது கொடை வினாவாகும்.

ஒரு வேலையை முடிக்கும் பொருட்டு கேட்பது ஏவல் வினாவாகும்.

சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கேட்பது ஐயவினாவாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!